88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 1

பிறவித்துன்பத்தை நீக்கி
88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 1


முன்னுரை:

இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. அப்பர் பிரான் தூய வாழ்க்கை வாழ்ந்து, தனது ஐம்புலன்களையும் நெஞ்சத்தையும், மிகவும் சீரிய முறையில் இறைப்பணியில் ஈடுபடுத்தியது அவரது சரித்திரத்திலிருந்து நமக்கு நன்கு புலனாகும். எனவே இந்தப் பதிகத்தினை, அப்பர் பிரான் தனது நெஞ்சத்திற்கு அறிவுறுத்தும் பதிகமாகக் கொள்ளாமல், நமது நெஞ்சங்களுக்கு அப்பர் பிரான் அறிவுரை வழங்கும் பதிகமாக நாம் கொள்ளவேண்டும். பொதுவாக திருமுறைப் பதிகங்கள் இறைபணியின் பெருமையை உணர்த்துவன. இந்த பதிகம், இறைபணியின் பெருமை ஒன்றினையே உரைப்பதால், சிவநெறி செல்ல நினைக்கும் அன்பர்களுக்கு மிகவும் இன்றியமையாத அறிவுரைகள் கொண்ட பதிகமாக கருதப்படுகின்றது.        

பாடல் 1:

    இடர் கெடுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா
         ஈண்டு ஒளிசேர் கங்கைச் சடையா         என்றும்
    சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூநீறு
        சேர்ந்து இலங்கு தோளா             என்றும்
    கடல்விடம் அது உண்டு இருண்ட கண்டா என்றும்
         கலைமான் மறி ஏந்து கையா         என்றும்
    அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும்
         ஆரூரா என்றென்றே அலறா நில்லே 


விளக்கம்:


இடர்=பிறவித்துன்பம்: கெடுமாறு=கெடும்+ஆறு=துன்பம் ஒழியும் வகை; ஈண்டு=மிகுந்த

சாதாரண வயிற்று வலியோ அல்லது சுரமோ ஏற்பட்டால் நாம், அந்த வலியினை உணர்ந்து, அம்மா, அப்பா, ஐயோ என்று அலறுகின்றோம். ஆனால் அனைத்து நோய்களுக்கும் பெரியதான பிறவிப் பிணியைக் கொண்டுள்ள நாம், அதனை உணர்வதில்லை. முதலில் அதனை உணர்ந்தால் தானே நாம் நமது வேதனையை வெளிப்படுத்தும் முகமாக அலறுவோம்; அதனை உணருவதுமில்லை, எனவே அலறுவதுமில்லை; அதனைப் போக்கிக் கொள்ளும். வழியினை ஆராய்வதுமில்லை. அதனால் தான் முதலில் பாடலின் தொடக்கத்தில் இடர் என்று பிறவிப்பிணியை உணர்த்தி, அதனைப் போக்கிக் கொள்ள விருப்பம் உள்ளதா என்று நம்மை கேட்கின்றார். 

ஏன் நாம் பிறவித் துன்பத்தை நீக்கிக்கொள்ள, சிவபிரானை நாட வேண்டும். நிலையில்லாத உலகத்தில் நிலையான ஒருவன் அவன் தான் என்பதை அவனது திருநீறு அணிந்த கோலம் நமக்கு நினைவூட்டுகின்றது. மேலும் மற்ற அனைவரும், பிரமன் திருமால் உட்பட்ட அனைத்துத் தேவர்களும், பிறவிப்பிணிக்கு ஆட்பட்டவர்கள் தானே; தான் கொண்டுள்ள நோயினைத் தீர்த்துக் கொள்ளும் வழி அறியாமல், அந்த நோயுடன் வாழும் அவர்களால் எவ்வாறு அந்தப் பிணியைப் போக்க முடியும். ஒவ்வொரு ஊழி முடிவிலும் செத்து செத்துப் பிழைக்கும் தேவர்கள் எவ்வாறு நம்மை காப்பாற்ற முடியும்? சிவபிரான் ஒருவன் தான், நமது பிறவிப் பிணியைத் தீர்க்கவல்ல மருத்துவன் என்பதை திருநீறு அணிந்தவன் என்று குறிப்பிடுவதன் என்பதன் மூலம் நமக்கு அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.
பிரமன், திருமால் உட்பட்ட அனைத்துத் தேவர்களும், பாற்கடலில் இருந்து எழுந்த நஞ்சம் தாளாமல் தவித்த போது,  அவர்களைக் காப்பதற்காக நஞ்சினை உண்டவன் சிவபெருமான். நம்மிலும் பெரியோர் திருமால், பிரமன், மற்றுமுள்ள தேவர்கள்; அவர்களுக்கு துன்பம் வந்தபோது, அவர்களையே காத்து அருளியவன், நம்மையும் காக்கும் வல்லமை படைத்தவன் அல்லவா.

ஓரிடத்தில் நில்லாமல் துள்ளித் திரியும் இயல்பு உடையது மான்கன்று. அந்த மான் கன்றினை அடக்கி, தனது கையில் நிலையாக ஓரிடத்தில் வைத்து இருப்பவன் சிவபெருமான்.. மான் துள்ளவது போல், பல இடங்களுக்கும் சென்று திரியும் இயல்பு உடைய மனத்தினை கட்டுப்படுத்தும் வல்லமையைத் தர வல்லவன் சிவபெருமான் ஒருவனே என்பது மறி ஏந்து கையன் என்ற தொடர் மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது.      

உயிர்கள் அனைத்தும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய துன்பம் பிறவித் துன்பம் தான். இந்த பிறவித்துன்பம் நீங்கப் பெற்றால், நாம் இறைவனடி சேர்ந்து என்றும் அழியாத பேரானந்தத்தில் திளைக்கலாம். பிறவித்துன்பத்தை நீக்க வல்லவன் சிவபெருமான் ஒருவனே என்பதால், முதலில் அவனது நாமத்தைச் சொல்லுமாறு, அப்பர் பிரான் நமது நெஞ்சத்திற்கு கட்டளை இடுகின்றார்.  

பொழிப்புரை:

நெஞ்சமே, நீ அனைத்துத் துன்பங்களிலும் பெரிய துன்பமான பிறவித்துன்பத்தை நீக்கிக் கொள்ள, ஆசைப்படுவாயாகில், என்னிடம் வா; நான் உனக்கு அதற்குரிய வழியினைக் காட்டுகின்றேன்; மிகுந்த ஒளிவீசும் செஞ்சடையில் கங்கையை அணிந்தவனே என்றும், ஞான ஒளியாய் அனைவரது உள்ளத்திலும் மிளிரும் சோதீ என்றும், திருநீறு அணிந்து ஒளிரும் தோள்களை உடையவனே என்றும், பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டதால் கரிய நிறமடைந்த கழுத்தினை உடையவனே என்றும், மான்கன்றினை ஏந்திய கையனே என்றும், ஆற்றல் மிக்க காளையினை வாகனமாக உடைய இறைவனே என்றும், கிடைத்தற்கு அரிய அமுதமே என்றும், அனைவருக்கும் மூத்தவனே என்றும் ஆரூரனே என்றும் அவனது புகழினையும் ஆற்றலையும் உணர்த்தும் திருநாமங்களை உரத்த குரலில் சொல்லி அவனை பலகாலும் அழைப்பாயாக.     
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com