74. நல்லர் நல்லதோர் - பாடல் 10

பாவங்களைத் தொலைக்க
74. நல்லர் நல்லதோர் - பாடல் 10

பாடல் 10: 
    தூர்த்தன் தோள் முடி தாளும் தொலையவே
    சேர்த்தினார் திருப்பாதத்து ஒரு விரல்
    ஆர்த்து வந்து உலகத்தவர் ஆடிடும்
    தீர்த்தர் போல் திரு நாகேச்சரவரே

விளக்கம்:
தூர்த்தன்=தீய ஒழுக்கம் உடையவன், இங்கே அரக்கன் இராவணனை குறிக்கின்றது; தொலைய=அழிய; ஆர்த்து=ஆரவாரம் செய்து; ஆடிடும்=நீராடும்; வினைகளைத் தீர்ப்பவன் என்று பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிட்ட அப்பர் பிரான், அந்த உண்மையை உணர்ந்த உலகத்தவர் பலரும், இந்த தலம் வந்தடைந்து தங்களை தூய்மைப் படுத்திக் கொள்கின்றார்கள் என்பதை பதிகத்தின் கடைப் பாடலில் உணர்த்துகின்றார். 

பொழிப்புரை:
தீய ஒழுக்கம் கொண்டவனாக, கயிலை மலையைப் பேர்த்தெடுக்கத் துணிந்த அரக்கன் இராவணனின் கால்களும் பத்து தலைகளும் இருபது தோள்களும் அழியுமாறு, கயிலை மலையின் மீது தனது கால் பெருவிரலை சேர்த்து சிவபெருமான் அழுத்தினார். தங்களது பாவங்களைத் தொலைப்பதற்காக, அடியார்கள் மிகுந்த ஆரவாரத்துடன் நீராடும் புனித நீர்நிலைகளை போன்று தன்னுடன் வந்து சேரும் அடியார்களின் பாவங்களைத் தீர்க்கும் பெருமான் நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார்.

முடிவுரை:
பலவிதமான நன்மைகள் செய்யும் பெருமான் என்று உணர்த்தும் வண்ணம் நல்லர் என்று பதிகத்தைத் தொடங்கும் அப்பர் பிரான், பதிகம் நெடுகிலும் பெருமான் நமக்குச் செய்யும் நன்மைகளை உணர்த்துகின்றார். முதல் பாடலில் நம்மைப் பீடித்திருக்கும் வலிமையான வினைகளைத் தீர்ப்பவர் என்றும், உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பாசத்தை நீக்குவதற்கு உதவி செய்பவர் என்று இரண்டாவது பாடலிலும், பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த விடத்தினை உண்டு அனைவரையும் காத்தவர் என்று மூன்றாவது பாடலிலும், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று உலகத்தவர்க்கு உணர்த்தும் முகமாக தக்கனது வேள்வியை அழித்தவர் என்று ஐந்தாவது பாடலிலும், நமச்சிவாய மந்திரத்தை தியானிக்கும் அடியார்களுக்கு தேன் போன்று இனிமையானவர் என்று ஏழாவது பாடலிலும், வினைகளை நீக்கி அடியார்களின் மனதினைக் குளிரச் செய்பவர் என்று ஒன்பதாவது பாடலிலும், தன்னில் மூழ்கி நீராடும் புனித நீர்நிலைகள் போன்று, தன்னை வந்து அணையும் அடியார்களின் பாவங்களைத் தீர்ப்பவர் என்று பத்தாவது பாடலிலும் அப்பர் பிரான் கூறுகின்றார்.

நல்லாரைச் சென்றடைந்த பாம்பு நல்ல குணம் கொண்ட பாம்பாக மாறியது போன்று, வெறியுடன் தன்னை நோக்கி வந்த மான்கன்றின் குணத்தினை மாற்றிய பெருமான் என்று பதிகத்தின் ஏழாவது பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பல விதமான நன்மைகள் செய்யும் பெருமானின் பெருமையை உணர்ந்த சந்திரன் சூரியன் ஆகியோர் வழிபடுவதை நான்காவது பாடலில் குறிப்பிட்டு, நம்மையும் பெருமானை வணங்கி பலன் அடையுமாறு தூண்டும் அப்பர் பிரானின் பாடல்களைப் பாடி, இறைவனை வணங்கி வாழ்வினில் உய்வினை அடைவோமாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com