90. முத்து விதானம் - பாடல் 3

ஒளிவீசும் தன்மை
90. முத்து விதானம் - பாடல் 3

பாடல் 3:

    வீதிகள் தோறும் வெண் கொடியோடு விதானங்கள்
    சோதிகள் விட்டுச் சுடர் மாமணிகள் ஒளி தோன்றச்
    சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
    ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

விளக்கம்:

தாமம்=மாலை: சாதிகளாய பவளம் முத்து=உயர்ந்த வகையைச் சார்ந்த முத்து, மற்றும் பவளம்; விளைந்த இடம், ஒளிவீசும் தன்மை, குற்றமற்ற தன்மை இவைகளைக் கருத்தில் கொண்டு முத்து மற்றும் பவளத்தின் தரம் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆரூரில் மார்கழி ஆதிரைத் திருநாளுக்காக, நகரம் எவ்வாறு அழகு செய்யப் பட்டது என்பதை இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். வீதிகளில் வெண் கொடிகளும், வீட்டின் விதானங்களில் ஒளி பொருந்திய மணிகளும் பொருத்தப்பட்டு நகரம் அழகுடன் விளங்கிய நிலையினை அப்பர் பிரான் பல வருடங்கள் கழிந்த பின்னரும் மறக்கவில்லை போலும். பின்னாளில் தான் அருளிய ஒரு பொதுப் பதிகத்தில், திருக்கோயிலில் திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில், வீதிகள் அழகு செய்யப்படாத ஊர்களும் அழகான பந்தல்கள் இல்லாத ஊர்களும், ஊரல்ல காடு என்று கூறுகின்றார். இந்தப் பாடல் அப்பன் நீ என்று தொடங்கும், திருத்தாண்டகத்தின் ஐந்தாவது பாடல்.  

திருக்கோயில் இல்லாத திருவிலூரும் திருவெண்ணீறு அணியாத திருவிலூரும்
பருக்கோடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினோடு பல தளிகள் இல்லா ஊரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண்கொடியும் இல்லா    ஊரும்
அருப்போடு மலர் பறித்திட்டு உண்ணாவூரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி    காடே


பொழிப்புரை:

நகரத்தின் ஒவ்வொரு வீதியும் வெண்கொடிகள் கட்டப்பட்டும், விதானங்களில் ஒளி வீசும் சிறந்த மணிகள் பதிக்கப்பட்டும், சிறந்த ஒளியுடன், குற்றங்கள் ஏதும் இல்லாத, உயர்ந்த வகையைச் சார்ந்த முத்துக்களும் பவளங்களும் சேர்த்து கட்டப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், மார்கழி ஆதிரைத் திருநாளில் வீதி வலம் வரும் பெருமானை வரவேற்கும் முகமாக அழகு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு நகரமே விழாக் கோலம் கொண்டு, ஆதிரை நாளன்று இருப்பது காண்பர் நினைவில் எங்கும் நீங்காது இருக்கும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com