104. மெய்த்தாறு சுவையும்  - பாடல் 8

குபேரனின் தலைநகர்
104. மெய்த்தாறு சுவையும்  - பாடல் 8

பாடல் 8:

    கதிரொளிய நெடுமுடி பத்து உடைய கடல் இலங்கையர்
        கோன் கண்ணும் வாயும்
    பிதிர் ஒளிய கனல் பிறங்கப் பெரும் கயிலை மலையை
        நிலை பெயர்த்த ஞான்று
    மதில் அளகைக்கு இறை முரல மலரடி ஒன்று ஊன்றி
        மறை பாட ஆங்கே
    முதிர் ஒளிய சார் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த
         பதி முதுகுன்றமே

  
விளக்கம்:

அளகை=அழகாபுரி, குபேரனின் தலைநகர்; அளகைக்கு இறை=அழகாபுரிக்கு தலைவனாகிய குபேரன்; முரல=ஒலிக்க; இராவணன் கயிலை மலையினை பேர்த்தேடுக்க முயற்சி செய்ததையும் பெருமான் தனது கால் பெருவிரலை ஊன்றி அவனை மலையின் கீழே அழுத்தியதையும் கண்ட குபேரன் அரக்கன் இராவணன் அழிந்தான் என்று நினைத்து மகிழ்ந்தான். ஒரு வழியில் குபேரன் இராவணனுக்கு தமையன் என்றாலும், அரக்கன் இராவணன் தனது அண்ணன் என்பதையும் மதிக்காமல் குபேரனுடன் போர் புரிந்து அவனை வென்று அவனது புட்பக விமானத்தை கைப்பற்றினான். எனவே தான் இராவணன் அழிந்தான் என்று எண்ணம் குபேரனுக்கு மகிழ்ச்சியை ஊட்டியது. குபேரனின் தலைநகர் அளகாபுரி. இந்த பாடலில் அளகை என்று குறிப்பிடப்படுகின்றது. குபேரன் அடைந்த மகிழ்ச்சி ஆரவாரமாக கொண்டாடப் பட்டது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. முதிரொளி=மிகுந்த ஒளி.. பிதிர்த்தல்=உதிர்தல், சிதறுதல், வெளிப்படுத்துதல்; பிறங்க= விளங்க. மலையின் கீழே அமுக்குண்ட அரக்கனுக்கு, தான் அந்த இடரிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தமையால், இறைவனிடம் அவன் வரம் ஏதும் கேட்கவில்லை. எனினும் இறைவன், அவன் ஓதிய சாம கானத்தில் மகிழ்ந்து தானே முன்வந்து அவனுக்கு பரிசாக நீண்ட வாழ்நாளையும் வாளினையும் அளித்தார் என்ற செய்தி இங்கே முன்னீந்த என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.      
 
பொழிப்புரை:

கதிரவனின் ஒளிக்கதிர்கள் போன்று ஒளிவீசும் நீண்ட முடிகளைக் கொண்ட பத்து தலைகளை உடையவனும் கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவுக்கு அரசனும் ஆகிய அரக்கன் இராவணன், தான் செல்லும் வழியில் கயிலை மலை குறுக்கே நின்றது என்று கருதி, தனது கண்களும் வாயும் ஒளிமிகுந்த தீப்பொறிகளை வெளிப்படுத்தும் வண்ணம்  மிகுந்த சினத்துடன் விளங்க, கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு மலையினை அசைத்த அன்று, பெருமான் தனது மலர் போன்று மிருதுவான கால் பெருவிரலினை கயிலாய மலையின் மீது ஊன்ற அரக்கன் மலையின் கீழே அகப்பட்டு அமுக்குண்டு வருந்தினான். அரக்கன் மலையின் கீழே அகப்பட்டு வருந்தி அழுததைக் கண்ட குபேரன், அரக்கன் இராவணன் அழிந்துபட்டான் என்ற மகிழ்ச்சியுற, அவனது தலைநகரான அளகாபுரியில் மகிழ்ச்சியின் மிகுதியால் ஆரவாரக் குரல்கள் எழுந்தன. தனது உடல் உறுப்புகள் நெருக்குண்டு வருந்திய அரக்கன் அப்போது சாமகீதம் பாட அதனைக் கேட்டு மகிழ்ந்த பெருமான், தானே முன் வந்து மிகுந்த ஒளியினை உடைய நீண்ட வாளினை அரக்கனுக்கு பரிசாக ஈந்தார். இவ்வாறு சாமகானத்தை விருப்பமுடன் கேட்கும் இறைவன் உறையும் திருக்கோயில் உள்ள தலம் முதுகுன்றமாகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com