87. உயிராவணம் இருந்து - பாடல் 10

வைப்புத் தலங்கள்
87. உயிராவணம் இருந்து - பாடல் 10


பாடல்  10:

    நல்லூரே நன்றாக நட்டமிட்டு
             நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
    பல்லூரும் பலி திரிந்து சேற்றூர் மீதே
            பலர் காணத் தலையாலங்காட்டின் ஊடே
    இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
           இராப் பட்டீச்சரம் கடந்து மணற்கால் புக்கு
    எல்லாரும் தளிச்சாத்தங்குடியில் காண
           இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே   

    

விளக்கம்:


பழையாறு, சேற்றூர், மணற்கால், தளிச்சாத்தங்குடி முதலியன வைப்புத் தலங்கள், அப்பர் பெருமான் பதிகம் அருளிய பழையாறை மேற்றளி வேறு, பழையாறை வேறு. பல தலங்களில் உறைவதும், ஒரு ஊரிலிருந்து அடுத்து ஊருக்கு, நொடிப் பொழுதில் செல்வதும், சிவபிரான் செய்யும் கண்கட்டு வித்தைகள் என்று அப்பர் பிரான், இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் கூறியது போல் இங்கும் கூறுகின்றார். நரை ஏறு என்று இடபம் குறிப்பிடப்படுகின்றது. சிவபிரானின் வாகனமாகிய இடபத்தினை  வெள்ளேறு, நரை ஏறு என்று குறிப்பது திருமுறை மரபு. மால்விடை, கரிய விடை என்று குறிப்பிடுவது, திருமால் விடையாக மாறி, திரிபுரத்தவர்களுடன் போருக்குச் சென்ற போது இறைவனைத் தாங்கிய நிகழ்ச்சியை குறிப்பதாகும்.   

பொழிப்புரை:

நல்லூரில் நன்றாக நடனம் ஆடிய சிவபிரான், பின்னர் தனது வாகனமாகிய வெள்ளை இடபத்தின் மீதேறி, பழையாறை சென்றார்; பின்னர் பல தலங்கள் திரிந்து சேற்றூர் அடைந்த அவர் அனைவரும் காணுமாறு தலையாலங்காடு சென்று சேர்ந்தார்; அங்கிருந்து மிகுந்த விருப்பத்துடன் பெருவேளூர் சென்ற எம்பிரான், பின்னர் பட்டீச்சரம் சென்று இரவில் அங்கே தங்கினார்; மறுநாளில் மணற்கால், தளிச்சாத்தங்குடி என்ற தலங்கள் வழியாக நொடிப்பொழுதில் திருவாரூர் வந்தடைந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com