91. தோடுடைய செவியன் - பாடல் 1

சிவபெருமானின் திருவடிகளைத்
91. தோடுடைய செவியன் - பாடல் 1

பின்னணி:

சோழநாட்டிற்கு அணிகலனாக விளங்கிய பல தலங்களில் சீர்காழி நகரமும் ஒன்றாகும். இந்த தலத்தில், ஏழாம் நூற்றாண்டில் சிவபாத இருதயர் அவரது மனைவியார் பகவதி அம்மையார் ஆகிய இருவரும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும், சிவபெருமானின் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றினையும் பற்றுக்கோடாக கொள்ளாமல், இல்லற வாழ்க்கை நடத்தி வந்தனர். எனினும் தங்களது குலம் தழைக்க ஒரு பிள்ளை இல்லை என்ற வருத்தம் அவர்களுக்கு இருந்து வந்தது.  அந்நாளில் தமிழ்நாட்டில் சமணர் மற்றும் புத்தர்களின் ஆதிக்கம் மிகவும் பரவி இருந்தது; இந்த மதங்களின் தாக்கத்தினால், சைவநெறி போற்றப்படாமல் விளங்கியது. இந்த நிலை கண்டு மிகவும் வருத்தமுற்ற சிவபாத இருதயர், மாற்றுச் சமயக் கொள்கைகளை நிராகரித்து, சைவ சமயத்தின் சிறப்பினை நிலைநாட்டும் வல்லமை பெற்ற ஒரு குழந்தை தனக்கு பிறக்கவேண்டும் என்று பெருமானை தினமும் வேண்டிவந்தார் என்று சேக்கிழார் உணர்த்தும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நீறாக்கும்=திருநீற்றின் பெருமையினை உணர்த்தும்; பெருமானின் திருக்கூத்து அவர் செய்யும் ஐந்து தொழில்களையும் உணர்த்துவதாக கருதப் படுகின்றது.அத்தகைய தொழில்களில் முதலாகிய படைப்புத் தொழிலுடன் தொடர்பு கொண்ட மகப்பேற்றினை விரும்பினார் என்று நயமாக பெரியோர் உரை காண்கின்றார்
  
    மனையறத்தின் இன்பம் உறு மகப் பெருமான். விரும்புவார்
    அனைய நிலை தலை நின்றே ஆடிய சேவடிக் கமலம்
    நினைவுற முன் பரசமயம் நிராகரித்து நீறாக்கும்
    புனைமணிப் பூண் காதலானைப் பெறப் போந்து தவம்புரிந்தார்

பெருமானின் அருளால், கோள்கள் அனைத்தும் வலிமை பெற்று உச்சத்தில் இருந்த ஒரு திருவாதிரை நன்னாளில், பகவதி அம்மையார் ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். வேதநெறிகள் தழைத்து ஓங்கவும், சைவ சமயம் விளங்கித் தோன்றவும், உயிர்கள் அனைத்தும் பெருமானின் அருள் பெற்று உய்யவும், புனிதமான தனது திருவாய் மலர்ந்து அழுத திருஞானசம்பந்தர் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்த குழந்தை, மூன்றாண்டுகள் வயது நிரம்பிய நிலையில் ஒரு நாளில், சைவசமயம் உய்யும் வண்ணம் பெருமான் ஒரு திருவிளையாடல் செய்து காட்டினார். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள நியமங்களை செய்வதற்கு ஏதுவாக, திருக்கோயிலில் இருந்த குளத்தினில் நீராட பிள்ளையாரின் தந்தையார் புறப்பட்டார். அந்த சமயம், குழந்தை தானும் தந்தையாருடன் செல்வேன் என்று அழத் தொடங்கவே, சிவபாத இருதயரும், குழந்தையை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்றார். தனது குழந்தையை குளத்தில் கரையில் விட்டுவிட்டு, தந்தையார் குளத்தில் நீராடத் தொடங்கினார். நீராடத் தொடங்கும் முன்னர், பிள்ளையை கரையில் தனியே விட்டுவிட்டு நீராடுவதற்கு தயங்கிவராய், கோபுரத்தை நோக்கி அம்மையையும் அப்பனையும் வணங்கிவிட்டு குளத்தில் மூழ்கினார். பெற்ற தாய் தந்தையரை விடவும் அம்மையும் அப்பனுமே குழந்தைக்கு உற்ற துணையாக வரும் நாட்களில் இருப்பார்கள் என்று குறிப்பு தந்தையாருக்கு தோன்றியது போலும். நீராடல் முடிந்த பின்னர், கரையை நோக்கிய சிவபாத இருதயர் தனது மகன் ஆங்கே இருக்கக் கண்டு தன்னை விடவும் பெரிய காவல் பெற்றார் தனது மகன் என்ற எண்ணத்துடன் தனது நித்திய அனுட்டாங்களை அனுசரித்த பின்னர், அகமர்ஷண மந்திரத்தை உச்சாடனம் செய்யும் பொருட்டு மீண்டும் நீரினுள் மூழ்கினார். 

தனது தந்தையைக் காணாது தவித்த குழந்தை, கண்ணீர் ததும்ப தனது கைகளால் கண்களை பிசைந்து கொண்டு, அம்மே அப்பா என்று அழைத்த வண்ணம் அழத் தொடங்கியது. குழந்தை அழுததை சேக்கிழார் அழுது அருளினார் என்று கூறுகின்றார். குழந்தை அழும்போது முதலில் கண்களில் நீர் பொங்கும், பொங்கும் நீரினைத் துடைக்கும் வண்ணம் குழந்தை கண்களை கசக்கும், பின்னர் குரல் கொடுத்து அழத் தொடங்கும். இதே வரிசையில் சேக்கிழார் இந்த பாடலில் கூறியிருப்பதை நாம் உணரலாம். இந்த பாடலில் சேக்கிழார் எண்ணற்ற மறையொலி பெருகவும் அனைத்து உயிர்களும் மகிழ்ச்சி  அடையவும், சம்பந்தர் அழுதார் என்று கூறுகின்றார். பின்னர் நடக்கவிருப்பதை இங்கே குறிப்பாக நயத்துடன் உணர்த்துகின்றார். தேவாரப் பாடல்கள் வேதங்களின் சாரம் என்பதாலும், நாடெங்கும் தேவாரப் பாடல்கள் பின்னாளில் பாடுவதற்கும் அதனால் அனைத்து உயிர்களும் சிவானந்தம் பெற்று மகிழ்ச்சியில் ஆழ்வதற்கு அடிகோலும் வண்ணம் சம்பந்தப் பெருமானின் அழுகை அமைந்தது என்று இங்கே உணர்த்துகின்றார். கண்களில் வழியும் நீரை உமை அம்மை துடைத்து பின்னர் கையில் பாலுடன் கூடிய பொன் கிண்ணத்தை கொடுத்தமையால் அம்பிகையின் ஸ்பரிச தீட்சை கிடைக்க பெற்றதால் கண்மலர்கள் என்றும் கை மலர்கள் என்றும் சிறப்பித்து சொல்லப் பட்டுள்ளன. தமிழ் வேதமாகிய எண்ணற்ற பதிகங்கள் சம்பந்தர் வாயிலிருந்து வரப்போவதை குறிக்கும் வகையில் மலர் செங்கனி வாய் மணி அதரம் என்று வாய் சிறப்பித்து சொல்லப் பட்டுள்ளது.   
    
    கண்மலர்கள் நீர் ததும்ப கைம்மலர்களால் பிசைந்து
    வண்ண மலர்ச் செங்கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப
    எண்ணில் மறை ஒலி பெருக எவ்வுயிரும் குதூகலிப்பப்
    புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அழுது அருளினார்

 
திருக்கோயில் சிகரத்தை பார்த்து, அம்மையே அப்பா என்று அழைத்தவாறு குழந்தை   அழுதது. காலம் கனிந்து வந்தமை கண்டு பெருமான் குழந்தைக்கு அருள் செய்ய திருவுள்ளம் கொண்டவராய், தேவியுடன் தாமும் விடையின் மீது அமர்ந்தவராக குழந்தை இருந்த இடத்திற்கு அருகே வந்தார். அருகே வந்தவர், தேவியை நோக்கி, உனது திருமுலைப்பாலை ஒரு பொற்கிண்ணத்தில் பொழிந்து குழந்தைக்கு ஊட்டுவாய் என்று கூறினார். தேவியும் உடனே, பொற்கிண்ணத்தில் பாலை வைத்துக் கொண்டு, குழந்தையின் அருகே சென்று குழந்தையின் கண்களில் பெருகிய நீரினை துடைத்து, அடிசிலை உண்ணுவாய் என்று கூறினார். எண்ணரிய சிவஞானம் குழைத்து கொடுக்கப்பட்ட பால் என்று சேக்கிழார் கூறுகின்றார். வள்ளம்=கிண்ணம்

    அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருட்கருணை
    எழுகின்ற திருவுள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும்
    தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள்
    பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டென்ன    

    எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி
    உண் அடிசில் என ஊட்ட உமையம்மை எதிர் நோக்கும்
    கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொற்கிண்ணம் அளித்து
    அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார்

குழந்தைக்கு பிராட்டி ஊட்டிய பாலமுதம் வெறும் பசியினை போக்குவதை மட்டுமாக இல்லாமல், சிவஞானமும் கலந்து குழைத்து ஊட்டப்பட்டது என்று சேக்கிழார் மேற்கண்ட பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அம்மை ஊட்டிய பாலடிசிலை உண்ட குழந்தை, சிவபெருமானின் திருவடிகளை சிந்திக்கும் தன்மையையும் சிவபெருமானே மேலான பரம்பொருள் என்ற கலை ஞானத்தையும் பிறவிப்பிணியினை தீர்க்கவல்ல மெய்ஞானத்தையும் உணர்ந்தது என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். குழந்தையின் கண்களில் வடியும் நீரை துடைத்து, பாலை குடிக்குமாறு கூறி அழுகை தீர்த்த தேவியார், குழந்தை பால் குடித்து முடித்த பின் வாயை துடைத்ததாக பெரிய புராணத்தில் எங்கும் கூறவில்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் குழந்தைக்கு சோறு ஊட்டிய பின்னர், குழந்தையின் முகத்தையும் வாயினையும் நன்றாக அன்னைமார்கள் துடைப்பதை காண்கிறோம். ஞானப்பால் குழந்தை குடித்ததை உலகு அறியச் செய்யக் கருதிய பார்வதி தேவியார் அன்று குழந்தையின் வாயை, கடைவாயில் வழிந்து கொண்டிருந்த பால் துளியை, துடைக்கவில்லை போலும் அவ்வாறு துடைத்திருந்தால் குழந்தையின் தந்தை எவ்வாறு குழந்தையை கேள்வி கேட்பார்? குழந்தை ஞானப்பால் குடித்ததை உலகறியும் வண்ணம் இந்த நிகழ்ச்சி நடந்தேறியது. பரமனும் தேவியும் விடையுடன் மறைந்தனர். 

அவ்வமயம் கரையேறிய தந்தையார், குழந்தையின் வாயினில் இருந்த பாலின் துளியைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டவராய், தனது கையில் ஒரு குச்சியை ஏந்தியவராய், யார் கொடுத்த பாலடிசிலை நீ உண்டனை, எச்சில் மயங்கிட உனக்கு இட்டாரை காட்டு என்று மிரட்டினார். குழந்தை கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக, உச்சி மேல் குவித்த கைகளை எடுத்து ஒரு விரலாலே திருக்கோயிலின் கோபுரத்தை காட்டி, தோடுடைய செவியன் என்ற பதிகத்தை (முதல் திருமுறை, முதல் பதிகம்) பாடியவாறு, அம்மையப்பன் தான் தனக்கு பாலடிசில் அளித்தார் என்று உணர்த்தினார். தேவர்கள் பூமாரி பொழிய, நடந்த அதிசயத்தின் தாக்கத்தை தந்தையார் உணர்ந்தார். ஞானப்பால் குடித்த பின்னர் ஞானத்தின் தொடர்பு ஏற்பட்டு இறைவனைப் புகழ்ந்து பாடல்கள் பாடிய குழந்தையை அனைவரும் ஞானசம்பந்தர் என்று அழைத்தனர். குழந்தையின் இயற்பெயர் என்னவென்று பெரிய புராணத்தில் எங்கும் குறிப்பிடப் படவில்லை. 

இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானின் அடையாளங்கள் உணர்த்தப்பட்டு, அவனே பெருமைக்கு உரிய தலைவன் என்று ஒவ்வொரு பாடலில் கூறப்படுவதால், சைவ சமயத்திற்கு தலை சிறந்த ஆசானாக திருஞான சம்பந்தர் கருதப் படுகின்றார். ஆன்மாக்களுக்கு இறைவனையும், இறைவனை அடையும் வழிகளையும் உணர்த்தி உயிர்கள் தங்களது வினைகளைத் தீர்த்துக்கொண்டு இன்பமடையும் வழியை உணர்த்துவது ஆச்சாரியரின் இயல்பு என்பதால், அவ்வாறு தனது முதல் பதிகத்தில் உணர்த்திய, திருஞான சம்பந்தரை, சைவசமயத்தின் முதல் ஆசாரியராக கருதுகின்றனர். இந்த காரணம் பற்றியே, சம்பந்தர் அருளிய பாடல்களை முதல் மூன்று திருமுறைகளாக நம்பியாண்டார் நம்பியார் வகுத்தார் போலும்.

தமிழ் மொழியினைக் குறிப்பிடும் த் என்ற மெய்யெழுத்து மற்றும் வேதங்களின் முதற்சொல்லாகிய ஓம் என்ற எழுத்தையும் இணைத்து தோ என்ற எழுத்து முதல் எழுத்தாக வரும் வண்ணம் தோடுடைய செவியன் என்று பதித்தினை தொடங்கினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். மேலும் அடியார்கள் பாடும் பாடலைக் கேட்கும் உடல் கருவியாகிய செவியினையும் பிள்ளையார் சிறப்பித்தார் என்றும் கூறுகின்றார். இந்த உலகத்தில் உள்ள உயிர்கள், சிவத்தன்மை பெற்று செம்மையாக விளங்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பாடப்பட்ட பதிகம் என்றும் உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானை சுட்டிக் காட்டி உணர்த்தும் பதிகம் என்றும் சேக்கிழார் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.   

    செம்மை பெற எடுத்த திருத்தோடுடைய செவியன் எனும்
    மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் 
    தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு 
    இம்மை இது செய்த பிரான் இவன் என்றே என இசைத்தார் 
   

பாடல் 1:

    தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்
    காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
    ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
    பீடு உடைய  பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

   
விளக்கம்:

பிறக்கும் உயிர்கள் முதலில் அன்னையை உணர்ந்து பின்னரே, அன்னையால் சுட்டிக் காட்டப்பெறும் தந்தையை உணருகின்றன என்பதால் அன்னையை உணர்த்தும் சொல்லாக தோடு என்பதை முதலில் வைத்து, அத்தனை உணர்த்தும் சொல்லாகிய செவியன் என்பதை அடுத்து வைத்துள்ள பாங்கு ரசிக்கத்தக்கது. ஆகாயத்திலிருந்து எழும் நாதமே, மற்ற பூதங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருப்பதால் அந்த நாதத்தினை உள்வாங்கும் செவி முதலில் கூறப்பட்டுள்ளது. நமது உடலின் உறுப்புகளில், ஓம் என்ற எழுத்தினை உணர்த்தும் வடிவத்துடன் இருப்பது செவி என்பதால் செவி முதலாக கூறப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கின்றனர். நமது அகமும் புறமும் தூய்மையாக இருத்தல் அவசியம் என்பதை உணர்த்தும் வண்ணம் தூவெண் என்று கூறப்படுகின்றது. மேலும் தோடு என்ற அணிகலன் மங்கலத்தை குறிக்கும். எந்த பாடலையும் மங்கலச் சொல்லுடன் தொடங்குவது நமது முன்னோர்களின் வழக்கம்.

இந்த பாடலில் உணர்த்தப்படும் பொருட்கள், தோடு இடபம் வெண்மதி சுடலைப்பொடி, ஆகிய அனைத்தும் வெண்மை நிறம் படித்தவை. பிராட்டி பிள்ளையாருக்கு ஊட்டிய பாலும் வெண்மை நிறம் உடையது. மேலும் பாலுடன் கலந்து கொடுக்கப்பட்ட ஞானமும் வெண்மை நிறம் வாய்ந்தது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அறியாமையை இருளுக்கும் ஞானத்தை வெண்மைக்கும் ஒப்பிடுவது வழக்கம். வெண்மை நிறம் கொண்ட பாலினையும் வெண்மை நிறத்தால் உணர்த்தப்படும் ஞானத்தையும் உமையம்மை வாயிலாக பெற்ற சம்பந்தர்க்கு வெண்மை நிறப் பொருட்களே முதலில் அவரது கண்களில் பட்டது போலும். பெருமானின் அடையாளங்களாக, பாம்பு. ஏனக்கொம்பு, பெண் கலந்த உருவம், கங்கை நதி, ஆமை ஓடு, கோவண ஆடை, கங்கணம், செஞ்சடை, சிவந்த திருமேனி முதலியவை  இருக்க, வெண்மையான நிறத்தில் உள்ள பொருட்களை மட்டும் தேர்ந்து எடுத்தது இந்த பாடலின் தனிச் சிறப்பு. 

குணங்கள் பலவகையாக கூறப்பட்டாலும், அவை அனைத்தும் இராஜசம் தாமசம் சத்வம் என்ற மூன்றுள்ளே அடங்கும் என்று கூறுவார்கள். இவைகளை செம்மை, கருமை மற்றும் வெண்மை நிறத்தினால் குறிப்பிடுவது வழக்கம். வெண்மை நிறம் கொண்ட பால் ஊட்டப்பட்ட, சத்வ குணம் நிறைந்த குழந்தை வெண்மை நிறப் பொருட்களை முதலில் அடையாளமாக கண்டு கொண்டது இயல்பு தானே.
    
மேலே குறிப்பிட்டுள்ள பாடலில் முதல் அடியில் பத்து சொற்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அடிகளில் ஒன்பது சொற்களும் நான்காவது அடியில் எட்டு சொற்களுமாக மொத்தம் முப்பத்தாறு சொற்கள் உள்ளதை நாம் உணரலாம். இந்த முப்பத்தாறு என்ற எண்ணிக்கை சைவ சமயத்திற்கே உரித்தான முப்பத்தாறு தத்துவங்களை குறிக்கும் என்றும் விளக்கம் கூறுவார்கள்.   

செவி என்பதன் மூலம் அடியார்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வண்ணம் அவர்களது வேண்டுகோளை ஏற்கும் பேரருள் தன்மை உணர்த்தப் படுகின்றது. விடையினை வாகனமாக கொண்டுள்ள தன்மை, தன்வயத்தனாக இறைவன் இருக்கும் தன்மையை உணர்த்துகின்றது. தூவெண்மதி என்ற தொடரில் உள்ள தூ என்ற சொல் இறைவன் தூய உடம்பினனாக இருத்தலை உணர்த்துகின்றது மதி என்பதற்கு அறிவு என்ற பொருளும் பொருந்தும் என்பதால் மதி சூடி என்ற தொடர், இறைவனின் முற்றும் உணர்ந்தறியும் ஆற்றலை குறிப்பிடுகின்றது. பொடிபூசி என்ற தொடர் இறைவனின் வரம்பிலா இன்பமுடையவன் என்பதையும், உள்ளம் கவர் கள்வன் என்ற தொடர் இறைவன் இயற்கை உணர்வு உடையவனாக இருத்தலையும் இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனாக இருத்தலையும் குறிக்கின்றது என்றும் பெரியோர்கள் கூறுவார்கள் இவ்வாறு பெருமானின் எண்குணங்களை உணர்த்தும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.

தருமதேவதை என்றும் அழியாது இருக்கும் நித்தியத்தன்மை வேண்டியதால், அதனை இடபமாக மாற்றி பெருமான் தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார் என்று கூறுவார்கள். எனவே இந்த செயல் பெருமானின் படைக்கும் தொழிலை உணர்த்துகின்றது; வெண்மதி சூடி என்று சந்திரனை அழியாமல் காத்த செய்கை, பெருமான் செய்யும் காக்கும் தொழிலை உணர்த்துகின்றது; சுடலைப் பொடி என்ற சாம்பல் பெருமானின் அழித்தல் தொழிலை குறிக்கின்றது. கள்வன், தான் திருடிய பொருளை வைத்திருப்பதை எவரேனும் பார்த்து விட்டதால் தான் அகப்பட்டு விடுவோம் என்று கருதி தான் திருடிய பொருளை முதலில் மறைத்து வைப்பான் என்பதால் உள்ளம் கவர் கள்வன் என்ற குறிப்பு மறைத்தல் தொழிலையும், பிரமனுக்கு அருள் செய்த தன்மை அருளும் தொழிலையும் குறிக்கின்றது என்று உணர்த்தி, பரமன் செய்யும் ஐந்து விதமான தொழில்களையும் சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் கூறுவார்கள். விடையேறி மதிசூடி என்ற தொடர்கள் இறைவன் உருவமாக இருக்கும் நிலையையும், பொடிபூசி என்பது தனது திருமேனியை மறைத்துக் கொள்வது பற்றி அருவுருமாக இருக்கும் தன்மையையும், கள்வன் மறைந்து நிற்பான் என்பதால் கள்வன் என்ற சொல் அருவமாக இருக்கும் தன்மையையும் குறிக்கின்றது என்று விளக்கம் கூறுகின்றனர். 

மணிவாசகர், திருவெம்பாவையின் கடைசிப் பாடலில் இறைவனது ஐந்து தொழில்களைக் குறிப்பிடுவதை காணலாம். அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு காரணமாக இருந்த பாதங்கள் என்று படைத்தல் தொழிலையும், அனைத்து உயிர்களையும் காக்கும் பூங்கழல்கள் என்று காத்தல் தொழிலையும், ஈறாம் இணையடிகள் என்று அழித்தல் தொழிலையும், நான்முகனும் மாலும் காணாத புண்டரீகம் என்றும் மறைத்தல் தொழிலையும், இறுதியாக யாம் உய்ய ஆட்கொண்டருளிய பொன்மலர்கள் என்று அருளுவதையும் குறிப்பிடுகின்றார். மேலும் எண்குணத்தவனான ஈசனுக்கு எட்டு முறை போற்றுதல்கள் கூறி வாழ்த்துவதையும், எட்டு மலர்கள் பிடித்த ஈசனுக்கு எட்டு போற்றி கூறி வழிபட்டதையும் நாம் உணரலாம்.

    போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
    போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
    போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
    போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
    போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
    போற்றி யாம் மார்கழி நீராடலோர் எம்பாவாய் 

இந்த விளக்கத்தில் பாடலின் பொருளினை நாம் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக சொற்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பிரிக்கப்படாமல், சீர்கள் அமைந்துள்ள முறையில் பாடலை நாம் பார்த்தால், வேறு சில குறிப்புகள் உணர்த்தப்படுவதையும் நாம் காணலாம். இந்த பாடல் நான்கு அடிகளைக் கொண்டதாய் பெருமானை அடையும் சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு வழிகளையும் அதன் பயன்களை குறிப்பிடுகின்றது என்றும், ஒவ்வொரு அடியிலும் அமைந்துள்ள ஐந்து சீர்கள் ஐந்தொழிலையும், ஐந்தெழுத்தையும், ஐந்து மலங்களையும் (ஆணவம், கன்மம்,. மாயை, மாயேயம் மற்றும் திரோதனாம்) ஐந்து காரணக் கடவுளர்களையும் (பிரமன் திருமால் உருத்திரன் மகேசன் மற்றும் சதாசிவன்) குறிப்பதாக கூறுவார்கள். ஒவ்வொரு அடியிலும் மெய்யெழுத்து நீங்கலாக பதினெட்டு எழுத்துகள் இருக்கும் தன்மை பதினெண் வித்தைகளின் இயல்பையும் குறிப்பதாக கூறுவார்கள். 

    தோடுடை யசெவியன்விடை யேறியோர் தூவெண் மதிசூடி
    காடுடை யசுடலைப்பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன் 
    ஏடுடை யமலரான்முனை நாட்பணிந் தேத்த வருள்செய்த
    பீடுடை யபிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே 

தோடு விடை என்பன அஃறிணை; செவியன் என்பது உயர்திணை; எந்த தினையினைச் சார்ந்த உயிராக இருந்தாலும் இறைவனைப் பணிந்து வாழ்த்தி போற்றினால், அவனது அருள் கிடைக்கும் என்ற கருத்தும் இங்கே மொழியப்படுகின்றது. தோடு என்பதன் மூலம் பெண்மை உருவத்தையும் செவியன் என்பதன் மூலம் ஆண்மை உருவத்தையும் குறிப்பிட்டு மாதொரு பாகனாக இறைவன் உள்ள தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு இன்னும் பல விதமான விளக்கங்கள் பெரியோர்களால் அருளப்படும் வண்ணம் சிறந்த தன்மையில் அமைந்த பாடல் முதல் திருமுறையின் முதல் பாடலாக அமைந்த விதம், திருமுறைகளின் சிறப்புகளை உணர்த்துகின்றது என்று கூறுவார்கள். சுடலை= சுடுகாடு, சுடலைப்பொடி=சுடுகாட்டு சம்பல்; முற்றூழிக் காலத்தில் அனைத்துப் பொருட்களும் அனைத்து உயிர்களும் அழிந்த நிலையிலும், அழிவின்றி நிலையாக நிற்பவன் தான் ஒருவனே என்பதை உணர்த்தும் வண்ணம் பெருமான் சுடலைப்பொடி பூசி நிற்கின்றார் என்று கூறுவார்கள். ஏடுடைய மலர்=அடுக்காக இதழ்கள் அமைந்த தாமரை மலர்; பீடு=பெருமை; மேவிய=பொருந்திய; பண்டைய நாளில், படைப்புத் தொழிலை தான் சரிவர ஆற்றுவதற்கு இறைவன் அருளினை வேண்டி பிரமன் தவம் செயதமையால், இந்த தலத்திற்கு பிரமபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. பிரமபுரம் என்பது சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் முதலாவது திருப்பெயர். அந்த பெயரினை வைத்து முதல் பதிகம் பாடியதும் இந்த பதிகத்தின் மற்றொரு சிறப்பாகும்.

பொழிப்புரை:

ஒரு காதினில் தோட்டினையும் மற்றொரு காதினில் குழை ஆபரணத்தையும் அணிந்த பெருமான், இடபத்தை தனது வாகனமாகக் கொண்டும், தன்னிடம் சரணடைந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்ற வண்ணம், சுடுக்காட்டுச் சாம்பலினைத் தனது திருமேனி முழுதும் பூசியவராய் உள்ளார். அவர் எனது உள்ளத்தை கொள்ளை கொண்ட கள்வனாக விளங்குகின்றார்; இதழ்கள் அடுக்கடுக்காக அமைந்தள்ள தாமரை மலர் மேல் அமரும் பிரமன், பண்டைய நாளில் பெருமானைப் பணிந்து ஏத்த, பிரமன் தனது படைப்புத் தொழிலினை சரிவர செய்யும் வண்ணம் அருள் புரிந்தவர் சிவபெருமான்; இவரே பெருமை உடையதும் பிரமாபுரம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழி நகரினில் உறைபவரும் எனது பெருமை மிக்க தலைவனாகவும் இருக்கின்றார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com