76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 8

வலிமை கொண்ட
76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 8

பாடல்  8
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார்
          குருமணி சேர் அரவு வைத்தார் கோலம் வைத்தார்
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
          உண்டருளி விடம் வைத்தார் எண்தோள் வைத்தார்
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார்
         நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இந்நாள்  
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார்
         நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே


விளக்கம்:

குலங்கள்=கூட்டங்கள்; உலம் கிளரும்= திரண்ட கல் போல் உயர்கின்ற, பாற்கடல் கடையப்பட்ட போது கயிறாக பயன்பட்ட வாசுகிப் பாம்பின் உருவத்திற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது. அனிலம்=காற்று; மிசை=மேல்; 

பொழிப்புரை:
இந்த உலகத்தில் பல மலைகளையும் கடல்களையும் வைத்தவர் சிவபெருமான்; இரத்தினங்களை உடைய பாம்பினை தனது உடலில் வைத்தவர்; பிக்ஷாடனர், காபாலி, அர்த்தநாரி, தக்ஷிணாமூர்த்தி, பாசுபதர் போன்ற பல வேடங்களை கொண்டவர்; திரண்ட கல் போன்று வலிமை கொண்ட வாசுகிப் பாம்பின் உச்சியிலிருந்து வெளிப்பட்ட விடத்தை உண்டு, உலகினையும் அனைத்து உயிர்களையும் காத்து அருளியவர்; எட்டு தோள்களைக் கொண்டுள்ளவர்; நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை அமைத்தவர், நான் சத்திமுற்றத்தில் விடுத்த வேண்டுகோளை நினைவில் வைத்துக் கொண்டு, நலங்கள் பல அருளும் தந்து திருவடியை எனது தலை மேல் வைத்த சிவபெருமான் மிகவும் நல்லவர் ஆவார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com