87. உயிராவணம் இருந்து - பாடல் 7

பிறர் மூலம் கேட்டு
87. உயிராவணம் இருந்து - பாடல் 7

பாடல் 7:

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
         மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
        பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே
       நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
       தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

 

விளக்கம்:


சிவபிரானைச் சென்று உயிர்கள் அடைய, உயிர் மேற்கொள்ள வேண்டிய நிலைகளை படிப்படியாக விவரிக்கும் பாடலாக, இந்த பாடல் கருதப்படுகின்றது. கேட்டல், தெளிதல், சிந்தித்து ஆராய்தல், யான் எனது என்ற நிலை மாறி சிவமாக மாறுதல் என்ற நான்கு நிலைகளும் இங்கே கூறப்பட்டுள்ளன. ஆரூர்ப் பெருமானின் பெயரை முதன் முதலாகக் கேட்ட தலைவி, பின்னர் அவனது தன்மைகளை பலர் மூலம் கேட்டறிந்து கொண்டு அவனது நிலை பற்றி தனக்கிருந்த ஐயங்களைத் தெளிவித்துக் கொள்கின்றாள்; பின்னர் அவனைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து, தனது பெயரை மறந்து, தனது பெற்றோர்களை விடுத்து, தனது குல வழக்கங்களை விடுத்து, முடிவில் தன்னையே மறந்து அவனுக்கு ஆளான நிலை, அவளது தோழிக்கூற்றாக இங்கே சொல்லப்பட்டுள்ளது. 

சரித்திர நாவல்களின் தந்தை என்று போற்றப்படும் கல்கி அவர்கள், தனது சிவகாமியின் சபதம் என்ற நாவலை இந்தப் பாடலுடன் முடிக்கின்றார். நரசிம்ம பல்லவனுடன் கொண்டிருந்த காதல் நிறைவேறாத நிலையில், அப்பர் பிரான் மூலம் சிவபெருமானது பெருமைகளை அடிக்கடி கேட்டறிந்து, இறைப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்த சிவகாமி எனும் நடனமாது, இந்தப் பாடலுக்கு நடனமாடிக் கொண்டே இறைவன் அடி சேர்வதாக கதை முடிக்கப்படுகின்றது.

இந்த பாடல் அப்பர் பிரானின் வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒன்றிப் போவதாக அமைந்துள்ளது என்றும் கூறுவார்கள். பாதிரிப்புலியூர் சமணப் பள்ளியை விட்டு இரவோடு இரவாக வெளிவந்த அப்பர் பிரானுக்கு அப்போது சைவ சமயத்தைச் சார வேண்டும் என்ற எண்ணம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. தனது தமக்கையார், தன்னை வருத்தும் கொடிய சூலை நோய்க்கு தீர்வு ஏதேனும் கூறுவார் என்ற நம்பிக்கையில் தான் சமணப் பள்ளியை விட்டு தருமசேனர் (சமணப் பள்ளியில் இருந்த போது அப்பர் பிரானின் திருநாமம்) வெளியேறுகின்றார். தனது தமக்கையின் காலில் விழுந்து எழுந்தபோது, அவர் தனது தம்பிக்கு திருநீறு அணிவித்து, பொழுது விடிந்ததும் நாம் இருவரும் திருவதிகைத் திருக்கோயிலுக்குச் சென்று இறைபணியில் ஈடுபடலாம் என்று கூறுகின்றார். அப்போது பெருமானின் திருநாமத்தைக் கேட்ட தருமசேனர், பின்னர் சிவபிரானது தன்மைகளைத் தனது தமக்கை மூலம் கேட்டறிகின்றார். கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகம் பாடி, சிவனது அருளால் சூலை நோய் தீர்க்கப்பட்ட பின்னர், அவனையே எப்போதும் சிந்தித்துக் கொண்டு தலங்கள் தோறும் சென்று பல பதிகங்கள் பாடுகின்றார்; தனது பெற்றோர்கள் வைத்த பெயரான மருள்நீக்கியார் என்பதும், சமணர்கள் அழைத்த தருமசேனர் என்ற பெயரும் மறக்கப்படுகின்றன, சிவபிரான் வைத்த திருநாவுக்கரசு என்ற பெயர் நிலைக்கின்றது. உலகப் பற்றுக்களை நீத்து, சமண மதத்து வழக்கங்களையும் ஒழித்து வாழும் அப்பர் பெருமான் இறுதியில், புகலூர்த் தலத்தில் இறைவனுடன் ஒன்றுகின்றார். இந்த நிகழ்ச்சிகள் தான், நாமம் கேட்டதாகவும், அவனது வண்ணம் கேட்டதாகவும், அவன் இருக்கும் தலம் ஆரூர்(அதிகை என்று மாற்றிக்கொள்ள வேண்டும்) என்பதை அறிந்து, பிச்சியாக மாறியதாவும், அன்னையை நீத்து, ஆசாரத்தை விட்டு, தன்னை மறந்து, தனது நாமமும் கெட்டு, அவனுக்குத் தலைப்பட்டாள்  என்று கூறப்பட்டுள்ளது.        

பொழிப்புரை:

முன்னம் ஒரு சமயம், ஆரூர் பெருமானது திருநாமத்தைக் கேட்ட தலைவி, அவனது தன்மைகளை பிறர் மூலம் கேட்டு அறிந்தாள்; அவனது இருப்பிடம் ஆரூர் என்பதையும் அறிந்த அவள், அவன் மீது தீராத காதல் கொண்டாள்; தனது பெற்றோர்களை அன்றே மனத்தினால் துறந்த அந்த நங்கை, அவனைப் பற்றிய நினைப்பில் எப்போதும் மூழ்கி இருந்ததால், தான் செய்யும் செயல்களையும் மறந்தாள்; தனது பெயரினையும் மறந்து இறுதியில் தன்னையே மறந்த அந்த நங்கை, அவனது திருவடிகளையே நினைத்து அவனுடன் ஒன்றிவிட்டாள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com