87. உயிராவணம் இருந்து - பாடல் 2

தீவினைகள் கொண்ட நெஞ்சமே
87. உயிராவணம் இருந்து - பாடல் 2


பாடல்  2: 


    எழுது கொடியிடையார் ஏழை மென்தோள்
                 இளையார்கள் நம்மை இகழா முன்னம்
    பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே
                பண்டு தான் என்னோடு பகை தான் உண்டோ
    முழுதுலகில் வானவர்கள் முற்றும் கூடி
               முடியால் உற வணங்கி முற்றம் பற்றி
    அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான்
              ஊர் போலும் ஆரூர் தானே

விளக்கம்:

எழுது கொடி இடையார்=சித்திரங்களில் தீட்டப்படும் அளவுக்கு அழகான இடையை உடைய பெண்கள்; நமது இளமைக் காலத்தில் நம்மை விரும்பும் பெண்கள், நாம் முதுமை அடைந்த பின்னர் நம்மை இகழ்வார்கள் என்று கூறி, வயது முதிர்ந்த பின்னர் நமது உடல் செயலற்று இருக்கும் தன்மையை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். அவ்வாறு உடல் செயலற்று இருக்கும் சமயத்தில், உற்சாகத்துடன் இறைப்பணியில் ஈடுபட்டுச் செய்வது கடினம் என்பதால் நாம் இளமையாக இருக்கும்போதே, இறைவனை வழிபடவேண்டும் என்று இங்கே நமக்கு அறிவுரை கூறுகின்றார்.

இளமை நிலையாமை என்ற தலைப்பில் காணப்படும் பாடல் ஒன்றில், திருமூலர் ஆடவர்கள் தங்களது இளமைக்காலத்தில் கருப்பஞ்சாறு போன்று பெண்களுக்கு இனிப்பார்கள் என்றும், முதுமை வந்தடைந்தபோது எட்டிக்காய் போல் கசப்பார்கள் என்றும் கூறுகின்றார். காஞ்சிரங்காய்=எட்டிக்காய்.

    விரும்பார் முன் என்னை மெல்லியல் மாதர் 
    கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர் போல்
    அரும்பு ஒத்த மென்முலை ஆயிழையார்க்குக்
    கரும்பு ஒத்துக் காஞ்சிரங்காயும் ஒத்தேனே     ,  
   

க்ஷேத்திரக்கோவை எனப்படும் பதிகத்தின் ஒரு பாடலில் (பதினோராம் திருமுறை), தலைமுடி வெளுத்து, உடல் வளைந்து, பெண்கள் அருவருக்கும் நிலையினை அடைவதற்கு முன்னரே. சாய்க்காடு பெருமானை கை தொழுது உய்யுமாறு ஐயடிகள் காடவர் கோன் கூறுகின்றார், குஞ்சி=தலைமுடி

    அஞ்சனம் சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
    குஞ்சி வெளுத்து உடலம் கோடாமுன் நெஞ்சமே
    போய்க் காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
    சாய்க்காடு கை தொழு நீ சார்ந்து 

அப்பர் பிரான் தான், அறுபது வயதினை அடைந்த பின்னர் தான் சைவசமயம் சார்ந்து தேவாரப் பாடல்கள் அருளத் தொடங்கினார். மேலும் அவரது நெஞ்சமும் அவரது எண்ணங்களும் அவரது கட்டுப்பாட்டில் தான் இருந்தன. எனவே இந்த பாடல் அவரது நெஞ்சத்திற்கு கூறிய அறிவுரையாக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த பாடல் நமக்காக அறிவுரை கூறும் பாடலாகும்.  

பொழிப்புரை:

தீவினைகள் கொண்ட நெஞ்சமே, உனக்கும் எனக்கும் முந்தைய பகை ஏதேனும் உண்டோ? அவ்வாறான பகை ஏதும் இல்லையே. முதுமைக் காலம் அடைந்து, சித்திரத்தில் எழுதப்பட்ட அழகான இடையையும் மெல்லிய தோள்களையும் கொண்ட மாதர்கள், நீ முதுமை அடைந்துவிட்டாய் என்று சொல்லி உன்னை இகழ்வதன் முன்னர், நீ பயனுள்ள செயல்களைச் செய்வாயாக. முதுமை அடைந்தபோது உன்னால் பயனுள்ள செயல்களைச் செய்ய முடியாமல் நேரலாம். உலகில் உள்ள தேவர்கள் எல்லோரும் கூடி, தங்களது தலையால் முழுமையாக வணங்கி, அழுது அரற்றி வழிபடுமாறு, சிவபெருமான் திருவாரூரில் கோயில் கொண்டுள்ளான். நீ அவனை நினையாது வேறு எதனையும் நினைத்து பழுதுபட்டு போகாதே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com