110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 5

திருமேனியில் பாம்பினையும்
110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 5

பாடல் 5:

    பொன்னினார் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள
    மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவம் மேவு வெண்ணீறு மெய் பூசித்
    துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளித்
          தொன்மையார் தோற்றமும் கேடும்
    பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

விளக்கம்:

கேடு=அழித்தல்; பன்னுதல்=மீண்டும் மீண்டும் ஒரே செயலைச் செய்தல். ஒருமுறை பேசிய சொற்களையே மீண்டும் மீண்டும் பேசுதலை பன்னி பன்னி பேசுதல் என்று கூறுவார்கள். வடம்=மாலை; பொறி=புள்ளிகள், இங்கே புள்ளிகள் உடைய வண்டு; துன்னிய=நெருங்கிய, தன்னை வந்தடைந்த; 

பொழிப்புரை:

பொன் போன்றதும் புள்ளிகள் உடைய வண்டுகள் இடைவிடாது மொய்ப்பதும் ஆகிய  கொன்றை மாலையை மார்பில் அணிந்தவரும், முப்புரி நூல் அணிந்தவரும் ஆகிய பெருமான் மின்னல் போன்று ஒளிவீசும் தனது திருமேனியில் பாம்பினையும் தரித்து தனது உடல் முழுவதும் வெண்ணீறு பூசியவராக காணப்படுகின்றார். அவர் தன்னை வந்தடைந்த சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறத்தின் பொருளை உபதேசம் செய்தவர். பண்டைய காலம் தொட்டே, எத்தனை முறை என்று நாம் எவரும் கணிக்க முடியாத வண்ணம், உலகினை மீண்டும் மீண்டும் தோற்றுவித்தும் அழித்தும், உயிர்கள் தங்களது மலத்தினைக் கழித்துக் கொள்ளும் வாய்ப்பினை தொடர்ந்து அளித்து வருகின்றார். அத்தகைய பெருமான் பந்தணைநல்லூர் தலத்தில் பசுபதியாக வீற்றிருக்கின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com