91. தோடுடைய செவியன் - பாடல் 4

விண் மகிழ்ந்த
91. தோடுடைய செவியன் - பாடல் 4

பாடல் 4:

    
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு
                  தலை ஓட்டில்
    உண் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம்
                  கவர் கள்வன்     
    மண் மகிழ்ந்த அரவம் மலர்க் கொன்றை மலிந்த
                  வரை மார்பில்
    பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மன்
                   இவன் அன்றே

விளக்கம்:

மகிழ்ந்த=மகிழ்ந்து உலாவிய; தேரிய=தேடிக்கொண்டு வந்து; மண் மகிழ்ந்த அரவம்= தரையில் ஊர்ந்து செல்லும் தன்மை பற்றியும் மண்புற்றினைத் தான் வாழும் இடமாக கொண்டுள்ள தன்மை பற்றியும் மண் மகிழ்ந்த அரவம் என்று கூறுகின்றார். இந்த பாடலில் விண் மகிழ்ந்த மதில் என்று சம்பந்தப்பெருமான் கூறுகின்றார். எப்போதும் வானில் பறந்து கொண்டிருந்த கோட்டைகள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் தருணத்தில் அந்த கோட்டைகளை நோக்கி எய்யப்படும் ஒரே அம்பினைக் கொண்டு மட்டுமே அந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்ற வரத்தினைப் பெற்றிருந்ததால், அந்த கோட்டைகள் அவ்வாறு ஒரே நேர்க்கோட்டினில் நேரமும் மிகவும் குறைவானது என்பதால், அந்த வரமே மிகப் பெரிய அரணாக திரிபுரத்து அரக்கர்களுக்கு விளங்கியது என்பதை உணர்த்தும் வண்ணம் விண் மகிழ்ந்த மதில் என்று குறிப்பிடுகின்றார். பொதுவாக பிச்சை எடுப்பவர்கள் ஒரு வகையான கூச்சத்துடன் பிச்சை எடுப்பதை நாம் காண்கின்றோம். ஆனால்  உள்ளம் மகிழ்ந்த நிலையில் பெருமான் பிச்சை எடுப்பதாக சம்பந்தப் பெருமான் குறிப்பிடுகின்றார். உயிர்கள் தங்களைப் பற்றியுள்ள மலங்களை பிச்சையாக இட்டு உய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பெருமான் பிச்சை எடுப்பதால், தான் பிச்சை எடுப்பதை மிகுந்த மகிழ்வுடன் செய்கின்றார் என்று இங்கே கூறப்படுகின்றது.    

நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் தங்களை திருமால் பால் காதல் கொண்டுள்ள பெண்களாக உருவகப்படுத்திக் கொண்டு கூறும் சொற்களை, பராங்குச நாயகியின் (பராங்குசன் என்பது நம்மாழ்வாரின் மற்றொரு பெயர்) சொற்கள் என்றும் பரகால நாயகியின் சொற்கள் என்று (பரகாலன் என்பது திருமங்கை ஆழ்வாரின் மற்றொரு பெயர்) பாசுரங்களின் வியாக்கியானம் குறிப்பிடுகின்றது. அதே போன்று சம்பந்தர் தன்னை பெண்ணாக உருவகித்துக் கொண்டு கூறும் உரைகளை நாம் சம்பந்த நாயகியின் சொற்கள் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சம்பந்த நாயகி இங்கே, தனது இல்லம் தேடி பெருமான் வந்ததாக கற்பனை செய்து கொண்டு, அந்த தருணத்தில் அவனது அழகினைக் கண்ட தான் மயங்கி நின்று தனது உள்ளத்தை பறிகொடுத்ததால், உள்ளம் கவர் கள்வன் என்று பெருமானை அழைக்கின்றார். பெருமான் அணிந்துள்ள பாம்புகள் புற்றில் வாழ்வன அல்ல. எனினும் பாம்புகளின் பொதுத் தன்மை கருதி, மண் மகிழ்ந்த நாகம் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது.      

பொழிப்புரை:

வான்வெளியில் பறந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரையும் துன்புறுத்தி வந்த திரிபுரத்து அரக்கர்கள் தங்களது மூன்று கோட்டைகளையும் தாங்கள் பெற்றிருந்த வரத்தினால் தகர்க்க முடியாத அரணாக மாற்றியவர்கள். அத்தகைய வல்லமை உடைய  திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினை எய்தி அழித்ததவனும், தனது கையினில் பிரமனின் மண்டையோட்டினை ஏந்திய வண்ணம் உள்ளத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பலி ஏற்கச் செல்பவனும் ஆகிய பெருமான் என்னருகில் வந்து எனது உள்ளத்தினைக் கொள்ளை கொண்டுவிட்டான். மண் புற்றினை மிகவும் விரும்பி அதனில் பதுங்கி வாழும் பாம்பும் கொன்றை மலர்களும் அலங்கரிக்கும் தனது மலை போன்ற மார்பினில் இடப்பகுதியினில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உமை அன்னையை ஏற்றுக் கொண்டுள்ளவனும் பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது உள்ளத்தினைக் கொள்ளை கொண்ட கள்வனாவான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com