91. தோடுடைய செவியன் - பாடல் 6

வேத ஒலிகள்
91. தோடுடைய செவியன் - பாடல் 6


பாடல் 6:

    மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலர் ஆகி மழு ஏந்தி
    இறை கலந்த வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
    கறை கலந்த கடியார் பொழில் நீடு உயர் சோலைக் கதிர் சிந்தப்
    பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

இறை=முன்கை, மணிக்கட்டு;: சோர=ஒவ்வொன்றாக கழன்று விழ; கறை=இருள்; கடி= நறுமணம்; இன்=நல்ல தரம் வாய்ந்த. செழித்து வளர்ந்த சோலைகளில் மரங்கள் நெருங்கி அடர்த்து காணப்படுவதால் அவைகளை ஊடுருவிக் கொண்டு சூரியன் மற்றும் சந்திரனின்  வெளிச்சம் செல்ல முடியாமல் இருண்டு காணப்படுகின்றன என்பதை உணர்த்தும் வண்ணம் இருள் நிறைந்த சோலைகள் என்று கூறுகின்றார்.   

பொழிப்புரை:

தான் ஓதும் வேத ஒலிகள் காற்றினில் கலக்கும் வண்ணம் உரத்த குரலில் வேதங்கள் பாடியவாறும் நடனம் ஆடியவாரும் இருக்கும் பெருமான் தனது கையில் மழு ஏந்தியவராக உள்ளார். அவர் பால் தீவிரமான காதல் கொண்டிருந்த நான் அவரை அடைய முடியாத ஏக்கத்தினால் எனது உடல் மெலிய எனது முன்கைகளில் அணிந்திருந்த தரம் வாய்ந்த வெண் முத்து வளையல்கள். நழுவி விழுகின்றன. இவ்வாறு எனது வளையல்களையும் உள்ளத்தினையும் கவர்ந்த கள்வராக அவர் விளங்குகின்றார். சூரியனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவாத வண்ணம் செழித்து நெருங்கி வளர்ந்துள்ள நறுமணம் மிகுந்து இருளுடன் காணப்படும் சோலைகளில் தனது கதிர்கள் சிந்தும் வண்ணம் பிறைச் சந்திரன் உலாவும் சோலைகள் நிறைந்த பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் எனது உள்ளத்தினைக் கவர்ந்த கள்வன் உறைகின்றான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com