88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 4

தேவைப்படாத விளக்கே
88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 4


பாடல் 4:

    புண்ணியமும் நன்னெறியும் ஆவதெல்லாம்
        நெஞ்சமே இது கண்டாய் பொருந்தக் கேள் நீ
    நுண்ணிய வெண்ணூல் கிடந்த மார்பா என்றும்
        நுந்தாத ஒண்சுடரே என்றும் நாளும்
    விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்
       விரைமலர் மேல் நான்முகனும் மாலும் கூடி
    எண்ணரிய திருநாமம் உடையாய் என்றும்
        எழில் ஆரூரா என்றே ஏத்தா நில்லே

விளக்கம்:

நுந்தாத=தூண்டல் வேண்டாத, தூண்டுதல் தேவைப்படாத. சிவபிரான், எப்போதும் ஒளி குன்றாத சுடர் விளக்கு என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது. இறைவனின் பெருமை கூறும் திருநாமங்கள் சொல்வதே புண்ணியம் மற்றும் நன்னெறி என்று இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.  

பொழிப்புரை:

நெஞ்சமே, புண்ணியம் நன்னெறி ஆகியவை என்ன என்று கேட்டாய் அல்லவா, அதற்கு விடை கூறுகின்றேன், கூர்ந்து கேட்பாயாக. நுண்ணிய வெண்ணூல் அணிந்த மார்பினனே, தூண்டுதல் தேவைப்படாத விளக்கே, வானத்தில் உலவும் தேவர்கள், நான்மறைகள், தாமரை மலர் மேல் உறையும் பிரமன், மற்றும் திருமால் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும், அவர்களால் கணக்கிடமுடியாத திருநாமங்கள் உடைய இறைவனே, அழகிய ஆரூர் நகரில் உறையும் இறைவனே என்றும் பலகாலும் நீ  இறைவனைத் துதிப்பாயாக.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com