91. தோடுடைய செவியன் - பாடல் 9

பிரமனும் திருமாலும்
91. தோடுடைய செவியன் - பாடல் 9


பாடல் 9:

    தாணுதல் செய்து இறை காணிய மாலொடு
               தண் தாமரையானும்
    நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம்
               கவர் கள்வன்
    வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர்
               ஏத்தப்
    பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மன்
               இவன் அன்றே

விளக்கம்:

தாணுதல்=தாள்+நுதல், நுதல்=நெற்றி; தாள்=திருப்பாதங்கள்; திருவடியும் திருமுடியும். இறை=இறைவன், தம்முள் யார் பெரியவன் என்பதைக் கண்டறிய பிரமனும் திருமாலும் முயற்சி செய்தமை இங்கே குறிப்பிடப் படுகின்றது. நீளுதல் என்ற சொல் எதுகை கருதி நீணுதல் என்று திரிந்தது; நீளுதல்=மேலே பறந்தும் கீழே அகழ்ந்தும் நீண்ட தூரம் சென்றமை; நிமிர்தல்= அப்பாற்படுதல்; பேணுதல்=காத்தல்; வாணுதல்=வாள்+நுதல், ஒளி பொருந்திய நெற்றி; செய் மகளிர்=சிவந்த உடல் கொண்ட மகளிர்; 

பிரமனும் திருமாலும் இறைவனின் அடியையும் முடியையும் காணும் முயற்சியில் தோல்வி அடைந்து திகைத்து நின்ற நிகழ்ச்சி இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப் பெருமானின் பெரும்பாலான பதிகங்களில் இந்த நிகழ்ச்சி ஒன்பதாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. கல்விக்கு அதிபதியாக விளங்கும் நாமகளை மனைவியாக உடையவர் பிரமன். மேலும் அவரும் தினமும் வேதம் ஓதுபவராக உள்ளார். எனவே கல்வி அவரது வலிமையாக கருதப் படுகின்றது. செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் இலக்குமி தேவி திருமாலின் மனைவி. எனவே செல்வத்தின் அடையாளமாக அவர் கருதப் படுகின்றார். அவர்கள்; இருவரும் தங்களுக்கு உள்ள வலிமையினால், தங்களது வலிமை மீது செருக்கு கொண்டவர்களாய் இறைவனது அடியையும் முடியையும் காண்பதற்கு முயற்சி செய்தனர். இறைவன் கல்விக்கும் செல்வத்திற்கும் மயங்காதவன் என்பதையும் அன்புக்கும் பக்திக்கும் மட்டுமே அவன் கட்டுப்படுவான் என்பதை உணராமல் அவர்கள் முயற்சி செய்த போது, அவர்களால் காண முடியவில்லை; பின்னர் தங்களது தவறினை உணர்ந்து, இறைவனிடம் இறைஞ்சி வேண்டியபோது இறைவன் அவர்களுக்கு காட்சி கொடுத்தார் என்பது புராணம். எனவே இறைவன் தன்னைத் தொழும் அடியார்களுக்கு மட்டுமே அருள் புரிவார் என்பதே இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்தும் பாடம். எனவே தான் அன்புடன் இறைவன் வணங்க வேண்டும் என்ற இந்த செய்தி பதிகம் தோறும் சம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது. இதனை உணர்த்தும் சேக்கிழாரின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த பதிகத்து பாடலில், தன்னைத் துதிக்கும் உலகத்தவருக்கு பெருமான் அருள் புரிகின்றார் என்று குறிப்பிட்டு பெருமானை துதிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றார். 

    தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்
    வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
    இழிவாகும் கரு விலங்கும் பறவையுமாய் எய்தாமை 
    விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்   .
 

பொழிப்புரை:

தங்கள் இருவரில் யார் பெரியவர் என்பதை அறியும் முயற்சியில், வாதம் செய்து கொண்டிருந்த தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காணும் முயற்சியில், பன்றியாக மாறிய திருமாலும் அன்னமாக உருவெடுத்த பிரமனும் நெடுந்தூரம் சென்ற போதும் அவர்களால் தங்கள் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை; அவ்வாறு அண்ணாமலையாக நிமிர்ந்தவன் எனது உள்ளம் கவர் கள்வனாக உள்ளான். ஒளி பொருந்திய நெற்றியையும் சிவந்த மேனியையும் உடைய மகளிர் உள்ளிட்டு உலகத்தவர் பலரும் பெருமானை துதிக்க, பெருமான் அவர்களை காத்து அருள் புரிகின்றார். அவரே எனது உள்ளத்தினை கவர்ந்த கள்வரும், பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தினில் உறையும் எனது பெருமைக்கு உரிய தலைவர் ஆவார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com