‘மெஸ்ஸிக்கு ஏற்கெனவே தெரியும்’: ஆர்ஜென்டீனா தோல்வியின் ஐந்து முக்கிய அம்சங்கள்!

குரூப் பிரிவு ஆட்டங்களில் 3 கோல்கள் வித்தியாசத்தில் ஆர்ஜென்டீனா அணி தோற்பது இது இரண்டாவது முறை...
‘மெஸ்ஸிக்கு ஏற்கெனவே தெரியும்’: ஆர்ஜென்டீனா தோல்வியின் ஐந்து முக்கிய அம்சங்கள்!

உலகக் கோப்பை கால்பந்து 2018 இறுதிச் சுற்றில் இங்கிலாந்து-ஆர்ஜென்டீனா அணிகள் மோதும் என பிரபல முன்னாள் வீரர் டேவிட் பெக்காம் ஆரூடம் தெரிவித்த நிலையில் ஆர்ஜென்டீனா அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறுவதே மிகவும் சிரமம் என்கிற நிலை உருவாகியுள்ளது. 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆர்ஜென்டீனாவும்-குரோஷியாவும் வியாழக்கிழமை இரவு நோவாகிராடில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதின.

பலமான ஆர்ஜென்டீனா தனது தொடக்க ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திடம் டிரா மட்டுமே செய்ய முடிந்தது. நட்சத்திர வீரர் மெஸ்ஸியால் பெனால்டி கிக் வாய்ப்பைக் கூட கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் ஆர்ஜென்டீனாவுக்கு 1 புள்ளி மட்டுமே கிடைத்தது. அதே நேரத்தில் குரோஷியா 2-0 என நைஜீரிய அணியை வீழ்த்தி உற்சாகத்துடன் ஆர்ஜென்டீனாவை எதிர்கொண்டது. குரூப் டி பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. 

இதனால் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தார்கள். ஆனால் எதிர்பார்த்ததை விடவும் குரோஷிய வீரர்கள் அமர்க்களமாக விளையாடினார்கள். 53-வது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா கோல் கீப்பர் வில்லியின் தவறால் ஆண்டே ரெபிக் முதல் கோலை அடித்தார். கடைசிக் கட்டத்தில் லுகாவும் இவானும் மேலும் கோல்கள் அடித்து ஆர்ஜென்டீனா, மெஸ்ஸி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்கள். இதனால் குரோஷிய அணி 3-0 என்கிற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 1 புள்ளிகள் உள்ள ஆர்ஜென்டீனா அணி, நைஜீரியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வென்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறமுடியும். 

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி மோசமாக விளையாடி வந்தாலும் அதன் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நேற்றைய ஆட்டத்தின்போது அற்புதமான சூழலை உருவாக்கினார்கள். இதனால் உத்வேகம் அடையாமல் ஆர்ஜென்டீனா தோற்றபிறகு, பலரும் கண்ணீர் சிந்தினார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களை இந்த நிலைக்குத் தள்ளக்கூடாது.

குரோஷியா இரு அட்டகாசமான வெற்றிகளால் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 1998-க்குப் பிறகு இப்போதுதான் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுகிறது. துணிச்சலான வீரர்களைக் கொண்ட இந்த அணி மேலும் பல அதிர்ச்சிகளை அளிக்கும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ஜென்டீனா அணியின் தோல்வி: ஐந்து முக்கிய அம்சங்கள்

* குரூப் பிரிவு ஆட்டங்களில் 3 கோல்கள் வித்தியாசத்தில் ஆர்ஜென்டீனா அணி தோற்பது இது இரண்டாவது முறை.

1958: 1-6 vs செக்கோஸ்லோவாகியா
2018: 0-3 vs குரோஷியா 

* ஆட்டம் தொடங்கும்முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது நெற்றியைத் தேய்த்தபடி மெஸ்ஸி கவலையுடன் காணப்பட்டார். இதனால் நடக்கப்போவதை முன்பே அறிந்திருந்தார் மெஸ்ஸி என்று ரசிகர்கள் தற்போது கூறிவருகிறார்கள். மெஸ்ஸியினால் மட்டுமே ஆர்ஜென்டீனா அணியைக் காப்பாற்றமுடியாது. இதர வீரர்கள் பங்களிக்க வேண்டும் என்பது இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

* ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடிக்க 11 முறை முயன்றார் மெஸ்ஸி. ஆனால் நேற்று அவர் அதுபோன்ற ஒரு ஷாட்டை மட்டுமே அடித்தார். 

இது எங்களுடைய திட்டம். அதை நிறைவேற்றியுள்ளோம் என்கிறார் குரோஷியா பயிற்சியாளர் லுகா. ஆட்டத்திலிருந்து அவரை முழுவதுமாகத் துண்டிக்க எண்ணினோம். அவருக்குப் பந்து செல்லாதவாறு பார்த்துக் கொண்டோம். அவர் மிகவும் ஆபத்தான வீரர். அவரால் மட்டுமே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. கால்பந்து விளையாட்டில் சக வீரர்களின் உதவியும் தேவை என்று அவர் கூறியுள்ளார்.

* மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா கோல் கீப்பர் என இந்தத் தோல்விக்குப் பலரும் இவர்களைக் கை காட்டுகிறார்கள். ஆனால் முதல் பகுதியில் கிடைத்த அற்புதமான வாய்ப்பைத் தவறவிட்ட ஆர்ஜென்டீனாவின் என்ஸோ  பெரேஸை என்னவென்று சொல்வது? இந்த விடியோவைப் பாருங்கள். இதை மட்டுமே கோல் ஆக மாற்றியிருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும் அல்லவா!

* இன்று நடைபெறுகிற ஆட்டத்தில் நைஜீரியாவை ஐஸ்லாந்து தோற்கடித்து விட்டால் ஆர்ஜென்டீனாவின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். ஐஸ்லாந்து அதன் கடைசி ஆட்டத்தில் தோற்கவேண்டும். பிறகு கடைசி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா வெல்லவேண்டும். இது நடந்தால் மட்டும் போதாது. கோல்களின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருந்தால் மட்டுமே ஆர்ஜென்டீனா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறும். இன்றைய நிலையில் எல்லாமே கடினமான சவாலாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com