77. அட்டுமின் இல்பலி - பாடல் 1

பிச்சைப் பாத்திரம் ஏந்தி
77. அட்டுமின் இல்பலி - பாடல் 1

முன்னுரை:
சிவபெருமான் தனக்குத் திருவடி தீட்சை தந்த நல்லூர் தலத்திற்கு இரண்டாவது முறையாக அப்பர் பிரான் சென்றார். தான் வேண்டியதற்கு ஏற்ப, தனது தலையின் மீது தனது திருவடிகளை வைத்த சிவபெருமான் பால் ஆராத காதல் கொண்டு பொங்கிய அன்போடு போற்றி இசைத்த பதிகம் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் இந்த பதிகத்தினை போற்றிச் சொல்கின்றார். 

    அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது
    பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப்
                                                                                       பணி செயும் நாள்
    தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு 
    செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார்
 

பல நாட்கள் தங்கியிருந்து பல பதிகங்கள் அப்பர் பிரான் பாடி அருளினார் என்று கூறினாலும், இரண்டாவது முறையாக இந்த தலம் வந்தபோது அருளிய பதிகங்களில் இந்த ஒரு பதிகம் தான் நமக்கு கிடைத்துள்ளது. தான் இறைவன் பால் கொண்டிருந்த அன்பினை வெளிப்படுத்தும் வண்ணம், தலைவனைப் பிரிந்து இருக்கும் காதலியாக தன்னை உருவகித்துக் கொண்டு அப்பர் பிரான், அகத்துறைப் பாடலாக இந்த பதிகத்தை வழங்கி உள்ளார். தலைவனை பல நாட்களாக பிரிந்திருந்த தலைவி, தலைவனைத் தான் கனவில் கண்டதையும், கனவு கண்ட பின்னர் தனது பிரிவுத் துயரம் அதிகமாகவே, தூக்கம் இழந்து அதன் மூலம் கனவினை இழந்த தன்மையைத் தனது தோழியிடம் கூறுவதாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம்.   

மேற்கண்ட பெரியபுராணப் பாடலில், தங்கு பெரும் காதலினால், திருவாரூர்ப் பெருமானை அப்பர் பிரான் தொழ நினைந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார். திருவாரூர்ப் பெருமானைக் கண்டு வழிபடுவதே தனது கருத்தாக இருந்ததாக அப்பர் பிரான் ஒரு பதிகத்தின் முதல் பாடலில் கூறியுள்ளார். அப்பர் பிரான் அவ்வாறு வெளிப்படுத்திய ஆர்வத்தைத் தான் இங்கே சேக்கிழார் குறிப்பிடுகின்றார். சிவபிரானைக் கண்டு வணங்கி, அவர் மீது பதிகங்கள் புனைந்து வாழ்வதே தனது  வாழ்வின் நோக்கமாகக் கொண்டு அவரது திருப்பாதங்களை நினைக்கும் தனது மனத்தினுள் இருக்கும் இறைவன் வெளியே போக முடியாது என்று தனது அன்பினால் இறைவனைக் கட்டி வைத்திருக்கும் தன்மையை வெளிப்படுத்தும் பாடல் இது. (நான்காம் திருமுறை பதிகம் எண் 20  முதல் பாடல்.)  

    காண்டலே கருத்தாய் நினைந்து இருந்தேன் மனம்
                                                                             புகுந்தாய் கழலடி
    பூண்டு கொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோ    
    ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி
                                                                            வான் இளம் மதி
    தீண்டி வந்து உலவும் திருவாரூர் அம்மானே

பாடல் 1:

அட்டுமின் இல்பலி என்று என் அகம் கடைதோறும் வந்து
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்
                                                                                              கொலோ
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோளரவும்
நட்ட நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம் கொண்டவரே

விளக்கம்:

அட்டுமின்=இடுமின்; கடை=முற்றம், முன் வாயில்: வளை கொள்ளுதல்=சிவபிரானுக்கு பலியிட வந்த பெண்கள், அவர் மீது தாங்கள் கொண்ட காதல்  கூடாத காரணத்தால், உடல் இளைத்து கைகள் மெலிய, தங்களது கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்: அந்த நிலைக்கு சிவபெருமானே காரணம் என்பதால் அவர் வளையல்கள் கொண்டதாக கூறுதல், சங்க இலக்கியங்களின் மரபை பின்பற்றியது.  மட்டு=கள், தேன்; மட்டவிழும் குழலார்=தேன் சிந்தும் நறுமணம் மிக்க புதிய மலர்களை கூந்தலில் அணிந்துள்ள மகளிர்; கொட்டிய பாணி=ஒலிக்கப்பட்ட தாளங்கள்; கோளரவு=கொலைத் தொழிலை புரியும் பாம்பு;

கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி சிவபெருமான் தனது இல்லம் வந்ததாக, இந்த பதிகத்தின் பல பாடல்களில் கற்பனை செய்யும் அப்பர்நாயகி, முதல் பாடலில் தாருகாவனத்து மகளிர் இல்லங்களுக்கு சிவபெருமான் பிச்சை ஏற்றுச் சென்றதை நினைத்துப் பார்க்கின்றாள். தங்களது நிலையினை மறந்து, சிவபெருமானின் பின்னே தாருகவனத்து மகளிர் சென்ற காட்சி அவளது மனக்கண்ணில் விரிகின்றது. ஆனால், ஏன் அவ்வாறு நடந்தது என்று அவளுக்கு புலப்படவில்லை.    
 
பொழிப்புரை:
ஒலிக்கும் தாளங்களுக்கு ஏற்ப, நடனம் ஆடும் போது எடுத்த பாதங்களையும், கொலைத் தொழிலைச் செய்யும் பாம்பினை அணிகலனாகவும், உடையவராய், எப்போதும் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் பெருமான், நல்லூரில் உறைகின்றார். தேன் ஒழுகும் நறுமணம் மிகுந்த புதிய மலர்களைத் தங்களது கூந்தலில் சூடிய தாருகாவனத்து மகளிர்களின் இல்லங்கள் தோறும், பிச்சை கேட்டுச் சென்றதன் காரணம் யாதோ? நான் அறியேன். சிவபெருமானை நினைந்து, தாருகாவனத்து மகளிர் தங்களது கைகளில் இருந்த வளையல்கள் கழன்று விழுமாறு உடல் மெலிய வருத்தமுற்றது ஏனோ?     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com