3ஆவது ஒருநாள் போட்டி: தோனி, ஜாதவ் அதிரடியால் இந்தியா அபார வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3ஆவது ஒருநாள் போட்டி: தோனி, ஜாதவ் அதிரடியால் இந்தியா அபார வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளின் ஆன்டிகுவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் ஷிகர் தவன் 2, கேப்டன் விராட் கோலி 11 ரன்களில் நடையைக் கட்ட, 9.3 ஓவர்களில் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து அஜிங்க்ய ரஹானேவுடன் இணைந்தார் யுவராஜ் சிங். நிதானமாக ஆடிய இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 100 ரன்களை எட்டியபோது, யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார். அவர் 55 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து தோனி களமிறங்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய ரஹானே 83 பந்துகளில் அரை சதம் கண்டார். இந்தத் தொடரில் அவர் அடித்த 3-ஆவது அரை சதம் இது. இந்திய அணி 170 ரன்களை எட்டியபோது ரஹானே ஆட்டமிழந்தார். அவர் 112 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கேதார் ஜாதவ் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய தோனி 66 பந்துகளில் அரை சதம் கண்டார். இது ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 63-ஆவது அரை சதமாகும்.

இதன்பிறகு தோனியும், கேதார் ஜாதவும் அதிரடியாக ஆட, இந்தியா மோசமான நிலையில் இருந்து மீண்டதோடு, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்தது. தோனி 79 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 78, கேதார் ஜாதவ் 26 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கம்மின்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன்னால் அந்த அணியால் 50 ஓவர்கள் வரை நிலைத்துநின்று ஆட முடியவில்லை. அந்த அணி 38.1 ஓவர்களில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஜேசன் முகமது அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com