பரபரப்பான கபடி இறுதிச்சுற்றில் இந்திய மகளிர் அணி அதிர்ச்சித் தோல்வி: வெள்ளிப் பதக்கம் வென்றது!

இன்று நடைபெற்ற ஆசியப் போட்டி மகளிர் கபடி இறுதிச் சுற்றில் இந்தியா 24-27 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது...
பரபரப்பான கபடி இறுதிச்சுற்றில் இந்திய மகளிர் அணி அதிர்ச்சித் தோல்வி: வெள்ளிப் பதக்கம் வென்றது!

18-வது ஆசியப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை தொடங்கின.

இன்று நடைபெற்ற ஆசியப் போட்டி மகளிர் கபடி இறுதிச் சுற்றில் இந்தியா 24-27 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

மூன்றாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி ஆரம்பத்தில் 13-8 என முன்னிலை பெற்றது. எனினும் ஈரான் அணி சாமர்த்தியமாக விளையாடி 17-13 என அட்டகாசமான முன்னிலையை அடைந்தது. இதன்பிறகு இந்திய அணியால்  ஈரானைத் தாண்டி செல்லமுடியாமல் போனது. கடைசிக்கட்டத்தில் ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. எனினும் ஈரானின் வெற்றியைத் தடுக்கமுடியவில்லை. இதையடுத்து 2018 ஆசியப் போட்டியின் மகளிர் கபடி சாம்பியன் ஆனது ஈரான் அணி. 

ஆடவர் அணிபோல இந்திய மகளிர் அணியும் ஆசியப் போட்டியில் இதுவரை தோல்வியடைந்ததில்லை. நேற்று ஆடவர் அணியை ஈரான் அணி 18-27 எனத் தோற்கடித்தது. கடந்த 1990-ல் ஆசியப் போட்டியில் அறிமுகம் ஆன கபடியில் ஜாம்பவான் அணியாகத் திகழும் இந்தியா தொடர்ந்து 7 முறை தங்கப் பதக்கம் வென்ற சிறப்பை உடையது. மேலும் நடப்பு உலக சாம்பியனாகவும் உள்ளது. இந்நிலையில் ஜகார்த்தா ஆசியப் போட்டியிலும் 8-ஆவது முறையாக தங்கம் வெல்லும் முனைப்பில் களம் கண்டது. ஆனால் இந்திய அணியின் கனவை ஈரான் தகர்த்தது. அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய ஆடவர் அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. இன்று அதே ஈரான் அணியால் இந்திய மகளிர் அணியும் தோல்வியடைந்துள்ளது.

ஆட்டம் முடிந்தபிறகு இந்திய மகளிர் அணியுடன் இணைந்து ஆடவர் அணியும் தோல்வியைத் தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டார்கள். கபடி விளையாட்டில் தோற்கடிக்க முடியாத ஜாம்பவானாக இருந்த இந்திய அணியின் இரு பிரிவுகளும் இந்தமுறை தோல்விகளைச் சந்தித்து தங்கம் வெல்லமுடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தத் தோல்வியிலிருந்து இந்திய கபடி அணியினர் விரைவில் மீண்டெழுவார்கள் என நம்பிக்கை கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com