75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 4 

அன்பினைச் சுருக்குகின்ற
75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 4 

பாடல் 4

நில்லாக்  குரம்பை நிலையாக் கருதி இந் நீள் நிலத்தில்
                                                                                                   ஒன்று
அல்லாக் குழி வீழ்ந்து அயர்வு உறுவேனை வந்து ஆண்டு
                                                                                                   கொண்டாய்
வில்லேர் புருவத்து உமையாள் கணவா விடில் கெடுவேன்
செல்வா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

விளக்கம்:

குரம்பை=உடல்; வில்லேர்=வில்லினை ஒத்த; அல்லாக்குழி=ஒன்றுக்கும் பயனில்லாத வினைக்குழி. முக்திக்கு வழி வகுக்காத பரசமயக் குழியாக சமண மதம் என்று பொருள் கூறுவதுண்டு. சிவபிரானே நீ என்னை விட்டுவிட்டால் நான் கெட்டுவிடுவேன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுவதைப் போல் திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் (பாடல் 23) பாடலில் மணிவாசகர் கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் உணரலாம். உலகியலில் பெற்ற இன்பங்களால், மேலும் மேலும் தவறுகளைச் செய்து, இறைவன் பால் கொண்டுள்ள அன்பினைச் சுருக்குகின்ற அடியேனை நீ விட்டுவிட்டால் நான் கெட்டுவிடுவேன் என்று இங்கே கூறுகின்றார். தனது வாழ்க்கைக்கு காரணமாக உள்ள முழுமுதற் பொருளே என்று இறைவனை அழைத்து, தன்னைத் தாங்குவார் வேறு எவரும் இல்லாததால், இறைவன் சிவபிரான் கைவிட்டால் தான் அழிந்து விடுவேன் என்று இறைவன் தன்னை தாங்கவேண்டிய அவசியத்தை இங்கே மணிவாசகர் கூறுகின்றார். 

பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின்
வெற்றடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
மற்று அடியேன் தன்னை தாங்குநர் இல்லை என் வாழ்முதலே
உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே   

பொழிப்புரை:

வில் போன்று வளைந்த புருவத்தைக் கொண்ட உமையம்மையின் கணவரே, செல்வனே, திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே, நிலையில்லாத இந்த உடலை நிலையெனக் கருதி, நீண்ட இந்த உலகத்திலே பல துன்பக்குழிகளில் ஆழ்ந்து சோர்ந்து இருக்கும் என்னை வந்து ஆண்டுகொண்டவனே, நீ என்னை கைவிட்டால் நான் அழிந்துவிடுவேன், எனவே நீ என்னை கைவிடாமல் காப்பாயாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com