77. அட்டுமின் இல்பலி - பாடல் 11

பொங்கிய அன்போடு
77. அட்டுமின் இல்பலி - பாடல் 11

பாடல் 11:

செல்லேர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர் காவலனைக்
கல்லார் முடியொடு தோள் இறச் செற்ற கழலடியான்
நல்லூர் இருந்த ;பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே

விளக்கம்:

செல்லேர் கொடியன்=இடியைப் போன்று ஒலிக்கும் எருதினை கொடியில் கொண்டவன், சிவபிரான்: பொங்கிய அன்போடு திளைத்துப் போற்றி இசைத்த பாடல் என்று சேக்கிழார் பெருமான் கூறியபடி, சிவபிரான் பால் தனக்கு இருந்த எல்லையில்லாத அன்பினை வெளிப்படுத்திய இந்த பதிகத்திற்கு, பத்து பாடல்கள் என்ற எல்லை கூடாது என்று அப்பர் பிரான் நினைத்தார் போலும். பதினோரு பாடல்கள் கொண்ட பதிகமாக இதனை அருளியுள்ளார்.

இறைவனின் திருக்கோயில் அந்நாள் வரை செல்லாத கடையனாகத் தன்னை அப்பர் பிரான் இங்கே கூறிக்கொள்கின்றார். அப்பர் பிரான் இறைவன் பால் கொண்டிருந்த அன்பினை நாம் அனைவரும் அறிவோம். எனவே திருக்கோயில் செல்லாத கடையனாக, உண்மையில் அவர் தன்னை குறிப்பிடவில்லை என்பது நமக்கு புலனாகும். இதே பாடலில் தவறு செய்த இராவணனுக்குத் தண்டனை அளித்த சிவபிரான், நம் அனைவரையும் ஆட்கொள்பவன் என்று கூறி, இராவணனை ஆட்கொண்டதை குறிப்பால் உணர்த்தும் அப்பர் பிரான், அதே போல் நம்மையும் ஆட்கொள்வான் என்று நம்பிக்கை அளிக்கின்றார். இந்நாள் வரை திருக்கோயில் செல்லாத கடையனாக நாம் இருந்திருந்தாலும், இனிமேல் நாம் இறைவனை நினைத்தால், அவன் நமக்கு அருளுவான் என்று ஆறுதல் கூறி, நம்மை இறைவழிச் செலுத்தும் பாடல். இவ்வாறு நமக்கு வழிகாட்டுவதற்காகத் தான் ஒரு பாடல் அதிகமாக அளித்தாரோ என்றும் நமக்குத் தோன்றுகின்றது.  

பொழிப்புரை:

இடி போன்று முழங்கக்கூடிய எருதினைத் தனது கொடியில் கொண்ட சிவபிரான் உறையும் கோயில் சென்று அவனை வழிபடும் குணம் இல்லாத கடையேன் நான். இலங்கை நகரம் மற்றவர் புக முடியாதபடி மதில்கள் கொண்டது. இவ்வாறு பலம் வாய்ந்த இலங்கைக்கு மன்னனாகிய இராவணனின், கயிலை மலையை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, அந்த அரக்கனது உறுதி உடைய தோள்களும் தலைகளும் நெரியுமாறு, வெற்றி கொண்ட திருப்பாதங்களை உடைய சிவபிரான் நல்லூர் தலத்தில் உறைகின்றான். அவன் அல்லவா நம் அனைவரையும் ஆட்கொள்பவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com