88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 2

திண்ணமாகத் தீர
88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 2


பாடல் 2:
    செடியேறு தீவினைகள் தீரும் வண்ணம்
            சிந்தித்தேல் நெஞ்சமே திண்ணமாகப்
    பொடியேறு திருமேனி உடையாய் என்றும்
           புரந்தரன் தன் தோள் துணித்த புனிதா என்றும்
    அடியேனை ஆளாகக் கொண்டாய் என்றும்
          அம்மானே ஆரூர் எம் அரசே என்றும்
    கடிநாறு பொழில் கச்சிக் கம்பா என்றும்
          கற்பகமே என்றென்றே கதறா நில்லே 

விளக்கம்:

செடி=துன்பம்; புரந்தரன்=இந்திரன்; கடிநாறு பொழில்=நறுமணம் கமழும் சோலைகள்; சிந்தித்தேல் நெஞ்சமே=நெஞ்சமே நீ சிந்திப்பாயானால்; சிந்தித்தேன் நெஞ்சமே என்று பிரித்து, அப்பர் பிரான் தான் சிந்தித்து இந்த அறிவுரையினை நமக்கு வழங்குகின்றார் என்றும் கூறுவதுண்டு. கற்பகம் என்பது தேவலோகத்தில் உள்ள மரம். அந்த மரம், தனது நிழலில் இருந்து வேண்டுவோர்க்கு வேண்டியதை எல்லாம் அளிக்கவல்லது என்று நம்பப்படுகின்றது. சிவபிரானின் திருவடி நீழலில் சேர்ந்தவர்க்கு அவர்கள் வேண்டுவன கிடைப்பதால், இறைவனை கற்பகமே என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். கருகாவூர், கற்குடி (உய்யக்கொண்டான் மலை), வலஞ்சுழி, கடிக்குளம், கஞ்சனூர் போன்ற தலங்களில் இறைவனுக்கு கற்பகநாதர் என்ற பெயர் உள்ளது.  

இந்திரன் தோள் நெரிக்கப்பட்ட சம்பவம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. மணிவாசகர், தனது திருவம்மானை பதிகத்தில் (15ஆவது பாடல்) இந்திரன் தோள் நெரிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற சம்பவங்கள் அனைத்தும் தக்க யாகத்தினை வீரபத்திரர் அழித்தபோது நிகழ்ந்தன என்பதால் இந்திரனின் தோளும் அப்போது நெரிக்கப்படது என்றும் கொள்ளலாம். சந்திரனை காலால் தேய்த்ததுடன் நிறுத்தியதால், தேய்த்தருளி என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

    சத்திரனைத் தேய்த்தருளி தக்கன் தன் வேள்வியினில்
    இந்திரனைத் தோள் நெரித்திட்டு எச்சன் தலை அரிந்து
    அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து
     சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த
    செந்தார் பொழில்புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
    மந்தார மாலையே பாடுதும் காண் அம்மானாய்

சுந்தரரும் தனது கலயநல்லூர் பதிகத்தின் இரண்டாவது பாடலில், இந்திரனின் தோள் நெரிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிடுகின்றார். செருமேவு சலந்தரன்=போரை விரும்பி வேண்டி வந்த சலந்தரன்;  

    செருமேவு சலந்தரனைப் பிளந்த சுடர் ஆழி
              செங்கண் மலர் பங்கயமாச்                 
              சிறந்தானுக்கு அருளி  
    இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி
              இந்திரனைத் தோள் முரித்த             
              இறையவன் ஊர் வினவில்
    பெருமேதை மறை ஒலியும்
            பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி           
            விளையாட்டு ஒலியும் பெருகக்
    கருமேதி புனல் மண்டக் கயல் மண்டக்
            கமலம் களி வண்டின் கணம் இரியும்           
           கலயநல்லூர் காணே

 
ஆரூர் தலத்தில் உறையும் இறைவனது பெயர் தியாகராஜன் என்பதால் பொருத்தமாக ஆரூர் அரசே என்று அப்பர் பிரான் இங்கே அழைக்கின்றார். பதிகத்தின் முதல் பாடலில் நமது பிறவிப் பிணியைத் தீர்க்க வல்லவன் சிவபெருமான் என்பதை உணர்த்திய அப்பர் பிரான் இங்கே, நாம் நினைத்ததை எல்லாம் கொடுக்கவல்லவன் சிவபெருமான் என்பதை உணர்த்தும் வகையில் கற்பகம் என்று கூறுகின்றார். உயிரின் உண்மையான விருப்பமான பிறவிப் பிணி நீக்கத்தை நாம் விரும்பி வேண்டாமல், நாம் நிலையில்லாத உலக இன்பங்களுக்கு ஏதுவாக பல வேண்டுகோள் விடுக்கின்றோம் அல்லவா. அத்தகைய விருப்பத்தையும் நிறைவேற்றி வைப்பவன் சிவபெருமான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. 

பொழிப்புரை:

நெஞ்சமே, உன்னைப் பற்றி இருக்கும் தீவினைகள் திண்ணமாகத் தீர வேண்டும் என்று நீ விரும்பினால், நீ செய்ய வேண்டியதை நான் சொல்கின்றேன், கேட்பாயாக. திருநீறு அணிந்த திருமேனி உடையவனே என்றும், இந்திரனின் தோளைத் துண்டித்த புனிதனே என்றும், அடியேனை ஆளாகக் கொண்டவேனே என்றும், தலைவனே என்றும், ஆரூர் அரசே என்றும், நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த காஞ்சி மாநகரத்தில் உறையும் ஏகம்பனே என்றும், கற்பகமே என்றும் பலமுறை அவனது திருநாமங்களை உரக்கச் சொல்லி அழைப்பாயாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com