தைவான் தமிழ்ச்சங்க இலக்கிய அமர்வின் இரண்டாம் அமர்வு

தைவான் தமிழ்ச் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் இரண்டாம் அமர்வு ஷின்சு (Hsinchu) நகரில் உள்ள தேசிய சிங்ஹுவா பல்கலைகழகத்தில் (National Tsing Hua University) சிறப்பாக நடை
தைவான் தமிழ்ச்சங்க இலக்கிய அமர்வின் இரண்டாம் அமர்வு

தைவான் தமிழ்ச் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் இரண்டாம் அமர்வு ஷின்சு (Hsinchu) நகரில் உள்ள தேசிய சிங்ஹுவா பல்கலைகழகத்தில் (National Tsing Hua University) சிறப்பாக நடைபெற்றது. 

இவ்வமர்வை முனைவர் மகேஷ் அவர்கள் வாழ்த்துரையோடு தொடங்கி வைத்தார் உதயணன் அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.

தமிழில் அறிவியல்

முதலாவதாக ‘’தமிழில் அறிவியல்’’ என்ற தலைப்பில் தேசிய தைபே தொழில்நுட்ப பல்கலைக்கழக (National Taipei University of Technology) முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் செல்வன் குபேந்திரன் அவர்கள் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப தரவுகளை தமிழில் கொணர்வதன் அவசியத்தை முன்னிறுத்தி பேசினார். ஒருவர் ஒரு விடயத்தை தெளிவாக விளக்கமுடியவில்லையெனில் அவ்விடயத்தைப் பற்றிய தெளிவு அவருக்கே இல்லை என்பதுதான் உண்மை என்பது இந்நூற்றாண்டின் ஒப்பற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டினின் கூற்று. எதையும் ஒருவர் தன் தாய்மொழியில் கற்கும்போது அதனைப் பற்றிய தெளிவு சிறப்பாக இருக்கும். இதுவே புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். எடுத்துக்காட்டாக ஒருவர் மின்கலத்தை பற்றி ஆய்வு செய்வாரெனில் அதனைப்பற்றிய ஆழ்ந்த அறிவு இருந்தால் மட்டுமே அதனைப்பற்றி விளக்குவதும் அதில் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்துவதும் சாத்யம். அந்த ஆராய்ச்சியாளர் மின்கலம் பற்றி தன் தாய்மொழியில் படிக்கும்போது அவ்வகையான ஆழ்ந்த அறிவு பெறமுடியும். அவரவர் தாய்மொழியில் அறிவியல் தரவுகள் இருந்தால் அறிவியல் தவறாக போதிக்கப்படும்போது சாமானியனாலும் கேள்வி எழுப்பவும் அதேசமயம் விளக்கவும் முடியும். எனவே, அறிவியல் கூற்றுகளை நம் தமிழ் மொழி படுத்துதல் வேண்டும். அவ்வாறு அறிவியல் கூற்றுகளை மொழிமாற்றம் செய்யும்போது அவற்றுக்கான புதிய சொற்களை உருவாக்குதல் அவசியம். ஏனெனில் ஏற்கனவே தமிழாக்கம் செய்யப்பட அறிவியல் தரவுகளில் சம்ஸ்கிருதம் போன்ற பிறமொழிச் சொற்களையே அதிகம் பயன்படுத்தியுள்ளனர். எனவே அறிவியல் தரவுகளை எளிய தமிழில் கொணர்தல் வேண்டும். அறிவியல் மட்டுமல்லாது மருத்துவம் சார்ந்த தரவுகளையும் தமிழ்படுத்துவது அவசியம். தமிழில் உள்ள எண்ணற்ற இலக்கண, இலக்கியங்கள் போல் அறிவியல்சார் தரவுகள் வளரவேண்டும். இவ்வாறு செய்வதால் நம் செம்மொழியாம் தமிழ்மொழி மென்மேலும் வளர்வதோடு மட்டுமில்லாமல், தமிழில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும் என்பதே நிதர்சனம். உலகின் மிகப்பெரும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் தாய்மொழிக்கல்வியின் மூலமே நடந்தேறியுள்ளது. இறுதியாக ‘’சென்றிடுவீர் எட்டுதிக்கும் வென்றிடுவீர் அனைத்து செல்வங்களையும்’’ என்ற பாரதியின் கூற்றை மேற்கோளிட்டு தமிழன் அறிவியல் உலகை வெல்ல அறிவியல் தரவுகளை தமிழ்படுத்துதல் அவசியம் என பேசிமுடித்தார்.

தமிழன் எங்கே போகிறான்

இரண்டாவதாக ‘’தமிழன் எங்கே போகிறான்’’ என்ற தலைப்பில் தேசிய தைவான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக (National Taiwan University of Science and Technology) முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் செல்வன் ஆதிசங்கரன் அவர்கள் பேசினார். இந்திய துணைக்கண்டத்தின் மூத்தகுடி நம் தமிழ்க்குடி என்பது மட்டுமில்லால் உலகின் வெகுசில மூத்தகுடிகளுள் ஒன்று, இவை அனைத்தும் நாம் அறிந்ததே. இதற்கு வலுசேர்க்கும் வகையில்தான் அமைந்துள்ளது சமீபத்திய கீழடி தொல்பொருள் அகழ்வாராய்ச்சி. அங்கு தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களின் மூலம் நம் தமிழ் நாகரீகம் சிந்துசமவெளி நாகரீகத்திரிற்கு முந்தையது என நிரூபிக்கப்பட்டுள்ளது.  சங்கமமைத்து வளர்த்த நம் தமிழ் மொழி வள்ளுவனாலும் இளங்கோவடிகளாலும் இன்னும் பிற தமிழறிஞர்களாலும் எழுச்சி அடைந்தது. அத்தகைய தொன்தமிழும், தமிழ்குடி மக்களாகிய நாமும் தற்போதைய நிலையில் சற்று பின்தங்கி இருப்பதாகவே கருதப்படுகிறது. குறிப்பாக தற்போதைய முக்கிய பிரச்சினைகளாக இருக்கக்கூடிய கதிரமங்கலம் கச்சா எண்ணெய் பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை இன்னும் பல பிரச்சினைகள் மூலம் நம்மையும் நம் தமிழையும் நசுக்க பலர் முனைவதாகவே கருதப்படுகிறது. முக்கியமாக மேற்குறிப்பிட்ட கீழடி தொல்பொருள் அகழ்வாராய்ச்சியை உலகின் பார்வையில் இருந்து மறைக்கப்படுவதன் நோக்கம் நம்முடைய தமிழினம் உலகின் மிகத்தொன்மையானவன் என்பதை மறைக்கப்படுவதாவே கருதப்படுகிறது. நம் முன்னோர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகரமைத்து வாணிபம், தொழில் வளர்ச்சியோடு கலையையும் வளர்த்துள்ளனர் என்பது கீழடி ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.  ஆதிதமிழனின் நகரமாக கருதப்படும் மதுரை திருப்பரங்குன்றத்திற்கு   தென்கிழக்கில்   இருந்ததாகவே சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள மதுரை பற்றிய குறிப்பு.  கீழடி, திருப்பரங்குன்றத்திற்கு   தென்கிழக்கில் இருப்பதால் சங்க இலக்கியத்தின் மதுரை நகரமாகவே இருக்குமென அங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் சான்றளிப்பதாகவே உள்ளது. இறுதியாக ‘’பொன்விளைந்த பூமி‘’ என்ற எழுச்சிமிகு கவிதையை படித்து நாம் ஒன்று சேர்ந்து எழுச்சி பெறுவோமென பேசி முடித்தார்.

திருக்குறளின் சிறப்பு

மூன்றாவதாக ‘’திருக்குறளின் சிறப்பு’’ என்ற தலைப்பில் தேசிய சிங்ஹுவா பல்கலைகழக (National Tsing Hua University) முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் செல்வி பிரியதர்ஷினி அவர்கள் பேசினார்.  ‘’வள்ளுவன் தன்னை உலகினுக்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’’ என்ற பாரதியின் கூற்றை மெய்ப்பிப்பவாறு திருக்குறளின் சிறப்பு அளப்பரியது. வள்ளுவர் திருக்குறளை தமிழின் முதல் எழுத்தான அகரத்தில் ‘’அகர முதல எழுத்தெல்லாம்’’ என தொடங்கி, ‘’கூடி முழங்கப்பெறின்’’ என தமிழின் இறுதி எழுத்தான றன்னகரத்தில் முடித்துள்ளார்.  இவ்வாறு தமிழின் தோளோடு தோள் சேர்ந்து நிற்கும் திருக்குறள் தமிழர் வாழ்வியல் மற்றும் வாழ்வில் மேற்கொள்ளவேண்டிய நற்செயல்கள் உள்ளிட்ட தமிழர் வாழ்வின் அனைத்து சாராம்சங்களையும் உள்ளடக்கியது. அறம், பொருள், இன்பம் என வாழ்வின் மூன்று முக்கிய சிந்தனைகளை எடுத்துரைக்கும் வள்ளுவர் அறத்துப்பாலில் அடக்கமுடைமை, ஓழுக்கமுடைமை என மேலும் பல வாழ்வின் அறங்களை எடுத்துரைத்துள்ளார். அறம், இன்பம் ஆகியவற்றிற்கு முறையே 38, 25 அதிகாரங்களை கொடுத்துள்ள வள்ளுவர் பொருளுக்கு மட்டும் அதிகமான 70 அதிகாரங்களை கொடுத்துள்ளார். இதன் மூலம் பொருட்பாலின் முக்கியத்துவம் விளங்கும். பொருட்பாலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எக்காலத்துக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக கல்வி முறைபற்றி கல்வியாதிகாரத்தில் கூறியுள்ளவை எக்காலத்துக்கும் பொருந்துபவை. சான்றாக, 1330 குறட்பாக்களில் ‘’கற்க கசடற’’ எனத்தொடங்கும் குறளில் மட்டுமே துணைக்கால் பயன்படுத்தவில்லை, இதன் மூலம் கல்வி பயின்றவன் எவரின் துணையின்றி வீறுநடை போடலாம் என்பதை குறிப்பால் உணர்த்தியுள்ளார்.  மேலும் உலகத்தோடு ஒத்துவாழ் என்பதை வள்ளுவர் ‘’எவ்வது உறைவது’’ என்ற குறள் மூலம் உறக்கக் கூறியுள்ளார். மேலாண்மை பற்றி ‘’இதனை இவன் முடிக்கும்’’ என்கிற குறள் மூலம் கூறியுள்ளவை அனைத்தும் எக்காலத்திற்கும் பொருந்துபவை.  உலகத்திற்கு தேவையான அனைத்தையும் எடுத்துரைத்துள்ள வள்ளுவர் அறிவியலைப் பற்றியும் ‘’தொட்டனைத்தூறும்’’, ‘’வெள்ளத்தைனைய’’ எனத்தொடங்கும் குறள்களின் மூலம் கூறியுள்ளார். மேலும் ‘’சுழன்றும் ஏர்பின்னது உலகம்’’ எனத்தொடங்கும் குறள் மூலம் இந்த உலக உருண்டை சுழல்வது பற்றி மிகப்பெரிய அறிவியலை 2000 ஆண்டுகளுக்கு முன்பே விளக்கியுள்ளார். உழவு அதிகாரத்தின் மூலம் உழவனின்றி அமையாது உலகம் என்கிற தத்துவத்தை நாம் தற்போதுதான் உணருகின்ற இத்தருணத்தில் அதனை 2000 ஆண்டுகளுக்கு முன்பே முகத்தில் அறைந்தாற்போன்று கூறியுள்ளார் என தனது உரையை முடித்தார். 

தமிழ் தீவிரவாளர்

நான்காவதாக ‘’தமிழ் தீவிரவாளர்’’ என்ற தலைப்பில் தேசிய சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில் (National Tsing Hua University) இருந்து    முனைவர் வசந்தன் திருநாவுக்கரசு அவர்கள் பேசினார். யார் தீவிரவாளர்? ஏன் தமிழ் தீவிரவாளர் பிற இனங்களில் இல்லையா இத்தகைய தீவிரவாளர்கள்? அது ஏன் தமிழர்களுக்கு இப்பட்டம் தரப்படுகிறது? என அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்ததுமட்டுமில்லாமல் அதற்கான விடையையும் அவரே எடுத்துரைத்தார்.  தான் எண்ணியதை எண்ணியவாறே முடிகின்றவன் தமிழன், திண்ணிய எண்ணம் கொண்டவன் தமிழன். இவையனைத்தும் ஒரு தீவிரவாளர்க்கு பொருந்தும், எனவேதான் தமிழனுக்கு இப்பட்டமோ?? தீவிரம் என்பதற்கு புரட்சி என்றோர் பொருள் உண்டு.  தமிழில் புரட்சிக்கு கவிதைகள் பல உண்டு, அத்தகைய கவிதைகளையும் பாடல்களையும் படைத்த புரட்சிக்கவிஞர்கள் பலர் இருந்ததனாலோ, இருப்பதனாலோ இத்தைகைய பட்டம் தமிழனுக்கு? என எடுத்துரைத்த அவர் மேலும் சில தமிழ் புரட்சிக்கவிஞர்கள் பற்றி பேசினார். குறிப்பாக கவிஞர் கண்ணதாசன் ‘’மயக்கமா கலக்கமா’’, ‘’எதையும் தாங்கும் இதயம்’’ போன்ற பல பாடல்கள் மூலம் கலக்கத்தைக்கூட நாம் எப்படி எதிர்கொள்ளல் வேண்டுமென கற்றுத்தந்தவன். இரண்டாவதாக பாவேந்தர் பற்றி பேசும்போது ‘’வறியவர்க்கெல்லாம்’’ எனத்தொடங்கும் பாடல் மூலம் கல்விச்சிரமங்களை பற்றியும், ‘’எங்குகாணும்’’ எனத்தொடங்கும் பாடல் மூலம் பெண்ணியத்தை பற்றியும், ‘’கனியிடை’’ எனத்தொடங்கும் பாடல் மூலம் தமிழின் மீதுள்ள தான் நேசத்தை எடுத்துரைத்த புரட்சிக்கவிஞனவன் என்றார்.   மூன்றாவதக பாவேந்தனுக்கும் கண்ணதாசனுக்கும் மேலான புரட்சிகவிஞன் பாரதியார் பற்றி பேசும்போது ‘’தேடிசோறு நிதம்தின்று’’ எனத்தொடங்கும் பாடல் மூலம் தமிழனை வீறுகொள்ளச் செய்தவன் பாரதி. ‘’மனதில் உறுதி வேண்டும்’’ பாடல் மூலம் பெண் விடுதலை மற்றும் தாய்மண் காப்பதை பற்றி எடுத்துரைத்துள்ளார். ‘’நல்லதோர் வீணை செய்தே’’ என்கிற பாடல் பாரதியின் தமிழ் தேச நேசத்திற்கு சான்று.  ‘’நிற்பதுவே நடப்பதுவே’’ பாடல் அவன் கண்டதையும் ரசித்ததையும் கீச்சிடும் கீறலாய் படைத்தானவன். இறுதியாக ‘’அச்சமில்லை அச்சமில்லை’’ பாடல் மூலம் எதற்கும் அஞ்சாமல் வீரநடை போட கற்றுத்தந்தவன் பாரதி என தனது உரையை முடித்தார். இந்நிகழ்ச்சியில் தைவானில் வாழும் தமிழ் ஆர்வலர்கள் பலரும், தைவான் தமிழ் சங்க துணை தலைவர்கள் முனைவர் சங்கர் ராமன் , திரு ரமேஷ் பரமசிவம், பொது செயலாளர் ஆதி பிரசன்னன் , துணை பொது செயலாளர் பொன்முகுந்தன் சுந்தரபாண்டி மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி தமிழ் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

- இரமேஷ்  பரமசிவம்
துணை தலைவர், தைவான் தமிழ் சங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com