ரன்கள் எங்கே?: யுவ்ராஜ் சிங் வெளியேறும் நேரம் வந்துவிட்டதா?

யுவ்ராஜுக்குப் பதிலாகத் திறமையான பேட்ஸ்மேனான மனோஜ் திவாரிக்கு வாய்ப்பளிக்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன...
ரன்கள் எங்கே?: யுவ்ராஜ் சிங் வெளியேறும் நேரம் வந்துவிட்டதா?

கடந்த 2015-ம் ஆண்டு ரூ. 16 கோடிக்குத் தேர்வான யுவ்ராஜ் இந்த வருட ஏலத்தில் ரூ. 2 கோடிக்கு மட்டுமே தேர்வானார். பஞ்சாப் அணி அவர் மீது நம்பிக்கை வைத்ததால் அவரால் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாட முடிந்தது. ஆனால், தன் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்றாற்போல ரன்கள் குவிக்கிறாரா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த ஏமாற்றம் முதல்முறையாக ஏற்படுவது அல்ல.

ஒவ்வொருமுறையும் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வாகி பிறகு அதிக ரன்கள் எடுக்காமல் போகும் சோகம் இந்த வருடமும் தொடர்கிறது. இதனால் ஐபிஎல்-லில் யுவ்ராஜ் சிங்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பஞ்சாப் அணி இனியும் அவருக்கு வாய்ப்பு தரக்கூடாது என்கிற கோரிக்கைகள் பலமாக எழுந்துள்ளன. 

ஆரம்ப வருடத்திலிருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் யுவ்ராஜ், இதுவரை எந்த ஒரு வருடமும் 400 ரன்களைத் தொட்டதில்லை. 2014-ம் வருடம் 376 ரன்கள் எடுத்ததே ஐபிஎல்-லில் அவர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். 2015 முதல் கடந்த மூன்று வருடங்களாக 248, 236, 252 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். 

இந்த வருடம் இன்னும் மோசம். இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் மொத்தமாகவே 50 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் யுவ்ராஜ் மீதான விமரிசனங்கள் இம்முறை அதிகரித்துள்ளன. 

ஏலத்தில் யுவ்ராஜ் சிங்

2014 - ரூ. 14 கோடி (பெங்களூர்)
2015 - ரூ. 16 கோடி (தில்லி)
2016 - ரூ. 7 கோடி (ஹைதராபாத்)
2018 - ரூ. 2 கோடி (பஞ்சாப்)

ஐபிஎல்-லில் யுவ்ராஜ் சிங்

2008 - 299 ரன்கள்
2009 - 340 ரன்கள்
2010 - 255 ரன்கள்
2011 - 343 ரன்கள்
2013 - 238 ரன்கள்
2014 - 376 ரன்கள்
2015 - 248 ரன்கள்
2016 - 236 ரன்கள்
2017 - 252 ரன்கள்
2018 - 50 ரன்கள்

ஆல்ரவுண்டர் என்று அறியப்பட்ட யுவ்ராஜ் சிங், 2015 முதல் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

2018 ஐபிஎல்-லில் யுவ்ராஜ் சிங் எடுத்த ரன்கள்: 12, 4, 20, 14.

நேற்று டெல்லிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 17 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் யுவ்ராஜ் சிங். 2019க்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிடுவேன் என்று சமீபத்தில் அறிவித்தார் யுவ்ராஜ் சிங். ஆனால் ஐபிஎல்-லில் அவர் இனிமேலும் விளையாடத்தான் வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள் ரசிகர்கள்.

யுவ்ராஜை அணியில் சேர்ப்பதால் மனோஜ் திவாரிக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை, இதனால் பஞ்சாப் அணி இதற்குப் பிறகும் யுவ்ராஜை அணியில் சேர்க்கக்கூடாது, அதற்குப் பதிலாகத் திறமையான பேட்ஸ்மேனான மனோஜ் திவாரிக்கு வாய்ப்பளிக்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

அடுத்த ஆட்டத்தில் யுவ்ராஜ், பஞ்சாப் அணியில் இடம்பெற்றால் நிச்சயம் ஆச்சர்யப்படத்தான் வேண்டும். யுவ்ராஜ் அல்லது மனோஜ் திவாரி - யாருக்கு வாய்ப்பளிக்கப்போகிறார் அஸ்வின்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com