74. நல்லர் நல்லதோர் - பாடல் 5

செருக்குடன் செய்யப்பட்ட
74. நல்லர் நல்லதோர் - பாடல் 5


பாடல் 5:
    பண்டொர் நாள் இகழ்வான் பழித் தக்கனார்
    கொண்ட வேள்விக் குமண்டை அது கெட
    தண்ட மா விதாதாவின் தலை கொண்ட
    செண்டர் போல் திரு நாகேச்சரவரே

விளக்கம்:
செண்டர்=செண்டு ஆயுதத்தை உடையவர்; தண்டம்=தண்டனையாக; விதாதா=வேள்வித் தலைவன்; குமண்டை=செருக்குடன் செய்யப்பட்ட செயல்; வான்பழி=மிகுந்த பழி; தக்கனுக்கு ஆர் விகுதி, அவனை இழிவு செய்யும் நோக்கத்துடன் கொடுக்கப் பட்டுள்ளது. தக்ஷன் ,முதலான பாம்புகள் வணங்கிய பெருமானைக் கண்ட அப்பர் பிரானுக்கு, தக்கனும் தக்கன் செய்த வேள்வியை பெருமான் அழித்ததும் நினைவுக்கு வந்தன போலும். அந்த நிகழ்ச்சியை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.  நல்லர் என்று தொடங்கும் பதிகத்தில், தவறான முன்மாதிரியாக அமையும் பொருட்டு செய்யப்பட்ட வேள்வியைத் தடுத்து நிறுத்தி, அத்தகைய வேள்வியினை நடத்த துணிந்தவர்களுக்குத் தகுந்த தண்டனை கொடுத்ததன் மூலம், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள முறைகளுக்கு விரோதமாக தவறான முறையில் செய்யப்படும் வேள்விகளைத் தவிர்த்து உலகத்திற்கு நன்மை புரிந்த செயல் மிகவும் பொருத்தமாக இங்கே சொல்லப் படுகின்றது. 

பொழிப்புரை:
பண்டைய நாளில் ஒரு சமயம், பெருமானை இழிவு படுத்தும் நோக்கத்துடன், பெருமானை புறக்கணித்து முன்மாதிரியாக வேள்வி செய்வேன் என்று வேள்வி செய்யத் துணிந்து தனக்கு தீராப் பழியைத் தேடிக் கொண்டவன் தக்கன். சிவபெருமானை விடவும் தான் பெரியவன் என்று தவறாக கருதி செருக்குடன் தக்கன் செய்த யாகத்தை அழித்த பெருமான், அந்த யாகம் செய்வதற்கு தக்கனுக்குத் துணையாக நின்ற வேள்வித் தலைவனது தலையையும் அறுத்தவர் சிவபெருமான். அவர் செண்டு எனப்படும் ஆயுதத்தை உடையவர் ஆவார். அத்தகைய வல்லமை படைத்த பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com