76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 4

புனிதமான சொற்களை
76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 4

பாடல்  4

வில்லருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்தாகி
        விரிசடை மேல் அருவி வைத்தார்
கல்லருளி வரி சிலையா வைத்தார் ஊராக்
        கயிலாய மலையா வைத்தார் கடவூர் வைத்தார்
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார்
       சுடு சுடலைப் பொடி வைத்தார் துறவி வைத்தார் 
நல்லருளால் திருவடி என் தலை மேல் வைத்தார்
      நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:

கல்=மலை, இங்கே மேருமலை குறிக்கப்படுகின்றது. அருவி=கங்கை நதி; பெண்களின் வளைந்த புருவத்தை வில்லினுக்கு ஒப்பிடுவது இலக்கிய மரபு. ஒருத்தி என்பது இங்கே பார்வதி தேவியைக் குறிக்கும். பார்வதி தேவியின் புருவத்திற்கு உவமையாக வில் கூறப்படுவதால் வில்லுக்கு பெருமை சேர்கின்றது என்ற கருத்தினை மனதில் கொண்டு, வில்லுக்கு அருளியதாக இங்கே குறிப்பிடப்படுகின்றது.  

பொழிப்புரை:

தனது புருவத்திற்கு உவமையாக சொல்லப்படுவதால், வில்லிற்கு அருள் புரிந்த பார்வதி தேவியை தனது உடலின் ஒரு பாகமாக வைத்துக் கொண்டவர் சிவபெருமான் ஆவார்; அவர் தனது விரிந்த சடையில் கங்கையைத் தாங்கியவர்; மேரு மலைக்கு அருள் புரிந்து அதனை வில்லாக வளைத்துக் கொண்டவர்; கயிலாய மலையை தனது இருப்பிடமாகவும், திருக்கடவூரினை தனது ஊராகவும் வைத்துக்கொண்டவர்; புனிதமான சொற்களைக் கொண்ட வேதத்தினை, சனகர் முதலான முனிவர்களுக்கு அருளி அவர்களுக்கு அறத்தினை உணர்த்தியவர்; சுடுகாட்டின் சாம்பலைப் பூசியவர்; பக்குவப்பட்ட உயிர்களை துறவு நிலை மேற்கொள்ள வைத்தவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபெருமான் பேரருள் கூர்ந்து தனது திருவடியினை எனது தலை மேல் வைத்தமையால், அவர் எனக்கு மிகவும் நல்லவராக உள்ளார்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com