89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 10

காணும் இடங்களில்
89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 10


பாடல் 10:

    ஈசனாய் உலகேழும் மலையுமாகி இராவணனை
                    ஈடழித்திட்டு இருந்த நாளோ
    வாசமலர் மகிழ் தென்றலான நாளோ மதயானை
                    உரி போர்த்து மகிழ்ந்த நாளோ
    தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ சகரர்களை
                    மறித்திட்டு ஆட்கொண்ட             நாளோ 
    தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ
                    திருவாரூர் கோயிலாக் கொண்ட             நாளே


விளக்கம்:


தாதுமலர்=தேன் நிறைந்த கொன்றை மலர்; சண்டி-சண்டீசர்; ஈசன்=தலைவன்
 
பொழிப்புரை:

உலகம் ஏழினையும் மலைகள் ஏழினையும் அடக்கி ஆளும் தலைவனே, கயிலை மலையினை பேர்க்கத் துணிந்த அரக்கன் இராவணனின் பெருமையை அழித்தவனே, நறுமணம் மிகுந்த மலர்களின் வாசனையை ஏற்று வீசும் பொதிகை மலைத் தென்றல் காற்றாக இருப்பவனே, தன் மீது ஏவப்பட்ட மதயானையின் தோலினை உரித்து அதனை போர்வையாக உடலின் மீது மகிழ்ச்சியுடன் அணிந்தவனே, நறுமணம் வீசும் கொன்றை மாலையை சண்டீசருக்கு அணிவித்தவனே, கபில முனிவரின் பார்வையால் எரிக்கப்பட்டு பாதாளத்தில் சாம்பலாக சகர புத்திரர்கள் முக்தி அடையும் பொருட்டு முயற்சி செய்த பகீரதனுக்கு உதவியாக, மேலிருந்து மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியை சடையில் தாங்கியும் பின்னர் சிறுதுளிகளாக விடுவித்தும் அருளிய பெருமானே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது. பொதுவாக இந்த உலகத்தில் உள்ள மக்கள் உன்னை பரம்பொருள் என்று அறிந்து கொள்வதற்கு முன்னோ பின்னோ நீ திருவாரூர் தலத்தினை உனது இருப்பிடமாகக் கொண்டாய். இதனை அடியேனால் அறிய முடியுமோ, அறிய முடியாது. அறிய முயற்சி செய்வதும் பேதமையான செயல் அல்லவா.    


முடிவுரை:

காண்பதெல்லாம் சிவமாகவும் காணும் இடங்களில் எல்லாம் சிவத்தையும் கண்டவராக தனது வாழ்க்கையை நடத்திய அப்பர் பிரான், திருவாரூர் நகரத்தின் தொன்மையை குறிப்பிடுவதற்கும் பெருமான் அருள்செயல்களையே எடுத்துக் கொண்டது அவர் எந்த அளவுக்கு சிவவுணர்வுடன் இருந்தார் என்பதை நமக்கு காட்டுகின்றது. இந்த பதிகத்தைப் படிக்கும் நமக்கு சிவபுராணங்கள் அனைத்தையும் படித்த உணர்வு ஏற்படும் வண்ணம், பெருமானின் பெரும்பாலான கருணைச் செயல்களையும் வீரச் செயல்களையும் நமது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அப்பர் பெருமானின் புலமை நமக்கு வியப்பினை ஏற்படுத்துகின்றது. திருநாவுக்கரசர் என்ற பெயரினை விடவும் பொருத்தமாக அவரை அழைக்க முடியாது என்பதால் தான், பெருமானே, நாவுக்கரசு என்று உலகு ஏழினும் உன் நன் நாமம் நயப்புற நண்ணுக என்று பெயர் சூட்டியது நமது நினைவுக்கு வருகின்றது. மேலும் திருநாவுக்கரசு பெருமானாரின் திருநாமத்தை எழுதியும் சொல்லியும் பெறுவதற்கு அரியதாகிய முக்தி நிலையினை அப்பூதி அடிகள் பெற்றதும் நமது நினைவுக்கு வருகின்றது. இத்தகைய பெருமை வாய்ந்த ஐந்தெழுத்து மந்திரமாகிய நாவுக்கரசு என்ற திருமந்திரத்தை நாமும் தியானித்து, அவரது புலமையை போற்றி, அவரது பதிகங்களை படித்து உணர்ந்து அவர் காட்டிய வழியினில் நடந்து உய்வினை அடைவோமாக.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com