90. முத்து விதானம் - பாடல் 9

சுந்தரர் இறைவனை
90. முத்து விதானம் - பாடல் 9


பாடல் 9:

    துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
    இன்பம் நும்மை ஏத்து நாள்கள் என்பாரும்
    நும்பின் எம்மை நுழையப் பணியேன் என்பாரும்
    அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

விளக்கம்:

இறைவனைத் தொழாத நாட்கள் எல்லாம் துன்பமான நாட்களாக சிலர் கருதுவதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அவர் இவ்வாறு கூறுவது நமக்கு சுந்தரரின், நமச்சிவாயப் பதிகத்தின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. அந்த பாடலில், சுந்தரர் இறைவனை மறந்திட்ட நாட்கள் கெட்ட நாட்கள் என்று கூறுகின்றார். மேலும் இறைவனை மறந்து அவனைத் தொழாது இருந்தால் அடியார்கள் இகழ்வார்கள் என்றும் சுந்தரர் இங்கே கூறுகின்றார். பாண்டிக் கொடுமுடி திருத்தலத்தில், இறைவனின் கோயிலுக்கு அருகே காவிரி நதி தனது திசை மாற்றி ஓடுவது, கோயிலுக்கு ஒரு மாலை போன்று இருக்கும் நிலையினை ஏற்படுத்துகின்றது. காவிரிக் கரையின் ஓரங்களில், நதியால் அடித்துக் கொண்டு வரப்பட்ட மலர்களும் இலைகளும் காணப்படுவதை, சுந்தரர் பூவும் இலையும் இட்டு, காவிரி நதி சிவபெருமானை வழிபடுவதாக கூறுகின்றார். 

    இட்டன் உன்னடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
    கெட்ட நாள் இவை என்றலால் கருதேன் கிளர் புனல் காவிரி
    வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி
    நட்டவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயே

அன்பே உருவான சிவபிரான் என்பதால் அன்பன் என்று அப்பர் பிரான் இறைவனை இங்கே அழைக்கின்றார். ஆதிரைத் திருநாள் விழாவில் திரண்டு கூடியிருக்கும் அடியார்கள் பேசுவது என்ன என்பதை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். 

பொழிப்புரை:

அனைவருக்கும் அன்பனாக விளங்கும் சிவபிரானின் ஆதிரைத் திருநாளில் குழுமிய  அடியார்கள், சிவபிரானைத் தொழாத நாட்கள் துன்பமான நாட்கள் என்றும், சிவபிரானைத் தொழுது வணங்கும் நாட்கள் அவர்களது வாழ்க்கையில் மிகவும் இன்பம் மிகுந்த நாட்கள் என்றும், பேசுவார்கள்; மேலும் இறைனை நோக்கி, இறைவா, நாங்கள் எப்போதும் உனது திருத்தொண்டில் ஈடுபட்டு உந்தன் பின்னர் வருமாறு நீ அருள வேண்டும் என்று வேண்டுகின்றார்கள். இவ்வாறு அடியார்களால் மிகவும் சிறப்பாக கருதப்படுவது சிவபிரானின் ஆதிரைத் திருநாள் ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com