78. குருகாம் வயிரமாம் - பாடல் 6

மூவாத மேனியான்
78. குருகாம் வயிரமாம் - பாடல் 6

பாடல்: 6

மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
          மூவாத மேனி முக்கண்ணினானாம்
சீலனாம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வனாம்
          செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்கனாகும்
          மன்றாடியாம் வானோர் தங்கட்கெல்லாம்
காலனாம் காலனைக் காய்ந்தானாகும்
         கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

மூலன்=அனைத்துப் பொருட்களுக்கும் மூலமானவன். மூவாத மேனியான் என்று அழைப்பதன் மூலம், சிவபிரானின் மூப்படையாத தன்மையும், அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் சிவபிரான் இருக்கும் தன்மையும் உணர்த்தப் பட்டுள்ளன.  

மாலன்=திருமாலை தனது உடலில் ஒரு பாகமாக உடையவன். பல திருமுறைப் பாடல்களில் சிவபிரான், திருமாலைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்ற செய்தி குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில் திருமால் மற்றும் உமையம்மை இருவரையும், தனது உடலில் பாகமாகக் கொண்டவன் சிவபெருமான் என்று கூறப்படுகின்றது. இந்த குறிப்பு நமக்கு தில்லைத் தலத்தின் மீது அருளிய செஞ்சடைக் கற்றை என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலை நினைவூட்டும். திருமாலை பாகமாக உடைய மூர்த்தம் அரியர்த்தர், உமை அம்மையை பாகமாக உடைய மூர்த்தம் அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கப்படும்.

பையரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி
மையரிக் கண்ணியாளும் மாலும் ஓர் பாகமாகிச்
செய் எரித் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே 

மேலைக் காட்டுப்பள்ளி என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (பதிக எண்: 1.05) முதல் பாடலில் சம்பந்தர் திருமாலையும், உமை அம்மையையும் சிவபெருமான் தனது உடலில் பாகமாக ஏற்றுக்கொண்டதை குறிப்பிடுகின்றார். செய்=வயல்; நீர்வளம் நிறைந்த வயல்களில் துள்ளிக் குதித்து விளையாடும் மீன்கள் படுவதால் மலர்களில் இருந்து தேன் உதிர்வதாக சம்பந்தர் கூறுகின்றார். அவ்வாறு உதிரும் தேனின் மணமும், கைக்கெட்டும் தூரத்தில் பழுத்து முதிர்ந்த வாழைக் கனிகளின் மணமும் கலந்து வீசும் தலம், என்று தலத்தின் நீர்வளமும் நிலவளமும் குறிப்பிடப்படுகின்றது.  சுட்டெரிக்கும் தன்மை கொண்ட கொடிய விடம் என்பதால் அழல் வாய் என்று கூறுகின்றார், பணைத்தோளி=மூங்கில் போன்று அழகான தோள்களை உடைய உமையம்மை.

செய் அருகே புனல் பாய ஓங்கி
         செங்கயல் பாயச்சில மலர்த்தேன்
கை அருகே கனி வாழை ஈன்று
         கானல் எல்லாம் கமழ் காட்டுப்பள்ளி
பை அருகே அழல் வாய் ஐவாய்
         பாம்பணையான் பணைத்தோளி பாகம்
மெய் அருகே உடையானை உள்கி
        விண்டவர் ஏறுவர் மேல் உலகே

பொழிப்புரை:

அனைத்துப் பொருட்களுக்கும் மூலமாக விளங்குபவனும், எல்லாப் பொருட்களுக்கும் முன்னே தோன்றியவனாகவும் எல்லாப் பொருட்களையும் கடந்தவனாகவும் இருப்பவன் சிவபெருமான்; அவன் மூப்படையாத திருமேனியை உடையவன்; மூன்று கண்களைக் கொண்டவன்; நல்ல குணங்களுக்கு இருப்பிடமாக உள்ளவன்; தன்னை அடைந்தவர்களின் துயர் தீர்க்கும் செல்வனாக விளங்குபவன்; சூரியன் முதலான சுடர்களுக்கு ஒளி வழங்குபவன்; திருமாலுக்கும் உமை அம்மைக்கும் தனது உடலின் பாகத்தை வழங்கியவன்; மன்றங்களில் கூத்தாடுபவன்; வானோர்களுக்கு இறுதிக் காலத்தை வரையறுக்கும் கூற்றுவனையும் கோபித்து உதைத்தவன்; இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான் தனது அடியார்களுக்கு கண்ணாக இருந்து வழிகாட்டுகின்றான்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com