77. அட்டுமின் இல்பலி - பாடல் 2

அழகிய வடிவத்துடன்
77. அட்டுமின் இல்பலி - பாடல் 2

பாடல் 2:

    பெண்ணிட்டம் பண்டையது அன்று இவை பெய்பலிக்கு
                                                                               என்று உழல்வார்
    நண்ணிட்டு வந்து மனை புகுந்தார் நல்லூர் அகத்தே
    பண்ணிட்ட பாடலர் ஆடலராய்ப் பற்று நோக்கி நின்று
    கண்ணிட்டுப் போயிற்றுக் காரணம் உண்டு கறைக்
                                                                              கண்டரே

விளக்கம்:

தாருகாவனத்து மகளிர் இல்லங்களுக்குச் சென்றதன் காரணம் அறியேன் என்று கூறும் அப்பர் நாயகி, நல்லூரில் தனது இல்லத்திற்கு பிச்சை ஏற்க வந்த போது, கண்ணால் சாடை காட்டிச் சென்றதற்கு காரணம் இருப்பதாக கூறுகின்றாள். தாருகாவனம் சென்ற போது பிச்சைப் பெருமான் வேடம் தரித்து (இடுப்பில் கோவணமும், உடலில் பாம்புகளை அணிகளாகத் தரித்துச் சென்றதாக கூறப்படுகின்றது. அவ்வாறு பாம்புடன் சென்றால், பிச்சையிட வரும் பெண்மணிகள் பயம் கொள்வர் எனக் கருதி அத்தகைய வேடத்தில் நல்லூர் வரவில்லை என்று அப்பர் நாயகி கற்பனை செய்கின்றாள். சிவபெருமான் வந்ததாக கூறுவதே கற்பனை தான். தாருகாவனம் சென்ற போது சிவபிரான் யாரையும் தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு அழைக்கவில்லை. அவரது சுந்தர வேடத்தில் மயங்கி, தாருகாவனத்து பெண்மணிகள், தாங்கள் செய்து கொண்டிருந்த செயல்களை விட்டுவிட்டு அவரைப் பின் தொடர்ந்ததாக புராணம் கூறுகின்றது.  

கண்ணிட்டுப் போதல்=கண்ணால் சாடை காட்டிச் செல்லுதல்; கறைக்கண்டர்=நீல நிறத்தை கழுத்தினில் கொண்ட நீலகண்டர்;   

பொழிப்புரை:

நல்லூரில் தன்னைக் காணும் பெண்கள், தன் மீது ஆசை கொள்ளும்படி அழகிய வடிவத்துடன் வந்த சிவபிரான், தான் தற்போது கொண்டுள்ள வடிவம், பண்டைய நாளில் தாருகாவனம் சென்ற போது எடுத்த வடிவம் அல்ல, இன்று பிச்சைக்காக எடுத்தது என்று கூறிக் கொண்டு, பல இல்லங்கள் தோறும் திரியும் சிவபிரான், நல்லூரில் எனது இல்லத்திற்கு அருகில் வருகில் வந்தார்; பின்னர் எனது இல்லத்தில் புகுந்தார்; பண்ணோடு கூடிய பாடல்களைப் பாடியவாறு ஆடிக்கொண்டே வந்த சிவபெருமான், சிறிது நேரம் நின்று, எங்களை நோக்கி கண்ணால் சாடை காட்டிச் சென்றதற்கு காரணம் உள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com