ஆகஸ்ட் 29- தேசிய விளையாட்டு தினம்: தயான் சந்த் ஒரு பார்வை

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. 
ஆகஸ்ட் 29- தேசிய விளையாட்டு தினம்: தயான் சந்த் ஒரு பார்வை

இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் பிறந்த தினம் ஆகஸ்ட் 29-ந் தேதி. இந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோணாச்சாரியார் விருது, தயான் சந்த் உள்ளிட்ட விருதுகளை இந்திய அரசு வழங்கி கௌரவிக்கிறது.

மேஜர் தயான் சந்த், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஆவார். 1928, 1934 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடர்களில் ஹாக்கி விளையாட்டில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்துள்ளார். கடந்த 1926 முதல் 1948 வரை விளையாடிதில் 400 கோல்களுக்கும் மேல் அடித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்ஸியில் ஆகஸ்ட் 29-ந் தேதி 1905-ம் வருடம் பிறந்தவர் தயான் சந்த். இவரது தந்தை ஒரு ராணுவ அதிகாரி. அவரும் ஹாக்கி விளையாடியுள்ளார். சிறு வயது முதலே தயான் சந்த் மல்யுத்த விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். 

இதன்பின்னர் 14 வயதில் ஹாக்கி விளையாட்டுக்கு மாறினார். அப்போது முதல் அவரது விளையாட்டு வாழ்வு ஏறுமுகம் கண்டது. ஆம், ஹாக்கி விளையாட்டின் தலைசிறந்த வீரராக உருவெடுத்தார். 1922-ம் ஆண்டு முதல் 1926-ம் ஆண்டு வரை ராணுவ ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். 1925-ம் வருடம் ஒலிம்பிக் விளையாட்டில் ஹாக்கி மீண்டும் இடம்பிடித்தது. 

இதில் 5 மாகாண அணிகள் மோதின. அதில் ஒருங்கிணைந்த மாகாண அணிக்கு தயான் சந்த் விளையாடினார். அச்சமயம் அவரது ஆட்டத்தை பார்த்து அனைவரும் பிரமித்தனர். 

1926-ம் வருடம் நியூஸிலாந்து சுற்றுப்பயணம் செய்த இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்தார். அப்போட்டித்தொடரில் மொத்தம் 18 ஆட்டங்களில் இந்திய அணி 15-ல் வென்றது. 2 போட்டிகள் டிராவிலும், ஒரு போட்டி தோல்வியிலும் முடிந்தது. 

இதில் தயான் சந்த் மொத்தம் 20 கோல்கள் அடித்தார். இதன்மூலம் இந்திய ராணுவத்தில் உயர் பதவி பெற்றார். பகல் பொழுதில் ராணுவத்தில் வேலை பார்க்கும் தயான் சந்த், இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் ஹாக்கி பயிற்சி மேற்கொண்டார். இதனாலேயே இவரது நண்பர்கள் இவரை சந்திரன் என்று செல்லமாக அழைத்தனர். 

இந்நிலையில், 1928-ல் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கினார். இதில் தயான் சந்த் 14 கோல்கள் அடித்தார். இந்திய அணி முதல் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் பெற்று வரலாறு படைத்தது. அச்சமயத்தில் இந்திய ஹாக்கி அணியில் மேஜிக் வித்தைக்காரர் இருப்பதாக தயான் சந்தை உலக பத்திரிகை அனைத்தும் புகழ்ந்தது.

பின்னர் 1932-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி 24-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 2-ஆவது முறையாக தங்கப்பதக்கத்தை வென்றது. இதில் இந்திய அணி 35 கோல்களைக் குவித்தது. அதில் தயான் சந்த் மட்டும் 25 கோல்களை குவித்தார்.

இதையடுத்து, 1934-ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் தயான் சந்த். ஆகஸ்ட் 15-ந் தேதி ஜெர்மனியுடன் நடந்த இறுதிப்போட்டியில் 8-1 என்ற கணக்கில் வென்று ஹாட்ரிக் ஒலிம்பிக் தங்கத்தை கைப்பற்றியது. இதில் தயான் சந்த் 3 கோல்களை அடித்தார்.

1948-ம் ஆண்டு தனது 42 வயது வரை சர்வதேச ஹாக்கி போட்டிகளில் பங்கேற்ற தயான் சந்த் மொத்தம் 400 கோல்களுக்கும் மேல் அடித்துள்ளார். ஹாக்கியில் 22 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த தயான் சந்த், 1956-ம் ஆண்டு தனது 51-வது வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவர் மேஜராக பதவி வகித்தார். அதே ஆண்டில் இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

3 முறை இந்திய அணிக்காக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த், தனது இறுதிநாட்களில் வறுமயைில் வாடினார். கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முடியாமல் 1979-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மரணமடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com