78. குருகாம் வயிரமாம் - பாடல் 7

புகழினைப் பாடாத
78. குருகாம் வயிரமாம் - பாடல் 7

பாடல்: 7

அரை சேர் அரவனாம் ஆலத்தானாம்
         ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரை சேர் திருமுடித் திங்களானாம்
        தீவினை நாசன் என் சிந்தையானாம்
உரை சேர் உலகத்தார் உள்ளானுமாம்
        உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரை சேர் கடல் நஞ்சை உண்டானாகும்
       கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

அரை=இடுப்பு; அரவம்=பாம்பு; திரை=அலைகள்; இங்கே அலைகள் வீசும் கங்கை நதியைக் குறிக்கும்; அண்ட வானோர்=வானோர்கள் வாழும் உலகம்; உரை சேர் உலகத்தார்=பல விதமான சொற்களைப் பேசும் உலகத்தவர்; சிவபெருமானின் புகழைத் தவிர்த்து மற்றைய சொற்களைப் பேசும் மாந்தர்கள்; இறைவன் அனைத்து உயிர்களின் உடனாகவும் இருந்து காக்கின்றான். நாத்தழும்பேற நாத்திகவாதம் பேசும் மனிதர்களின் உள்ளத்திலும் இறைவன் இருக்கின்றான். ஆனால் அவர்கள், இறைவனைப் பற்றி சிந்திக்காத காரணத்தால் அவர்களால் இறைவன் இருப்பதை உணரமுடியாது. இதனையே மணிவாசகர் ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியான் என்று திருவாசகத்தில் குறிப்பிடுகின்றார். 

இந்த பாடலில் சிவபெருமானை ஆதிரை நாளான் என்று குறிப்பிடுகின்றார். மார்கழி மாதத்து ஆதிரைத் திருநாளும், பங்குனி மாதத்து உத்திரத் திருநாளும் மிகவும் சிறப்பாக திருவாரூரில் கொண்டாடப்படும். ஆதிரை, சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப் படுகின்றது. ஆதிரை நாளின் சிறப்பினை விளக்கும் ஒரு பதிகம், அப்பர் பெருமானால் அருளப்பட்டுள்ளது. (பதிக எண்: 4.21)

பொழிப்புரை:

கருகாவூர் எந்தையாகிய எம்பெருமான், பாம்பினை இடையில் அணிந்தவன்; விடத்தை உண்டவன்: ஆதிரை எனப்படும் நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டவன்; விண்ணுலகத்தில் இருந்து கீழே இறங்கி வந்த, அலைகள் நிறைந்த கங்கை நதியையும், சந்திரனையும் தனது அழகிய சடையில் சூடியவன்; எனது தீவினைகளைப் போக்கி எனது உள்ளத்தில் குடி கொண்டுள்ளவன்; அவனது புகழினைப் பாடாத மாந்தர்கள் உட்பட, உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் உள்ளத்திலும் நிறைந்து நிற்பவன்; உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவன்; உலகுக்கு எல்லையாகவும், எப்போதும் ஆரவாரம் இடும் அலைகள் நிறைந்த கடலினில் தோன்றிய நஞ்சினை உண்டவன். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான், அவனது அடியார்களுக்கு கண் போன்று வழிகாட்டுபவனாக உள்ளான்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com