84. குலம் பலம் பாவரு - பாடல் 3

நல்வினைப் பேற்றினை
84. குலம் பலம் பாவரு - பாடல் 3

பாடல் 3: 

    ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர்
                             முன் நமக்கு உண்டு கொலோ
    செரு வடி வெஞ்சிலையால் புரம் அட்டவன்
                             சென்று அடையாத்
    திருவுடையான் திருவாரூர்த் திருமூலட்டானன்
                             செங்கண்
    பொருவிடையான் அடித் தொண்டர்க்குத்
                             தொண்டராம் புண்ணியமே

விளக்கம்:

வடிவு இன்றி=ஆடைகளால் பொலிவு செய்யப்படும் அழகு இன்றி; பொருவிடையான்=போர்க் குணம் கொண்ட எருது; வெஞ்சிலை=வெம்மை வாய்ந்த வில்; மூன்று
புரங்களையும் பற்றி எரியச் செய்த அம்பு பொருத்தப்பட்ட வில் என்பதால் வெஞ்சிலை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். அட்டவன்=எரித்தவன் 

பொழிப்புரை:

திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடுவதற்காக மேரு மலையை நெருப்பினை ஊட்டும் அம்பு பொருத்தப்பட்ட வில்லாக வளைத்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவனும், தான் போய் தேடாமல் இயல்பாகவே தன்னிடம் செல்வம் உடையவனாக இருப்பவனும், திருவாரூர் மூலட்டானத்தில் எழுந்தருளி இருப்பவனும், சிவந்த கண்களுடன் போர் குணம் உடையதாக விளங்கும் ஏற்றினை வாகனமாக உடையவனும் ஆகிய பெருமானின் அடியார்களுக்கு அடியேனாக இருக்கும் நல்வினைப் பேற்றினை அடியேன், ஆடைகளால் பொலிவு பெரும் வண்ணம் அழகு உடையாதவர்களாகவும்  மூர்க்கர்களாகவும், எப்போதும் நின்றவாறே உணவு உட்கொள்ளும் பழக்கத்தினை உடையவர்களாகவும் திகழும் சமணர்கள் காணும் வகையில் பெறுவேனோ. பெருமானே, மேலே குறிப்பிட்ட பேற்றினை அடியேன் பெறுமாறு நீரே அருள் புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com