எண்பதுகளை ஆட்கொண்ட 'சன்னி டேஸ்': சுனில் கவாஸ்கர் அறிந்ததும்-அறியாததும்!

பிசிசிஐ தலைவர், ஐசிசி நடுவர், ஐசிசி தலைவராக இருந்து தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர், இன்று தனது 69-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
எண்பதுகளை ஆட்கொண்ட 'சன்னி டேஸ்': சுனில் கவாஸ்கர் அறிந்ததும்-அறியாததும்!

ஜூலை 10, 1949-ஆம் வருடம் மும்பையில் பிறந்த சுனில் கவாஸ்கர், 1966-ஆம் ஆண்டு தன்னுடைய 17-ஆவது வயதில் இந்தியாவின் பள்ளிகள் அளவிலான மிகச்சிறந்த  கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்படுகிறார். அன்று முதல் கிரிக்கெட் உலகின் புதிய சகாப்தம் உதயமானது என்றே கூறலாம். அப்போது மும்பையின் ரஞ்சி அணிக்காக தேர்வு செய்யப்படுகிறார். அன்றைய காலகட்டம் முதல் இந்திய அளவிலான உள்ளூர் அணிகளில் சிறந்த அணியாக மும்பை இருந்து வருகிறது. அதுபோன்ற ஒரு அணியில் சிறிய வயதிலேயே தேர்வானாலும் அடுத்த இரு சீசன்களுக்கு அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. பின்னர் 1968/69 சீசனில் கர்நாடகத்துக்கு எதிரான ரஞ்சி போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார். ஆனால் அப்போட்டியில் டக்-அவுட்டாகி வெளியேறினார். இதனால் சிறு வயதிலேயே பெரும் நெருக்கடிக்கு உள்ளானார். ஏனெனில் தனது உறவினரும், இந்தியாவின் முன்னாள் விக்கெட் கீப்பருமான மாதவ் மந்த்ரியின் தயவில்தான் கவாஸ்கர் தேர்வானதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், வெகு விரைவில் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். உள்ளூர் போட்டிகளில் தொடர் சதங்களை விளாசியதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வானார். அதுவும் அன்றைய காலகட்டத்தில் மிகவும் வலிமையான அணியாக இருந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1970/71 நடைபெற்ற டெஸ்ட் தொடரில் களமிறங்கினார்.

அறிமுகமான அந்த முதல் தொடரிலேயே தன்னுடைய திறமையை நிரூபித்தார். வேகப்பந்துவீச்சை மிகவும் எளிதாக எதிர்கொண்டார். மிகவும் அற்புதமான பேட்டிங் திறனை கொண்டிருந்தார். இதனாலேயே இந்த தொடரில் பல உலக சாதனைகளையும் படைத்தார். அறிமுக தொடரின் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 4 சதங்களும், 3 அரைசதங்களும் விளாசி 774 ரன்கள் குவித்தார். அதில் அவருடைய பேட்டிங் சராசரி 154.80 ஆகும். அதிலும் அந்த தொடரில் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமும், 2-ஆவது இன்னிங்ஸில் இரட்டைச் சதமும் விளாசினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டக் வால்டருக்குப் பிறகு இந்த அரிய சாதனையைச் செய்த வீரராக சுனில் கவாஸ்கர் திகழ்கிறார். ஆனால் இந்த ஆட்டத்திறன் நீண்ட காலம் நிலைக்கவில்லை. மேசமான ஆட்டம் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்படுகிறார்.  

4 ஆண்டுகள் கடந்தது. உள்ளூர் போட்டிகளில் தன்னுடைய ஆட்டத்திறனை செம்மைப்படுத்திய கவாஸ்கர், 1975-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகிறார். இம்முறை நீக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தன்னுடைய பேட்டிங்கால் இந்திய அணி மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டையே தன்வசப்படுத்தினார். ஒருபுறம் மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ், அதிரடி ஆட்டத்துக்கு பெயர் பெற்றார். மற்றொரு புறம் நுணுக்கமான மற்றும் துல்லியமான பேட்டிங்குக்கு கவாஸ்கர் பிரபலமானார். அதிலும் அன்றைய காலகட்டத்தில் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளின் வேகப்பந்துவீச்சு பலரது தலையை பதம் பார்க்க, பாதுகாப்பு உபகரணமான தலைக்கவசம் அணியாமலேயே அனைத்து போட்டிகளிலும் விளையாடினார். இதுவே எதிரணி வீரர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. துவக்க வீரராக களமிறங்கிய கவாஸ்கர், ஆடுகளத்தின் தன்மை, பந்துவீச்சாளர்கள் என்று எதற்கும் அஞ்சாமல், தைரியமாக களமிறங்கி ரன்கள் குவிப்பதில் வல்லவர்.

இந்நிலையில், 1979-ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி உலக கிரிக்கெட்டில் இன்றளவும் முக்கிய ஆட்டமாக கருதப்படுகிறது. அது இந்திய கிரிக்கெட்டுக்கும் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 438 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. இதை எட்டுவதற்கு இந்திய அணிக்கு வெறும் 500 நிமிடங்கள் மட்டுமே நேரம் உள்ளது. 5-ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்த நிலையில் துவக்கியது. ஒருநாள் ஆட்டம் எஞ்சியிருக்க இந்தியா வெற்றிபெற 362 ரன்கள் தேவை. ஆனால் இந்திய அணியின் ரன் குவிக்கும் போக்கு மிகவும் மந்தமாக இருக்கிறது. இதற்கிடையில் 5-ஆம் நாள் ஆட்டம் துவங்கிய சில மணிநேரத்தில் சுனில் கவாஸ்கர், தனது விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்துக்கு கடும் சவால் அளித்து வந்த கவாஸ்கர், 221 ரன்கள் குவித்தபோது ஆட்டமிழந்தார். ஒரு வழியாக இந்தபப் போட்டி டிராவில் முடிந்தது. இத்தனைக்கும் இந்திய அணி வெற்றிபெற 9 ரன்கள் மட்டுமே தேவை. கவாஸ்கரின் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து அணி, போராடி இந்தியாவை கட்டுப்படுத்தி டிரா செய்தது. 

பின்னர் 1983-ஆம் ஆண்டு அந்த சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. எதிரணியோ மேற்கிந்திய தீவுகள், அந்த அணியிலோ உலக கிரிக்கெட்டை மிரட்டி வந்த வேகப்பந்துவீச்சாளர்களான மால்கம் மார்ஷல், ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கெல் ஹோல்டிங், வின்ஸ்டன் டேவிஸ் போன்றவர்கள் இருக்கின்றனர். எதிரணியில் இவர்கள் அனைவரும் இருந்தும், அந்த போட்டியின் கதாநாயகனாக சுனில் கவாஸ்கர் உயர்ந்து நின்றார். மொத்தம் 23 பவுண்டரிகளின் உதவியுடன் 236 ரன்கள் குவித்தார். டெஸ்ட் போட்டிகளில் இது அவருடைய அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. இதுமாதிரியான எழுச்சிமிக்க ஆட்டங்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றவர் என்கிற பெருமையும் கவாஸ்கரைச் சேரும்.

இதனிடையே 1974-ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணிக்கும் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்யப்பட்டார். 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தாலும் வெறும் ஒரேயொரு ஒருநாள் சதம் மட்டுமே அடித்துள்ளார். 4 உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள கவாஸ்கருக்கு, 1983 உலகக் கோப்பை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தது ஒருநாள் அரங்கில் முக்கிய தருணமாக அமைந்தது. மேலும் இந்திய அணியின் கேப்டனாக 1976-ல் முதல்முறையாக நியமிக்கப்பட்ட கவாஸ்கர், அதில் சிறப்பாக சோபிக்கவில்லை. மேலும் பலமுறை இந்திய அணியின் கேப்டனாக அவ்வப்போது நியமிக்கப்பட்டாலும், அதில் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. கடைசியாக 1985-ஆம் ஆண்டில் இந்திய கேப்டனாக செயல்பட்டார்.

1987-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுனில் கவாஸ்கர், 1980-ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்மபூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் அதே ஆண்டு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருதைப் பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் ஆவார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்களுடன் (சச்சின் டெண்டுல்கர் முறியடிக்கும் வரை டெஸ்ட் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச சதங்களாக இதுவே இருந்து வந்தது) 10,122 ரன்கள் குவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 13 சதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டியின் 4 இன்னிங்ஸ்களிலும் (வெற்வேறு தருணங்களில்) இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரர். மொத்தம் 233 சர்வதேசப் போட்டிகளில் 13,214 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இன்றி 100 கேட்சுகள் பிடித்த முதல் வீரர் ஆவார். 

2012-ஆம் ஆண்டு சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கௌரவித்தது. மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு பார்டர்-கவாஸ்கர் கோப்பை என்று அழைக்கப்படுகிறது. பிசிசிஐ தலைவர், ஐசிசி நடுவர், ஐசிசி தலைவர் ஆகிய பதவிகளில் சுனில் கவாஸ்கர் செயல்பட்டுள்ளார். தற்போது கிரிக்கெட் வல்லுநர் மற்றும் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர், இன்று தனது 69-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு நமது வாழ்த்துகளை தெரிவிப்போம்.

மேலும் புகைப்படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com