111. பூங்கொடி மடவாள் - பாடல் 2

மழை பொழிகின்றது
111. பூங்கொடி மடவாள் - பாடல் 2

பாடல் 2:

    சம்பரற்க்கு அருளிச் சலந்தரன் வீயத் தழல் உமிழ் சக்கரம் படைத்த
    எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில்
    அம்பரமாகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும்
    உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே

விளக்கம்:

சம்பரன் என்று இருவர் புராணங்களில் குறிப்பிடப் படுகின்றனர். பாகவதத்திலும் இராமாயணத்திலும் சம்பரன் என்ற பாத்திரங்கள் வருகின்றன. இராமாயணத்தில் வரும் சம்பரன் என்ற அசுரன், இந்திரனை வென்றவன். அவன் சிவனடியாராக திகழ்ந்ததும் கூறப் படுகின்றது. சம்பரனிடம் போரில் தோற்ற இந்திரன் மறுபடியும் சம்பரனுடன் போர் தொடுத்தபோது இராமனின் தந்தையாகிய தசரதன் இந்திரனின் உதவிக்கு சென்று சம்பரனை வென்றதாகவும், அவனது பத்து தேர்களை பறித்தமையால் தசரதன் என்ற பெயர் வந்ததாக சொல்லப் படுகின்றது. 

காமனை பரமன் எரித்து அழித்த பின்னர் இரதி தேவி தனது கணவனுக்கு மீண்டும் உயிர் அருள வேண்டும் என்று வேண்டிய போது சிவபெருமான், மன்மதன் இரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் வண்ணம் உயிர்ப்பிக்கின்றார். மேலும்  மன்மதனை உருவம் உள்ளவனாக கண்டு அவனுடன் வாழ்ந்து மகிழும் வாய்ப்பு மீண்டும் திருமால் கண்ணனாக அவதாரம் எடுக்கும் போது கிடைக்கும் என்று பெருமான் இரதி தேவியைத் தேற்றுகின்றார். அந்த வாய்ப்பு தான், ருக்மிணியின் மகன் பிரத்யும்னன் மாயாதேவியை மணந்தபோது இரதி தேவிக்கு கிடைக்கின்றது. சம்பரன் என்ற அரக்கனின் வளர்ப்பு மகளாக இரதி தேவி மாயாதேவி என்ற பெயரில் வளர்கின்றாள். சம்பரனால் கடலில் வீசி எறியப் பட்ட பிரத்யும்னன் சம்பரனின் நகருக்கு வந்து சேர்கின்றான். மாயாதேவி பிரத்யும்னன் மீது காதல் கொண்டு, அவனை திருமணம் புரிகின்றாள். இந்த திருமணத்திற்கு சம்பரன் எதிர்ப்பு தெரிவித்தமையால், மன்மதனுக்கும் சம்பரனுக்கும் இடையே போர் மூள்கின்றது. மன்மதன் அந்த போரினில் வென்றதால், மன்மதனுக்கு சம்பராரி என்ற பெயர் வந்தது என்று கூறுவார்கள். 

இருக்கு வேதத்திலும் சிந்து சமவெளியில் சம்பரன் என்ற மன்னன் ஆட்சி புரிந்ததாக குறிப்பு வருகின்றது என்று கூகுள் (googgle) தேடல் உணர்த்துகின்றது. அவன் சிறந்த சிவபக்தனாக திகழ்ந்ததாகவும் நல்ல முறையில் ஆட்சி புரிபவனாகவும் இருந்ததாகவும் குறிப்புகள் காணப் படுகின்றன. இம்மூவரில் எவர்க்கு பெருமான் அருள் செய்தார் என்றும் எத்தைகைய அருள் புரிந்தார் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்பது தெளிவாக தெரியவில்லை. பல உரையாசிரியர்கள் சம்பரன் என்பவன் அசுரன் என்றே குறிப்பிடுகின்றனர். 

சலந்தரன் அழிந்த வரலாறு இந்த தலத்து பெருமான் சன்னதியில் சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளது. அந்த சிற்பத்தை காணும் நமக்கு இந்த பாடல் நினைவுக்கு வரும் வண்ணம், சம்பந்தர் சலந்தரனை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் சலந்தரனுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொள்ள, தன்னுடன் போர் புரிவதற்கு எவரும் இல்லாததால். சிவபெருமானைத் தேடி கயிலாயம் செல்ல சலந்தரன் நினைத்தான். அவ்வாறு கயிலாயம் நோக்கி சென்று கொண்டிருந்த சலந்தரனை, சிவயோகி வடிவம் தாங்கிய வேடத்தில் பெருமான் எதிர்கொண்டதையும், சிவபிரானுடன் சண்டை போடும் எண்ணத்தை கைவிடும்படி யோகி கூறியதால் அரக்கன் யோகி பேரில் கோபம் கொண்டதையும், யோகி பால் பொங்கிய சலந்தரன் என்று திருமூலர் கூறுகின்றார். அரக்கன் தனது வலிமை குறித்து கர்வத்துடன் பேச, யோகியாக இருந்த பெருமான் தரையில் தான் கிழித்த வட்டத்தை பேர்த்து எடுக்க முடியுமா என்று அரக்கனை கேட்க, அரக்கனும் அந்த வட்டமான நிலத்தை பேர்த்து எடுத்து தனது தலையின் மீது தூக்கி வைத்துக் கொள்ள முயற்சி செய்த போது, அந்த சக்கரம் அரக்கனின் உடலை இரண்டு கூறாக கிழித்தது. அத்தகைய சிறந்த சக்கரப் படை தான் திருமாலுக்கு பெருமானால் பரிசாக அளிக்கப் பட்டது.    

    எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற
    அங்க முதல்வன் அருமறை யோகி பால்
    பொங்கும் சலந்தரன் போர்ச் செய்ய நீர்மையின்
    அங்கு விரல் குறித்து ஆழி செய்தானே  

தசபுராணத் திருப்பதிகத்திலும் அப்பர் பிரான் இந்த நிகழ்ந்த நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். இந்தப் பாடலில் சிவபிரான் தனது கால் விரலினால் நிலந்தனில் ஒரு வட்டம் கீறி, அந்த வட்டத்தை சக்கரமாக மாற்றி சலந்தரன் உடல் பிளந்த வீரச் செயல் கூறப்பட்டுள்ளது. சக்கராயுதத்தை உடைய திருமாலை ஆழியான் என்று அழைப்பதை நாம் இங்கே உணரலாம்.

    தடமலர் ஆயிரங்கள் குறைவு ஒன்றதாக நிறைவு என்று தன் கண் அதனால்
    உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும்
    சுடரடியால் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
    அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவனா நமக்கோர் சரணே

வீய=அழிய; சலந்தரன் அழியும் வண்ணம் தழலை உமிழ்கின்ற சக்கரம் படைத்தவன் என்று சம்பந்தர் இந்த பாடலில் பெருமானை குறிப்பிடுகின்றார். அம்பரம்=ஆகாயம்; அம்பரமாகி= ஆகாயத்தினை அடைந்து; அந்தணர்கள் செய்யும் வேள்விப் புகை ஆகாயத்தை அடைந்து குளிர்ந்த மேகத்தை தழுவவதால் மழை பொழிகின்றது என்று குறிப்பிடும் சம்பந்தர், உலகில் மழை பொழிவிக்கும் செயலைச் செய்யும் அந்தணர்கள் தேவர்களால் போற்றப் படுகின்றனர் என்று இந்த பாடலில் கூறுகின்றார். வேள்விகள் மழையை பொழிவிக்கின்றன என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது 

இவ்வாறு அந்தணர்கள் செய்யும் வேள்வியால் மழை பொழிகின்றது என்று இங்கே குறிப்பிடுவது நமக்கு வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பாடலை நினைவூட்டுகின்றது. வேதநெறி தழைத்து ஓங்கவும் சைவநெறி நாட்டில் தழைத்து ஓங்கவும், அவதாரம் செய்த திருஞானசம்பந்தர், அனல் வாதத்தில் சமணர்களை வெற்றி கொண்ட பின்னர், புனல் வாதம் செய்த போது, பாடிய பாசுரத்தின் முதல் பாடலில், பாண்டிய நாடும் பாண்டிய நாட்டு மக்களும் சிறப்பாக வாழவேண்டும் என்று இறைவனை வேண்டும் பாடலில், வேள்விகளை வளர்க்கும் அந்தணர்கள் வாழ வேண்டும் என்றும், வேள்விகள் செய்வதற்கு உரிய பொருட்களைத் தந்து உதவும் பசுவினங்கள் வாழ வேண்டும் என்றும், வேள்வியில் வழங்கப்படும் ஆகுதிகளை பெறுகின்ற தேவர்கள் வாழ வேண்டும் என்றும், நாட்டில் மழை பொழிய வேண்டும் என்றும், நாட்டில் நீர்வளம் பெருகி நாடும் நாட்டின் மக்களும், நாட்டின் வேந்தனும் ஓங்கி வளர வேண்டும் என்றும் பாடும் பாடல். நாட்டில் தீய சக்திகள் அனைத்தும் அழிந்து, எங்கும் சிவன் நாமமே ஒலிக்கப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தையும் இந்த பாடலில் (3.54.1) தெரிவிக்கின்றார். 

    வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
    ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
    சூழ்க வையகமும் துயர் தீரவே  

பொழிப்புரை:

சம்பரன் என்ற அசுரனுக்கு அருளியும் சலந்தரன் அழிய நெருப்பினை உமிழும் கூரான முனைகள் உடைய சக்கரத்தை படைத்தும் திருவிளையாடல் புரிந்த பெருமான், தேவர்கள் வணங்கிப் போற்றும் வண்ணம் விருப்பமுடன் இனிதாக வீற்றிருந்து அருளும் இடம் யாது என்று நீங்கள் வினவுவீராயின் சொல்கின்றேன் கேட்பீர்களாக; அந்தணர்கள் வளர்க்கும் வேள்விப் புகை ஆகாயத்தைச் சென்றடைந்து ஆங்குள்ள குளிர்ந்த மேகங்களைத் தடவி, உலகம் செழிப்புடன் விளங்க மழை பொழியச் செய்வதை, தேவர்கள் போற்றுகின்றனர். அத்தகைய அந்தணர்கள் வாழும் ஓமமாம்புலியூர் தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயில் தான் பெருமான் உறையும் இடம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com