105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 4

மயங்கும் மனம்
105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 4

பாடல் 4:

    ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்தாய
       வாழ்க்கை ஒழியத் தவம்
    மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம், திரிந்து
       மண்ணின் மயங்காது நீர்
    மூன்று மதில் எய்த மூவாச் சிலை முதல்வருக்கு இடம்
       போலும் முகில் தோய்         கொடி
    தோன்றும் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம்
       தொழுமின்களே

விளக்கம்:

ஊன்றும்=அழுந்துவிக்கும்; மான்றும்=மயங்கும்; இறப்பினுக்கு முன்னர் அனுபவிக்கும் துன்பங்களை கேடு என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் கேடு என்று உயிருக்கு கெடுதியை விளைவிக்கும் பிறவியை குறிப்பிடுகின்றார். மூவா= மூப்பு அடையாத, என்றும் நிலையாக உள்ள; தவம் செய்ய நினைக்கும் மனதினை மயங்கும் மனம் என்று சம்பந்தர் கூறுகின்றார். எளிதாக முக்திப் பேற்றினை அடையும் வழி இருக்கையில், அதனை விட்டுவிட்டு தவம் செய்ய நினைப்பதை மயங்கும் மனம் என்று கூறுகின்றார். முகில்=மேகம் 
 
பொழிப்புரை: 

உடலை துன்பத்திலும் உயிரினை வருத்தத்திலும் அழுத்தும் நோய், உயிருக்கு பல விதத்திலும் கெடுதியை விளைவிக்கும் பிறவி ஆகியவை கொண்டுள்ள இந்த இழிந்த வாழ்க்கை ஒழிய வேண்டும் என்ற நோக்கத்துடன் தவம் செய்ய வேண்டும் என்று தலைப்பட்டு மயங்கிய மனத்துடன் இருக்கும் மனிதர்களே, நீங்கள் அனைவரும் உலகப் பொருட்களின் கவர்ச்சியில் ஏமாறி மனம் மயங்குவதை தவிர்த்து, மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் எரித்த வில்லினை, நிலையான மேரு மலையினை வளைத்து செய்யப்பட்ட வில்லினை உடைய முதல்வனாகிய இறைவனுக்கு இடமாகிய தூங்கானை மாடம் எனப்படும் அகன்ற திருக்கோயில் உடையதும், மேகத்தினை தொடும் வண்ணம் உயர்ந்து ஓங்கி நிற்கும் கொடிகளை உடைய மாடங்கள் கொண்டதும் ஆகிய கடந்தை தலத்தினைச் சென்று அடைந்து ஆங்கே உள்ள இறைவனைத் தொழுது நீங்கள் விரும்பும் பயனை அடைவீர்களாக.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com