75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 2

75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 2

பிணியினைத் தீர்ப்பவனே

பாடல் 2 

காய்ந்தாய் அனங்கன் உடலம் பொடிபடக் காலனை முன்
பாய்ந்தாய் உயிர் செகப் பாதம் பணிவார் தம் பல் பிறவி
ஆய்ந்தாய்ந்து அறுப்பாய் அடியேற்கு அருளாய் உன் அன்பர் சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

விளக்கம்:

அனங்கன்=மன்மதன். அங்கம் ஏதும் இல்லாதவன். வடமொழிச் சொல். காய்தல்=எரித்தல்; செக=பிரிய; ஆய்ந்தாய்ந்து அறுத்தல்=அடியார்கள் பல்வேறு பிறவிகளிலும் ஈட்டிய வினைகள் அனைத்தையும் ஒருசேர அழித்து பிறவிப் பிணியினை அடியோடு நீக்குதல். 

பொழிப்புரை:

தவத்தில் ஆழ்ந்திருந்த உனது தவத்தினைக் கலைக்க முயன்ற மன்மதனின் உடலினை உனது நெற்றிக் கண்ணினால் விழித்து அவனது உடல் பொடியாகச் செய்தவனே, சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைப் பறிக்க வந்த காலனின் உயிரினைப் பாய்ந்து காலால் உதைத்து நீக்கியவனே, உனது பாதங்களைப் பணியும் அடியார்களின் வினைத் தொகுப்புக்களை ஆராய்ந்து அடியோடு அறுத்து அவர்களின் பிறவிப் பிணியினைத் தீர்ப்பவனே, அன்பர்களின் உள்ளத்தை இருப்பிடமாகக் கொண்டவனே, திருச்சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்தே, அடியேனாகிய எனக்கு அருளாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com