யார் நெ.4?: தீராப் பிரச்னைக்கு விடிவுகாலம் உண்டா? விராட் கோலி - சாஸ்திரி கூட்டணியின் திட்டம் என்ன?

ராகுலும் ஜாதவும் இந்திய அணியில் விளையாடும்போது அதன் பேட்டிங் மேலும் வலிமை பெறும். அந்த வாய்ப்பை இந்திய அணி இழக்கக்கூடாது... 
யார் நெ.4?: தீராப் பிரச்னைக்கு விடிவுகாலம் உண்டா? விராட் கோலி - சாஸ்திரி கூட்டணியின் திட்டம் என்ன?

நெ. 4. 

இந்த ஓர் இடம்தான் இந்திய ஒருநாள் அணியில் மீதமுள்ளது. மீதமுள்ள 10 இடங்களுக்கும் வீரர்கள் தயார் என்று கூறமுடியும்.

ஆனால் இந்த ஓர் இடத்துக்கான சரியான வீரரைத் தேர்வு செய்வதில்தான் இந்திய அணி தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இந்த ஜாடிக்கேற்ற மூடி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

2015 உலகக் கோப்பைக்குப் பிறகு, யுவ்ராஜ் சிங், ரெய்னாவின் தோல்விகளுக்குப் பிறகுதான் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் அடைந்தது. அதற்கு முன்பு இவ்விருவருமே மாறி மாறி அந்த இடத்தை ஆக்கிரமித்து வந்தார்கள். இதனால் பெரிய கவலைகள் ஏற்படவில்லை. 

2015 உலகக் கோப்பைக்குப் பிறகு நான்காம் நிலை வீரர்களாக தினேஷ் கார்த்திக், ரஹானே, யுவ்ராஜ், மணீஷ் பாண்டே, தோனி, பாண்டியா, ராகுல், திவாரி, ஜாதவ் ஆகிய வீரர்கள் விளையாடியுள்ளார்கள். இதில் ஒருவர்கூட அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை என்பதே நிஜம். 

இந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவை விட அந்த இடத்துக்கு அதிக வீரர்களைப் பயன்படுத்திய நாடு - ஜிம்பாப்வே. 12 பேர். மற்றபடி வேறெந்த நாடும் இந்திய அணி போல அந்த இடத்துக்கு அதிக வீரர்களைக் களமிறக்கவில்லை. 

நெ. 4-ம் நிலையில் விளையாடிய வீரர்கள் ரஹானே மட்டுமே அதிகமுறை விளையாடியுள்ளார். 10 ஆட்டங்களில் நான்காம் நிலை வீரராக விளையாடியுள்ளார் ரஹானே. எனினும் அவர்மீது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு நம்பிக்கை வரவில்லை.

ராகுல், ரஹானேவுக்குப் போதிய வாய்ப்புகள் தரவில்லை என்று ஆதங்கப்படுகிறார் கங்குலி. கோலி நான்காவதாகக் களமிறங்கவேண்டும் என்கிறார். ஆனால் கிரிக்கெட் நிபுணர் ஹர்ஷா போக்ளேவோ, தோனி நான்காவதாகக் களமிறங்கவேண்டும் என்கிறார். 

தினேஷ் கார்த்திக்குக்கு மேலும் சில வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்றும் ஆதரவுகள் கிளம்புகின்றன. அம்பட்டி ராயுடு மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் சிலர் கூறிவருகிறார். இதில் பின்நவீனத்துவச் சிந்தனையாக அஸ்வினை நான்காவதாகக் களமிறக்கவேண்டும் என்கிறார் கெளதம் கம்பீர். இந்தளவுக்கு இது இந்திய கிரிக்கெட்டில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

தற்காலிகத் தீர்வாக, கெதர் ஜாதவ் காயத்திலிருந்து மீண்டு வரும்போது இந்த சர்ச்சை ஓரளவு குறையும். வேண்டுமானாலும் தோனியை நான்காவதாகக் களமிறக்கி, ஜாதவ் அடுத்ததாக விளையாட வரலாம்.  ஆனால் நான்காவதாக விளையாட தோனி விருப்பம் தெரிவிப்பதில்லை என்பதுதான் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. 

எனினும் கே. எல். ராகுலை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாமல் இருக்கக்கூடாது, அவருக்காக கோலி தன் இடத்தைத் தியாகம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் கோலி மூன்றாவதாகக் களமிறங்கி சாதித்த விஷயங்களை இன்னொரு வீரரால் தாண்டிவிடமுடியுமா? இதனால் அவர் கீழே இறங்குவது அணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன. இதை ஒரேடியாக மறுக்கமுடியாது. அணியின் சிறந்த பேட்ஸ்மேனுக்கு அதிகப் பந்துகள் ஒதுக்குவதே நல்ல முடிவாக இருக்கமுடியும். விராட் கோலியும் சாஸ்திரியும் இனிமேலும் இந்த விஷயத்தில் தடுமாறாமல் இருக்கவேண்டும். இதனால் இதர வீரர்களுக்குப் போலி நம்பிக்கை அளிப்பதும் தடுக்கப்படும். 

ஐசிசி போட்டிகளில் ரோஹித் சர்மா, தவன் அதிகம் சாதித்துள்ளார்கள். எனவே அவர்களைப் பிரிக்க முடியாது. இந்நிலையில் கோலிதான் ராகுலுக்காக வழிவிடவேண்டும், இல்லாவிட்டால் நான்காவது நிலையில் விளையாட ராகுல் பழகவேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்னை மேலும் வளராமல் பார்த்துக்கொள்ளலாம். ராகுலும் ஜாதவும் இந்திய அணியில் விளையாடும்போது அதன் பேட்டிங் மேலும் வலிமை பெறும். அந்த வாய்ப்பை இந்திய அணி இழக்கக்கூடாது.

இந்த அணி சரியாக இருக்குமா எனப் பாருங்கள்.

ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, கே.எல். ராகுல், எம்.எஸ். தோனி, கெதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பூம்ரா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com