வைராக்கியத்துடன் 5 மாத மகனை நேரில் காணாத மஞ்சித் சிங்: ஆசியப் போட்டியில் தங்கம் வென்றதன் பின்னணி!

என்னுடைய 5 மாதக்குழந்தையை நான் இன்னமும் பார்க்கவில்லை. அவனைப் பார்த்து என் கையில் ஏந்தவேண்டும்...
வைராக்கியத்துடன் 5 மாத மகனை நேரில் காணாத மஞ்சித் சிங்: ஆசியப் போட்டியில் தங்கம் வென்றதன் பின்னணி!

ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்திலுள்ள உஜ்ஹானா கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயது மஞ்சித் சிங். சில வருடங்கள் கைகொடுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் பிறகு அவரைக் கைகழுவிட்டது. மாநில அரசும் வேலை எதுவும் வழங்கவில்லை. கையில் காசு இல்லை. எல்லாவற்றுக்கும் தந்தையின் கையை எதிர்பார்க்கவேண்டிய நிலைமை. திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. எந்தவொரு போட்டியிலும் பெரிதாக வென்றும் சாதிக்கவில்லை. எங்குச் செல்வது, என்ன சாதிப்பது என்கிற நிலைமை. இந்தச் சூழலில்தான் ஆசியப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் வென்று சாதித்துள்ளார் மஞ்சித் சிங். 

நேற்று நடைபெற்ற 800 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்ஸன் ஜான்சன் தான் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மஞ்சித் சிங் 1: 46: 15 நிமிட நேரத்தில் ஓடி தங்கம் வென்றார். ஜின்சன் 1: 46: 35 நிமிட நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மஞ்சித்தின் தந்தை பால் வியாபாரம் செய்பவர். விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மாநில அளவில் குண்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். என்னுடன் வந்து நான் போட்டிகளில் பங்கேற்பதை நேரில் பார்த்துள்ளான். அதைக் கண்டு அவனுக்குத் தடகளத்தில் ஆர்வம் வந்தது என்கிறார் தந்தை.

இந்த மகத்தான வெற்றி குறித்து மஞ்சித் சிங் ஒரு பேட்டியில் கூறியதாவது:

என்னுடைய 5 மாதக்குழந்தையை நான் இன்னமும் பார்க்கவில்லை. அவனைப் பார்த்து என் கையில் ஏந்தவேண்டும் என்று அவ்வளவு ஆசையாக உள்ளது. 

2008 முதல் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வருகிறேன். இரு வருடங்களுக்கு முன்பு, 27 வயதில், ஓஎன்ஜிசி எனக்கு அளித்த வந்த நிதியுதவியை நிறுத்திவிட்டது. நான் சரியாகத் திறமையை வெளிப்படுத்தாததால் அந்நிலை ஏற்பட்டது. மேலும் எனக்கு வயதும் அதிகமாகிவிட்டதால் என்னால் முன்னேறமுடியாது என்றார்கள். என் மீது யாரும் நம்பிக்கை வைக்கவில்லை. மனம் உடைந்துபோனேன். 

ஆசியப் போட்டியில் தற்போது தங்கம் வாங்குவதற்கு முன்பு பெரிய அளவில் பதக்கம் எதுவும் வாங்கியதில்லை. 2013-ல் தேசிய அளவில் சாம்பியன் ஆனேன். அதுதான் கடைசியாகப் பெற்ற வெற்றி. பெரும்பாலும் 2-ம் இடம்தான் பிடிப்பேன் (ஜின்ஸன் ஜான்சன் தங்கம் வென்றுவிடுவார்.) 3 வருடங்கள் நிதியுதவி பெற்று அது ஒரே நாளில் நின்றவுடன் விளையாட்டை விட்டு விலக முடிவு செய்தேன். அப்போது 27 வயதிலும் என் பெற்றோரிடமிருந்து பணம் வாங்கவேண்டிய நிலைமையே இருந்தது. என் பெற்றோரும் ராணுவத்தில் பணியாற்றும் பயிற்சியாளருமான அம்ரிஷ் குமார் மட்டுமே என் மீது நம்பிக்கை வைத்தார்கள். நான் ராணுவ வீரனாக இல்லாவிட்டாலும் அவரிடம் பயிற்சி பெற முடிவு செய்தேன் என்கிறார். 

இந்த முடிவுதான் மஞ்சித் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் தன்னிடம் பயிற்சி பெறவேண்டுமென்றால் கடுமையான கட்டுப்பாடுகளுக்குக் கீழ்படிய வேண்டும் என்று கூறியுள்ளார் பயிற்சியாளர் அம்ரிஷ் குமார். 

எனக்கு நீ இரண்டு வருடங்களைக் கொடு. அப்படிச் செய்தால் ஆசியப் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வாய். உன் குடும்பத்தை முற்றிலும் துறந்துவிட்டு வந்து என்னிடம் பயிற்சி எடுத்துக்கொள். 

இதுதான் மஞ்சித் சிங்கிடம் பயிற்சியாளர் கூறியது. இழப்பதற்கு எதுவுமில்லை, அதிகபட்சமாகக் குடும்பத்தைக் காண முடியாது. அவ்வளவுதான். கட்டுப்பாடுகளுக்குச் சம்மதித்தார் மஞ்சித். உங்களிடம் பயிற்சி பெறுவதற்காக எதையும் இழக்கத் தயார் என்று பயிற்சியாளருக்கு நம்பிக்கையளித்தார். அங்குதான் ஓர் அழகான, லட்சியம் கொண்ட கூட்டணி உருவானது. இன்று தங்கத்தை ஏந்தும் மஞ்சித், அதற்கான விதையை அன்று தூவியுள்ளார். 

ஊட்டியில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் செண்டர் மைதானத்தில் பயிற்சியாளர் அம்ரிஷ் குமாரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டார். ஊட்டியில் ஒரு மாதச் செலவுக்கு ரூ. 30,000 தேவைப்பட்டது. இந்தச் சமயத்தில் ஒவ்வொருமுறையும் மஞ்சித்துக்குப் பணம் அனுப்பியவர், அவருடைய தந்தைதான். 

இந்த முயற்சி, தியாகத்தால் எல்லாம் உடனடியாக அதிசயங்கள் நிகழ்ந்துவிடவில்லை. 2017 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு மஞ்சித்தால் தகுதி பெறமுடியவில்லை. இந்த வருட காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெறமுடியாமல் போனது. குடும்பத்தை விட்டு, அனைத்து சுகதுக்கங்களை விட்டு பயிற்சிகள் மேற்கொண்டாலும் இரு முக்கியப் போட்டிகளில் மஞ்சித்தால் பங்குபெறமுடியாமல் போனது பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது. 

மார்ச் 6 அன்று மகன் அபிர் பிறந்தான். அப்போதுகூட வீட்டுக்குச் செல்லவில்லை மஞ்சித். 

சாதிக்காமல் வீட்டுக்குள் நுழையமாட்டேன். சாதிக்கும்வரை மகனைப் பார்க்கவும் மாட்டேன். தொடர்ந்து பயிற்சிகள் எடுக்கிறேன். முயற்சி செய்கிறேன். பார்க்கலாம் என்று அம்ரிஷ் குமாரிடம் கூறியுள்ளார். 

ஜகார்த்தா ஆசியப் போட்டியில் சாதிக்கவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று யோசித்தார். விடியோக்களைப் பாத்து நிறைய அலசினார். தோல்விகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மகனைச் சந்திக்கும் ஆசையையும் அடக்கிவைத்துக்கொண்டு வழக்கம்போல காலையும் மாலையும் ஓடிக்கொண்டு பயிற்சிகள் எடுத்தார். 

ஒரே குறிக்கோள். ஆசியப் போட்டியில் தங்கம் வெல்லவேண்டும், மகனைக் காணவேண்டும். 

குவாஹட்டியில் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையிலான போட்டியில் இரண்டாமிடம் வந்தார் மஞ்சித். இதன்மூலம் ஆசியப் போட்டிக்கும் தகுதி பெற்றார். இரு வருடத் தியாகங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. ஆனாலும் இது போதாதே. இது சாதனை அல்லவே. அப்பா... என்னை வந்து எப்போது பார்க்கப் போகிறாய் என்று மகன் அடிக்கடிக் கேட்பது போலவே அவருக்கு எப்போதும் இருந்தது. மகனின் புகைப்படத்தை செல்போனில் ஸ்க்ரீன்சேவராக வைத்துக்கொண்டு அதை அடிக்கடிப் பார்த்துக்கொள்வார். 

குவாஹட்டிப் போட்டியில் 1:46.24 நிமிட நேரத்தில் 800 மீட்டரைக் கடந்தார். இதற்கு முன்னால் இந்த நேரத்தை அவர் எட்டியதில்லை. ஆனால் அதே போட்டியில் ஜின்ஸன் ஜான்சன் 1:45:65 நிமிடங்களில் ஓடி தேசிய சாதனையை நிகழ்த்தினார். ஜின்ஸனித் தாண்டமுடியுமா, முதலிடம் கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்தது.

இங்கு ஜெயிப்பது உன் இலக்கல்ல. ஆசியப் போட்டியில் சாதிக்கவேண்டும். அதுதான் முக்கியம் என்று ஊக்கம் கொடுத்தார் பயிற்சியாளர். மஞ்சித்துக்கும் நடந்தவை எல்லாம் திருப்தியை அளித்தன. எப்படியோ, ஆசியப் போட்டிக்கும் தகுதி பெற்றாயிற்று. தன்னுடைய சிறந்த ஓட்டத்தையும் வெளிப்படுத்தியாயிற்று. மிகுந்த நம்பிக்கையுடன் ஜகார்த்தாவுக்கு வந்தார் மஞ்சித். 

தகுதிச்சுற்றில் சுமாராக ஓடி, நூலிழையில்தான் 800 மீ. போட்டிக்குத் தகுதி பெற்றார் மஞ்சித் சிங். அரையிறுதியில் 1:48:64 நிமிடங்களில்தான் தூரத்தைக் கடந்தார். அதனால் அவர் பதக்கம் பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு யாரிடமும் இல்லை.

நேற்று நடைபெற்ற 800 மீ. ஓட்டத்தில் இந்திய ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளித்தார். பந்தயத்தில் பெரும்பாலும் அவர் பின்தங்கியே இருந்தார். முதல் 400 மீ ஓட்டத்தில் அவரைத் தேடவேண்டியதாக இருந்தது. ஜின்ஸனும் கத்தாரின் அப்தல்லா, ஆப்ரஹாமுமே பந்தயத்தின் பெரும்பாலான தூரங்களில் முன்னிலை வகித்தார்கள். ஆனால் கடைசிக்கட்டத்தில் மேஜிக் நிகழ்த்தினார் மஞ்சித். கடைசி 100 மீட்டர் தூரத்தில் இருந்துதான் மூவரையும் ஒவ்வொருவராகப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார். 2 வருடக் கனவு, தியாகம், அர்ப்பணிப்பு எல்லாவற்றுக்குமான ஓர் அர்த்தம் ஜகார்த்தா மண்ணில் கிடைத்தது. ஒரே நாளில் நட்சத்திரமாகிவிட்டார். 

அப்பா தங்கம் வெல்வதை மகனுக்குத் தொலைக்காட்சியில் காண்பித்துள்ளார் மஞ்சித்தின் மனைவி. அப்பா சீக்கிரம் வந்து உன் கழுத்தில் தங்க மெடலை அணிவிப்பார் என்றும் மகனிடம் கூறியுள்ளார். 

என் மகனிடம் தங்க மெடலைக் காண்பிக்கவேண்டும். பார், உன் தந்தை உன்னைக்கூடப் பார்க்காமல் சாதித்ததைப் பார் என்று அவனிடம் கூறுவேன் என மஞ்சித்தும் நெகிழ்கிறார். ஒரு திரைப்படக்கதை போல திருப்பங்களைக் கொண்டதாகவும் உணர்வுபூர்வமாகவும் உள்ளது மஞ்சித்தின் வாழ்க்கை. நல்ல ஆசான் அவ்வளவு எளிதாகக் கிடைக்கமாட்டார். கிடைத்தாலும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மஞ்சித் உணர்த்தியுள்ள உண்மை இதுவே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com