89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 8

தீங்கு ஏற்படாவண்ணம்
89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 8


பாடல் 8:

    பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப்
            பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
    கீதத்தை மிகப் பாடும் அடியார்க்கு என்றும்
            கேடிலா வானுலகம் கொடுத்த நாளோ
    பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்
           பொய்யுரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும்
    வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
          திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே


விளக்கம்:

முயலகன்=தாருகவனத்து முனிவர்கள் பெருமான் மீது ஏவிய அரக்கன். பூதத்தான்=பூத கணங்களை உடைய நந்தி தேவன்; பொரு நீலி=செம்மை நிறத்து திருமேனி உடைய உன்னுடன் பொருந்தும் வண்ணம் நீல நிறத்து உடலைப் பெற்றுள்ள பார்வதி தேவி; புனிதன்=பிரம தேவன்; மறை நால்வர்=சனகாதி முனிவர்கள் 

பொழிப்புரை:

அரக்கன் முயலகனால் எவருக்கும் தீங்கு ஏற்படாவண்ணம், அவனைத் தனது பாதத்தின் கீழே அழுத்தியவாறு நடனம் ஆடுபவனே, உலகினில் மேம்பட்ட சுடரொளியாகத் திகழ்பவனே, உனது புகழினை பாடல்களாக பாடும் அடியார்களுக்கு அழியாத தன்மை உடைய நிலையான இன்பம் அளிக்கும் வீடுபேற்றினை அருளுபவனே,  பூத கணங்களை உடைய நந்தி தேவர், பெருமானின் செம்மை நிறத்திற்கு பொருத்தமாக இருக்கும்  வண்ணம் நீல நிறத்து திருமேனியை உடைய பார்வதி தேவி, புனிதனாக கருதப்படும் பிரமன், பொய்களைத் தவிர்த்து உண்மையான செய்திகளையே சொல்லும் வேதங்களில் வல்லவராக விளங்கிய சனகாதி முனிவர்கள் ஆகியோருக்கு வேதங்களை விவரித்து உபதேசம் செய்த பெருமானே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது., 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com