விளையாட்டு - 2017

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி-பாலிவுட் நடிகை அனுஷ்கா திருமணம் இத்தாலியில் நடைபெற்றது.
விளையாட்டு - 2017

ஜனவரி
 2 பிசிசிஐ மறுசீரமைப்புக்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தத் தவறியதாக பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கம் செய்து தாக்குர், கான்வில்கர், சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. பிசிசிஐ-யின் 88 ஆண்டுகால வரலாற்றில் இவ்வாறு நடப்பது இது முதல் முறையாகும்.
 7 இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தானி மட்டேக் சான்ட்ஸுடன் இணைந்து பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார். இது, அந்த சீசனில் அவரது முதல் பட்டமாகும்.
 8 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி சாம்பியன் ஆனது. 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை ஓபனில் இந்திய ஆடவர் ஜோடி பட்டம் வென்றது இது முதல் முறையாகும்.
 29 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது, அவரது 18-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
 பிப்ரவரி
 19 ஐபிஎல் கிரிக்கெட்டில் உள்ள ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக எம்.எஸ்.தோனி ஒப்புக்கொண்டதாக தெரிவித்த அணி நிர்வாகம், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை அந்தப் பொறுப்புக்கு நியமித்தது.
 மார்ச்
 15 ஐசிசி தலைவர் பதவியை, பிசிசிஐ முன்னாள் தலைவரான சஷாங்க் மனோகர் ராஜிநாமா செய்தார். போட்டி விதிமுறைகளில் அவர் கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளை பிசிசிஐ எதிர்ப்பதாக கூறப்பட்ட நிலையில், சஷாங்க் மனோகர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
 ஏப்ரல்
 2 இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினை வீழ்த்தி பட்டம் வென்றார். இது, அவரது 2-ஆவது சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.
 24 நியூஸிலாந்தில் நடைபெற்ற முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 101 வயது மூதாட்டியான மான் கெüர், 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு நிமிடம் 14 விநாடிகளில் பந்தய இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.
 மே
 21 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
 ஜூன்
 8 இந்தியாவின் ரோஹன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரியேலா டப்ரெளஸ்கியுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார். இது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இந்த பட்டத்தை வென்ற 4-ஆவது இந்திய வீரர் போபண்ணா ஆவார்.
 11 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். அத்துடன், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
 18 லண்டனில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது பாகிஸ்தான். இது அந்த அணியின் முதல் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாகும்.
 20 இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்தார். கேப்டன் விராட் கோலி-கும்ப்ளே இடையே கருத்து மோதல் நிலவுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் இந்த முடிவை மேற்கொண்டார்.
 ஜூலை
 5 ஆசிய ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கஜ் அத்வானி, லக்ஷ்மன் ராவத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
 11 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், அணியின் இயக்குநராக இருந்தவருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
 12 மகளிருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமையை இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பெற்றார். இந்தச் சாதனையை, மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது அவர் எட்டினார்.
 15 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸô, 7-5, 6-0 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ûஸ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
 16 விம்பிள்டன் டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 6-3, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் விம்பிள்டனில் 8-ஆவது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்த அவர், மாடர்ன் எராவில் விம்பிள்டன் பட்டம் வென்ற வயதான வீரர் (35) என்ற பெருமையையும் பெற்றார்.
 20 கடந்த 21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்று வந்த இந்தியாவின் ஒரே ஏடிபி போட்டியான "சென்னை ஓபன்' இனி, "மகாராஷ்டி ஓபன்' என்ற பெயரில் புணேவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
 23 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
 ஆகஸ்ட்
 7 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வீரர் ஸ்ரீசாந்த் மீது பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்திருந்த நிலையில், அவர் முதல்தர கிரிக்கெட்டில் பங்கேற்கும் வகையில் அந்தத் தடையை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
 26 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் வீழ்ந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
 செப்டம்பர்
 3 இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடரை 5-0 என கைப்பற்றியது. இந்தத் தொடரின்போது கோலி ஒருநாள் போட்டியில் தனது 30-ஆவது சதத்தை எட்டி ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார். புவனேஸ்வர் குமார் முதல் முறையாக ஒரே ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
 17 கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை வீழ்த்தி பட்டம் வென்றார்.
 21 கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இந்தச் சாதனையை புரிந்த 3-ஆவது இந்திய வீரர் குல்தீப் ஆவார்.
 அக்டோபர்
 13 டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ஆம் ஆண்டு தொடங்கும் என்று ஐசிசி அறிவித்தது. இப்போட்டியில் 9 அணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு 6 தொடங்களில் பங்கேற்கும். இதில் 3 தொடர்கள் சொந்த மண்ணிலும், 3 தொடர்கள் அந்நிய மண்ணிலும் நடைபெறும். முதல் இரு இடம் பிடிக்கும் அணிகளிடையே இறுதிப் போட்டி நடைபெறும்.
 22 ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
 நவம்பர்
 1 தில்லியில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா.
 5 மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா "சடன் டெத்' முறையில் சீனாவை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனது. அத்துடன், 2018 உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதிபெற்றது.
 8 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மேரி கோம் தென் கொரியாவின் ஹியாங் மி கிம்மை வென்று சாம்பியன் ஆனார். இது, ஆசிய சாம்பியன்ஷிப்பில் அவரது 5-ஆவது பட்டமாகும்.
 8 சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பின்ஷிப் போட்டியில் ஹெச்.எஸ்.பிரணாய் 21-15,16-21, 21-7 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தையும், சாய்னா நெவால் 21-17, 27-25 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்துவையும் வீழ்த்தி தங்களது பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
 10 இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தும் அதிகாரம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்கு (நாடா) இல்லை என்றும், தாங்கள் கடைப்பிடிக்கும் ஊக்கமருந்து தடுப்பு நடவடிக்கைகள் போதுமானவை என்றும் அந்த அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் பிசிசிஐ தெரிவித்தது.
 13 கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இத்தாலி அணி இழந்தது.
 20 கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்த கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் அதிவேகமாக 50-ஆவது சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 8-ஆவது இடத்தை தென் ஆப்பிரிக்காவின் ஹசீம் ஆம்லாவுடன் பகிர்ந்துகொண்டார் கோலி.
 23 இந்தி கிரிக்கெட் வீரர் ஜாஹீர் கானுக்கும், நடிகை சகாரிகா கட்கேவுக்கு மும்பையில் திருமணம் நடைபெற்றது.
 27 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பெற்றார். இந்த சாதனையை தனது 54-ஆவது போட்டியான, இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டின்போது அவர் எட்டினார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் லில்லீயின் 36 ஆண்டு சாதனையை அவர் முறியடித்தார்.
 டிசம்பர்
 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்ச இரட்டைச் சதம் (6) அடித்த கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றார். இதன்மூலம் பிரையன் லாராவின் சாதனையை (கேப்டனாக 5 இரட்டைச் சதம்) அவர் முறியடித்தார். இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இதனை எட்டிய கோலி, டெஸ்ட் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் (243) பதிவு செய்தார்.
 7 போர்ச்சுகல் கால்பந்துவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரான்ஸ் விளையாட்டு பத்திரிகை சார்பில் வழங்கப்படும் "பேலன் தோர்' விருதை 5-ஆவது முறையாக வென்று, ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸியை சமன் செய்தார்.
 10 உலக ஹாக்கி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.
 11 இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி-பாலிவுட் நடிகை அனுஷ்கா திருமணம் இத்தாலியில் நடைபெற்றது.
 13 இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம், ஒருநாள் போட்டியில் தனது 3-ஆவது இரட்டை சதத்தை பதிவு செய்தார் ரோஹித்.
 17 துபை ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் அகானே யமாகுசியிடம் வீழ்ந்து வெள்ளி வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து.
 17 காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் தங்கம் வென்றார்.
 18 இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3 ஆட்டங்கள் முடிந்த நிலையில், அவை அனைத்திலும் வென்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
 22 இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, தொடரை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதமடித்து சாதனை புரிந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com