85. கற்றவர்கள் உண்ணும் கனியே - பாடல் 10

உமையம்மைக்கு உடலில் இடம்
85. கற்றவர்கள் உண்ணும் கனியே - பாடல் 10


பாடல் 10: 

    பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி
            பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
    கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
           காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
    அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
           அன்று அரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும்
    சிரம் நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
           திருமூலட்டானனே போற்றி போற்றி


விளக்கம்:


ஆற்ற=மிகவும், அருமந்த=அருமையான; அருமருந்த என்ற சொல்லின் திரிபாகக் கருதி அமுதத்தை உண்ட தேவர்கள் என்றும் பொருள் கூறுவதுண்டு. 

பொழிப்புரை:

பிரமனின் ஐந்தாவது தலையை நீக்கிய பெரியோனே, உமையம்மைக்கு உடலில் இடம் கொடுத்ததால் பெண்ணுருவமும் ஆணுருவமும் கலந்து நிற்பவனே, நான்கு கரங்களையும் மூன்று கண்களையும் கொண்ட தோற்றத்தை உடையவனே, அன்பு கொண்டு உன்னைத் தொழும் அன்பர்களுக்கு மிகவும் எளியவனே, அமுதத்தை உட்கொண்ட தேவர்களுக்கு அரசனாக விளங்குபவனே, இராவணனது இருபது தோள்களையும், கால்களையும், பத்து தலைகளையும் தனது பாதத்தின் விரலால் நெரித்தவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.

முடிவுரை:

மனப்பாடம் செய்து தினமும் ஓதக்கூடிய பதிகங்களில் ஒன்றாக பெரியோர்களால் கருதப்படுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com