94. பூவார் கொன்றை - பாடல் 3

திருஞான சம்பந்தர்
94. பூவார் கொன்றை - பாடல் 3

   
பாடல் 3:

  
 தேனை வென்ற மொழியாள் ஒரு பாகம்
    கான மான் கைக் கொண்ட காழியார்
    வானம் ஓங்கு கோயில் அவர் போலாம்
    ஆன இன்பம் ஆடும் அடிகளே

விளக்கம்:

ஆன இன்பம்=முற்றிய இன்பம்; தேனினை விடவும் இனிமையான மொழியை உடையவள் தேவி என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்கள் தேவியின் மொழி மிகவும் இனிமையாக உள்ளது என்பதை மட்டும் கூறாமல், பால், தேன், வீணையின் நாதம், குழலின் இசை, ஆகியவற்றை விடவும் இனிமையாக உள்ளது என்று உணர்த்துகின்றன. ஈங்கோய்மலையின் மீது தான் அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (முதல் திருமுறை பதிக எண்: 70) சம்பந்தர், உமையம்மையை தேன் ஒத்தன மென்மொழி மான் விழியாள் என்று குறிப்பிடுகின்றார்.  

    வானத்துயர் தண்மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடித்
    தேன் ஒத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமாக்
    கானத்து இரவில் எரி கொண்டாடும் கடவுள் உலகேத்த
    ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே

திருப்பரங்குன்றத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் திருஞான சம்பந்தர் தேன்மொழி என்று இறைவனை குறிப்பிட்டு தேன்மொழியைத் தனது உடலின் ஒரு பங்காக ஏற்றுக் கொண்டவன் பெருமான் என்று கூறுகின்றார்.
  
   அங்கம் ஓர் ஆறும் அருமறை நான்கும் அருள் செய்து 
    பொங்கு வெண்ணூலும் பொடியணி மார்பில் பொலிவித்து    
    திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்ததோர் தேன்மொழி
    பங்கினன் மேய நன்னகர் போலும் பரங்குன்றே.

திருபாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் திருஞானசம்பந்தர், தேன் சென்று பிராட்டியின் குரலில் அமர்ந்தது போன்று பிராட்டியின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது என்று கூறுகின்றார். உடலுக்கு பால் பல நன்மைகள் அளிப்பது போன்று திருநீறும் நமக்கு பல நன்மைகள் அளிக்கும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். இந்த தலத்து இறைவியின் திருநாமம் பண்மொழியம்மை என்பதாகும். இனிமையான பண் போன்ற மொழியினை உடைய அம்மையை, தேன் அமர்ந்தது போன்ற குரலினை உடையவள் என்று அழைப்பது பொருத்தம் தானே.  
  
    ஊனமர் வெண் தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும்
    தேன் அமரும் மொழி மாது சேர் திருமேனியாரும்  
    கானமரும் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக் கரை மேல்
    பால் நல நீறு அணிவாரும் பாண்டிக் கொடுமுடியாரே

திருவையாறு தலத்து இறைவனை புகழ்ந்து பாடும் பதிகத்து (4.03) பாடல் ஒன்றினில் அப்பர் பிரான் தேனைப் போன்ற இனிய மொழியினை உடைய தேவி என்று குறிப்பிடுகின்றார்.

    திங்கள் மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி
    எங்கு அருள் நல்கும் கொல் எந்தை எனக்கினி என்னா வருவேன்
    அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது
    பைங்கிளி பேடையொடாடிப் பறந்து வருவன கண்டேன்
    கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

கிளியைப் போன்று இனிமையான மழலை மொழி பேசும் உமையம்மையின் குரல், தேனினும் இனியதாக இருப்பதால் தேன் மிகவும் திகைத்து அம்மையை நோக்குவதாக அப்பர் பிரான், கரவாடும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.07.2) கூறுகின்றார். அம்மையின் குரல் வளத்தைக் கண்டு தேன் திகைத்து நிற்க, இறைவனின் மேனி நிறத்தினைக் கண்டு, பவளம் திகைத்து நிற்பதாகவும் இங்கே கூறுகின்றார். கேள்வன்=கணவன்  

    தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம்
    தான் நோக்கும் திருமேனி தழல் உருவாம் சங்கரனை
    வான் நோக்கும் வளர்மதி சேர் சடையானை வானோர்க்கும்
    ஏனோர்க்கும் பெருமானை என் மனத்தே வைத்தேனே

ஓசை ஒலி எலாம் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (6.38.4) அப்பர் பிரான் பிராட்டியை தேன் போன்ற இனிமையான சொற்களை உடைய தேவி என்று கூறுகின்றார். வானுற்ற=ஆகாயத்தை அளவளாவி நின்ற;; தேனுற்ற=தேன் கலந்தது போன்று:

    வானுற்ற மாமலைகள் ஆனாய் நீயே வடகயிலை
                          மன்னி இருந்தாய் நீயே
    ஊனுற்ற ஒளி மழுவாட் படையாய் நீயே ஒளிமதியோடு
                          அரவு புனல் வைத்தாய் நீயே
    ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி
                          என்மேல் வைத்தாய் நீயே
    தேனுற்ற சொல் மடவாள் பங்கன் நீயே திருவையாறு
                          அகலாத செம்பொன் சோதீ

வலிவலம் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.48.6) அப்பர் பிரான், பிராட்டியின் குரல் தேனைப் போன்று இனிமையானது என்று தேன்மொழி என்று கூறுகின்றார். கறுத்தவன்=கோபம் கொண்டவன், வெகுண்டவன்; நிலை=நிலையாக பாதுகாக்கும் செயல்; நிறை=இறுதி, அழிக்கும் செயல்: உலகமும், உலகத்தில் உள்ள பொருட்களும், உலகத்து உயிர்களும் தோன்றுவதற்கும், சில காலம் நிலைத்து நிற்பதற்கும், பின்னர் அழிவதற்கும் காரணமாக உள்ளவன் பெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

    நிலையவன் காண் தோற்றவன் காண் நிறையானான்
                   காண் நீரவன் காண் பாரவன் காண் ஊர் மூன்று எய்த
    சிலையவன் காண் செய்யவாய்க் கரிய கூந்தல் தேன்மொழியை
                   ஒரு பாகம் சேர்த்தினான் காண்
    கலையவன் காண் காற்றவன் காண் காலன் வீழக்
                   கறுத்தவன் காண் கயிலாயம்  என்னும் தெய்வ
    மலையவன் காண்  வானவர்கள் வணங்கி ஏத்தும்
                   வலிவலத்தான் காண் அவன் என்  மனத்துளானே   

தேனை வென்ற இன்மொழியாள் என்று பிராட்டியை திருஞான சம்பந்தர் கூறுவது சற்று சிந்திக்கத் தக்கது. பொதுவாக உவமையாக கூறப்படும் பொருள் உவமேயப் பொருளினை விடவும் மேலானதாக இருக்கும். ஆனால் பிராட்டியின் தன்மைக்கு உவமையாக கூறப்படும் பொருட்கள் எந்த விதத்திலும் பிராட்டியின் தன்மைக்கு ஈடாகாது என்பதை உணர்த்தும் வண்ணம், பிராட்டியின் தன்மை உவமானப் பொருட்களை வென்றதாக பல திருமுறைப் பாடல்கள் கூறுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வில்லினைப் போன்று வளைந்த புருவங்கள் என்று இலக்கியங்களில் கூறுவதுண்டு. சம்பந்தர், வளைவில், பொலிவில் வில்லினை வென்ற பிராட்டியின் புருவங்கள் என்று கூறும் பாடல் சோபுரம் பதிகத்தின் (1.51) நான்காவது பாடலாகும். கடை=வீட்டின் வாயில்கள்   பல இடங்களிலும் திரிந்து பிச்சை எடுப்பதை அல்லல் வாழ்க்கை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். 

    பல் இல் ஓடு கையில் ஏந்திப் பல் கடையும் பலி தேர்ந்து
    அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை கொலாம்
    வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங் கண்ணியொடும்
    தொல்லை ஊழியாகி நின்றாய் சோபுரம் மேயவனே

பிராட்டியின் புன்முறுவல் முத்தினை வென்றதாக கூறும் பாடல் ஆமாத்தூர் பதிகத்தின் (2.50) பத்தாவது பாடலாகும்.

    புத்தர் புன்சமண் பொய்ம்மொழி நூல் பிடித்தவர் துற்ற நின்னைப்
    பத்தர் பேண நின்ற பரமாய பான்மை அது என்
    முத்தை வென்ற முறுவலாள் உமை பங்கன் என்று இமையொர் பரவிடும்
    அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே

அழகினில் மூங்கிலை வென்ற தோள்களை உடைய பிராட்டி என்று சொல்லும் பாடல் திருநாரையூர் தலத்து பதிகத்தின் (1.102) முதல் பாடலாகும். 

    காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு
    தேம்புனல் சூழ்திகழ் மாமடுவில் திருநாரையூர் மேய 
    பூம்புனல் சேர் புரிபுன் சடையான் புலியின் உரி தோல் மேல்  
    பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே

பண்ணின் இன்மையை வென்ற இனிய குரலினை உடையவள் என்று அண்ணாமலை பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.69.2) திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.

    பண் தனை வென்ற இன்சொல் பாவையோர் பங்க நீல
    கண்டனே கார் கொள் கொன்றைக் கடவுளே கமலபாதா
    அண்டனே அமரர் கோவே அணி அணாமலை உளானே 
    தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமாறு சொல் இலேனே

சுந்தரர் தனது திருநாட்டுத்தொகை பொதுப் பதிகத்தில் தேனை வென்ற மொழி மடவாள் என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். கீழைவழி, கிழையம் ஆகிய வைப்புத் தலங்களின் விவரங்கள் கிடைக்கவில்லை.

    தேனை வென்ற மொழி மடவாளை ஓர் கூறனாம்
    மழலை ஏற்று மணாளன் இடம் தடமால் வரைக்
    கிழவன் கேழை வழி பழையாறு கிழையமும்
    மிழலை நாட்டு மிழலை வெண்ணிந் நாட்டு மிழலையே

பண்டைய நாளில் போட்டியில் தோற்றவர்கள் வென்றவர்களை வலம் வந்து தங்களது தோல்வியை ஒப்புக் கொள்வது பழக்கமாக இருந்தது போலும். இந்த பாடலில் அப்பர் பிரான் ஆரூர்ப் பெருமானைத் தொழுது வலம் வந்து வணங்குபவர்கள் பிறந்த பயனை அடைந்தவர்கள் என்று கூறுகின்றார். தோன்றினார் தோன்றினாரே=பிறந்தவர் பிறந்தவர்களாவர்கள். நாம் பிறந்ததன் பயன், சிவபிரானை கும்பிட்டு உய்வினை அடைதல் தானே. அந்த கருத்து தான் இங்கே கூறப்படுகின்றது.

    குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேற்கண்ணி தன்னைக்
    கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்களைக் கணங்கள் ஆர
    அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர்
    தொழல் வலம் கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே

குழலும், யாழும், தேவியின் குரலுடன் போட்டியிட முயன்று தோற்றதால், தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு தேவியை வலம் வந்ததாக, தேவார ஆசிரியர்கள் நயமாக கூறுகின்றார்கள். இவ்வாறு இவர்கள் கூறுவது நமக்கு ஆதி சங்கரரின் சிவானந்த லஹரியின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. உமையம்மைக்கு சிவபிரானின் புகழினை, அடுத்தவர் பாடக் கேட்பது மிகவும் பிடித்தமானது. அவ்வாறு ஒரு நாள், கலைவாணி சிவபிரானின் புகழினை பாடல்களாக வீணையுடன் இசைத்துப் பாடியபோது உமையம்மை, பாடலின் கருத்தில் மெய்ம்மறந்து, தனது தலையை அசைத்து, ஆஹாகாரம் (ஆஹா, ஆஹா என்று சொல்லுதல்) செய்து பாராட்டினார். அப்போது அம்மையின் குரல் இனிமையைக் கேட்ட கலைவாணி, இவ்வளவு இனிமையான குரலின் எதிரே, வீணை இசைக்க முயன்ற தனது செய்கைக்கு வெட்கம் கொண்டு, வீணையினை உரையில் இட்டு மூடிவிட்டாள் என்று சங்கரர் இந்த பாடலில் கூறுகின்றார்.  மிகவும் நயமான கற்பனை. இந்த கற்பனையை மெய்ப்பிப்பது போன்று, யாழைப் பழித்த மொழியம்மை என்ற திருநாமத்துடன் அம்மை விளங்கும் மறைக்காடு தலத்தில் உள்ள கலைவாணியின் சன்னதியில், கையில் வீணை இல்லாத கலைவாணியை நாம் காணலாம்.

        விபஞ்ச்யா காயந்தி விவிதமபதானம் பசுபதேஸ்
        த்வயா ரப்தே வக்தும் சலித சிரசா சாது வசனே 
        ததீயைர் மாதுர்யைர் ரபலபித தந்த்ரீ கலரவாம்
        நிஜாம் வீணாம் வாணிம் நிசுலயதி சோலேனே நிப்ருதம் 
         
                 
விபஞ்ச்யா=விபஞ்சி என்று அழைக்கப்படும் பிரமனின் மனைவியாகிய கலைவாணி: காயந்தி=வீணையில் இசைத்துப் பாடும்: பசுபதே=பசுபதி என்று அழைக்கப்படும் சிவபெருமானின்: விவிதம்=விதம்விதமான, பலவிதமான: அபிதானம்=திருவிளையாடல்கள்: த்வயா=உன்னால் (தேவியால்): வக்தும் ஆரப்தே=சொல்ல ஆரம்பித்த போது: சலித சிரசா=தலை அசைத்து சம்மதம் தெரிவித்தல்: வசனே=சொல்வதற்கு:  ததீயை=அதனுடைய, அத்தகைய சொல்லின்: மாதுர்யை=இனிமை: அபலபித தந்த்ரீ=வீணையின் அழகிய தந்திகள்: கலரவாம்=அவமதிப்பு அடைதல்: நிஜாம்=தன்னுடைய: வீணாம்=வீணையினை: நிசுலயதி= மூடுதல்: சோலேன=உரையினால்: நிப்ருதம்=வெளியில் தெரியாதபடி
 
பொழிப்புரை:

தேனை வெல்லும் வண்ணம் இனிமையான குரலினை உடைய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான், காட்டில் திரியும் மான் கன்றினைத் தனது கையில் ஏந்தியவராக காணப்படுகின்றார். மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நடனமாடும் பெருமானார், வானளவ உயர்ந்த கோபுரங்களை உடைய சீர்காழி நகரத்துத் திருக்கோயிலில் உறைகின்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com