இனிமேலும் தவிர்க்க முடியுமா? ரஞ்சி, ஐபிஎல்-லில் தொடர்ந்து கவனம் ஈர்க்கும் நிதிஷ் ராணா!

அடுத்த தலைமுறை வீரர்களுக்கான பட்டியலில் நிதிஷ் ராணாவின் பெயர் எப்போதும்  இடம்பெறாது. ஆனால்...
இனிமேலும் தவிர்க்க முடியுமா? ரஞ்சி, ஐபிஎல்-லில் தொடர்ந்து கவனம் ஈர்க்கும் நிதிஷ் ராணா!

கடந்த வருட ஐபிஎல்-லில் கவனம் பெற்ற இந்திய இளம் வீரர்களில் ஒருவர் நிதிஷ் ராணா. மும்பை அணிக்காக விளையாடிய ராணா, 13 ஆட்டங்களில் 333 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 3 அரை சதங்கள் அடங்கும். இந்த வருடமும் மும்பை அணி அவரைத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏலத்தில் அவரை 3.40 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா. அதற்கான பலனை உடனடியாக அனுபவித்து வருகிறது. 

ரஞ்சியில் திறமையை நிரூபித்து வந்தாலும் ஐபிஎல்-லினால் வெளிச்சமும் கவனமும் பெற்றுள்ள எண்ணற்ற வீரர்களில் நிதிஷ் ராணாவும் இடம் பிடித்துள்ளார்.

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் தில்லி டேர் டெவில்ஸ் அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-தில்லி டேர் டெவில்ஸ் இடையே ஆன ஐபிஎல் போட்டியின் 13-வது ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் ஆன்ட்ரே ரஸ்ஸல்-ராணா இணை சிறப்பாக ஆடி கொல்கத்தா அணியை சரிவில் இருந்து மீட்டது. ராணா 35 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து அசத்தினார். நேற்றைய் ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கு ராணாவும் பங்களிப்பும் முக்கியக் காரணம். 

இந்த ஐபிஎல்-லில் இதுவரை ஆடிய 4 ஆட்டங்களில் 127 ரன்கள் எடுத்துள்ளார் ராணா. பெங்களூருக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இவர் அடுத்தடுத்த பந்துகளில் கோலி, டிவில்லியர்ஸை வீழ்த்தினார். இதனால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டு கொல்கத்தா அணி ஜெயிக்க பெரிதும் உதவினார் ராணா. இதுபோன்ற பங்களிப்புகளால் கொல்கத்தா அணியின் முக்கிய வீரர் ஆகியுள்ளார்.

2016-17 ரஞ்சி போட்டியில் தில்லி அணியில் விளையாடிய ராணா அதில் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. அதன்பிறகு உள்ளூர் போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. தில்லி அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக யாரும் எதிர்பார்க்காத அளவுக்குச் சிறப்பாக விளையாடினார். முதல் ஆறு ஆட்டங்களில் அவர் எடுத்த ரன்கள் - 34, 50, 45, 11, 53, 62*. முதல் ஆறு ஆட்டங்களில் ராணாதான் தன்னிகரற்ற நட்சத்திரமாக விளங்கினார். 2017 ஐபிஎல்-லில் முதல் ஆறு ஆட்டங்களில் 255 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அதே சமயத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலிலும் முதலிடம் பிடித்தார். ஆறு ஆட்டங்களில் 16 சிக்ஸர்கள். இந்த அமர்க்களமான தொடக்கம் ஐபிஎல்-லின் பிற்பாதியில் காணாமல் போனது.  

கடந்த ஐபிஎல்-லின் முடிவில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ராணாவால் 333 ரன்களுடன் 18-வது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. அதாவது  ஐபிஎல்-லின் பிற்பாதியில் அவரை விடவும் பார்தீவ் படேல் (395), பொலார்ட் (385), ரோஹித் சர்மா (333) ஆகியோர் சிறப்பாக விளையாடி ராணாவை விடவும் அதிக ரன்கள் எடுத்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் ராணாவால் கடைசியில் 17 சிக்ஸர்களுடன் 12-வது இடத்தையே பிடிக்கமுடிந்தது. அதாவது முதல் ஆறு ஆட்டங்களில் 16 சிக்ஸர்கள் அடித்த ராணா, பிறகு விளையாடிய 7 ஆட்டங்களில் 1 சிக்ஸ் மட்டுமே அடித்தார். கடைசிக்கட்டங்களில் ராணாவின் பங்களிப்பு பெரிதாக இல்லாததால் இந்த வருடம் அவரைத் தேர்வு செய்ய மும்பை பெரிதாக ஆர்வம் செலுத்தவில்லை. 

ராணாவை வெறும் டி20 வீரராக மட்டும் எண்ணமுடியாது. 2017-18 ரஞ்சி போட்டியில் 8 ஆட்டங்களில் 613 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த தில்லி வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தார். அதில் 2 சதங்களும் 3 அரை சதங்களும் அதில் அடங்கும் (அதிகபட்சம் - 174 ரன்கள்). 2016-17 ரஞ்சி போட்டி அவருக்கு மோசமாக அமைந்தாலும் அதற்கு முந்தைய வருடம் 7 ஆட்டங்களில் 557 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த தில்லி வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். முதல்தர கிரிக்கெட் போட்டியில் அதுதான் அவருடைய முதல் அனுபவம். அதிலேயே அசத்தி கவனம் பெற்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ரூ. 10 லட்சத்துக்கு 2015-ம் வருடம் தேர்வு செய்தது. அதன்பிறகு ரஞ்சி போட்டியில் பிரமாதமாக அறிமுகம் ஆனதால் அடுத்த வருடம் தக்கவைத்துக்கொண்டது. 2015- ஐபிஎலில் ஓர் ஆட்டமும் விளையாடாத ராணா, அடுத்த வருடம், 4 ஆட்டங்களில் விளையாடினார். 2017-ல் மும்பை நட்சத்திரங்களில் ஒருவர். கடந்த வருடம் போல இந்த வருடமும் ஐபிஎல்-ஐ அமர்க்களமாக ஆரம்பித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட்டில் அடுத்த தலைமுறை வீரர்களுக்கான பட்டியலில் நிதிஷ் ராணாவின் பெயர் எப்போதும்  இடம்பெறாது. ஆனால் இரண்டு ரஞ்சி போட்டிகளில் தன் முத்திரையைப் பதித்ததோடு, ஐபிஎல்-லிலும் அதிரடி ஆட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்து வரும் ராணாவை இனிமேலாவது சற்றுக் கவனிப்போமா?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com