இந்தப் பட்டியலில் ரஷியப் போட்டி இணையுமா? ஆர்ஜென்டீனா அணியின் மோசமான உலகக் கோப்பை போட்டிகள்!

இந்தப் பட்டியலில் ரஷிய உலகக் கோப்பைப் போட்டி இணைந்துவிடக்கூடாது என்று அனைத்து ஆர்ஜென்டீனா ரசிகர்களும்...
இந்தப் பட்டியலில் ரஷியப் போட்டி இணையுமா? ஆர்ஜென்டீனா அணியின் மோசமான உலகக் கோப்பை போட்டிகள்!

உலகக் கோப்பை 2018-ல் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி. ஆனால் தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் டிரா செய்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் 3-0 என ஆர்ஜென்டீனாவை வென்றது குரோஷிய அணி. வெறும் 1 புள்ளியோடு உள்ளது. உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக இன்று நடைபெறவுள்ள நைஜீரியாவுடனான ஆட்டம் முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டீனாவுக்கு வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா கட்டாயம் வெல்ல வேண்டும்.

16 முறை உலகக் கோப்பையில் விளையாடி, ஐந்துமுறை அரையிறுதிக்குத் தகுதி பெற்று, ஐந்துமுறை இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்து இருமுறை உலகக் கோப்பையை வென்றுள்ளது ஆர்ஜென்டீனா அணி. இந்நிலையில் இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தைக் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

ஆர்ஜென்டீனா அணியின் மோசமான உலகக் கோப்பைப் போட்டிகள் என கீழ்க்கண்ட பட்டியலைச் சொல்லலாம். இந்தப் பட்டியலில் ரஷிய உலகக் கோப்பைப் போட்டி இணைந்துவிடக்கூடாது என்று அனைத்து ஆர்ஜென்டீனா ரசிகர்களும் வேண்டிக்கொள்கிறார்கள்.

1934 இத்தாலி உலகக் கோப்பை

இதில் ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே விளையாடியது. நாக் அவுட் பாணியில் நடைபெற போட்டியில், ஸ்வீடனுக்கு எதிரான ஆட்டத்தில் 2-3 என்கிற கோல் கணக்கில் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறியது.

1958 ஸ்வீடன் உலகக் கோப்பை

1934 முதல் 1954 வரையிலான உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆர்ஜென்டீனா அணி விளையாடவில்லை. 24 வருடங்கள் கழித்து ஸ்வீடனில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில், இரு தோல்விகள், ஒரு வெற்றி என மோசமாக விளையாடி நாக் அவுட்டுக்குத் தகுதி பெறாமல் போனது. அனுபவம் வாய்ந்த வீரர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களைத் தேர்வு செய்ததால் ஆர்ஜென்டீனா அணிக்கு இந்த நிலை ஏற்பட்டது.  

1962 சிலி உலகக் கோப்பை

இந்தமுறை எப்படியும் சாதித்துவிட வேண்டும் என்று சரியான பயிற்சிகளுடன் களமிறங்கியது. பல்கேரியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 1-0 என வென்றது. ஆனால் 1-3 என இங்கிலாந்திடம் அடுத்ததாகத் தோற்றது. ஹங்கேரியுடனான ஆட்டம் 0-0 என சமன் ஆனது. இங்கிலாந்துடன் சமஅளவில் புள்ளிகள் கொண்டிருந்தாலும் கோல்கள் வித்தியாசத்தில் நாக் அவுட்டுத் தகுதி பெறவில்லை. 

1974 ஜெர்மனி உலகக் கோப்பை

மோசமான நிர்வாகம், சரியான பயிற்சியின்மை போன்ற காரணங்களின் விளைவைச் சந்தித்தது. முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் போலந்திடம் தோற்றது. இத்தாலியுடன் சமன் செய்து, ஹைதியை வென்றது. இதனால் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆனால் கிழக்கு ஜெர்மனியுடன் சமன் செய்த ஆர்ஜென்டீனா, நெதர்லாந்து, பிரேஸிலிடம் தோற்று வெளியேறியது. ஆனால் அடுத்த 1978 உலகக் கோப்பையை வென்று முதல்முறையாக சாம்பியன் ஆனது. 

1982 ஸ்பெயின் உலகக் கோப்பை

மரடோனாவுக்குக் கிடைத்த புகழால் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றாக ஆர்ஜென்டீனா இருந்தது. ஆனால் பெல்ஜியத்துக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே தோற்றது. மூத்த வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்குமிடையே பூசல் ஏற்பட்டதால் நிலைமை மோசமானது. எனினும் அடுத்த ஆட்டத்தில் 4-1 என ஹங்கேரியை வென்றது. 2-0 என எல் சல்வடோரை வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் இத்தாலி, பிரேஸிலுக்கு எதிரான ஆட்டங்களில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. எனினும் அடுத்த 1986 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.  

2002 தென் கொரியா & ஜப்பான் உலகக் கோப்பை

குரூப் எஃப் அணியில் ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து, நைஜீரியா, ஸ்வீடன் ஆகிய அணிகள் இருந்தன. முதல் ஆட்டத்தில் நைஜீரியாவுக்கு எதிராக 1-0 என வென்றது. பெனாலிடியில் டேவிட் பெக்கம் அடித்த கோலால் இங்கிலாந்துக்கு எதிராக 0-1 என்கிற கோல் கணக்கில் தோற்றது. ஸ்வீடனுக்கு எதிராக 1-1 என சமன் செய்ததால் போட்டியிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது ஆர்ஜென்டீனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com