ஜடேஜாவால் தொடர்ந்து துன்புறும் சிஎஸ்கே! நடவடிக்கை எடுப்பாரா தோனி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜாவுக்குத் தொடர்ந்து வாய்ப்பு தரப்படுவது ஏன்?
ஜடேஜாவால் தொடர்ந்து துன்புறும் சிஎஸ்கே! நடவடிக்கை எடுப்பாரா தோனி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜாவுக்குத் தொடர்ந்து வாய்ப்பு தரப்படுவது ஏன்?

சிஎஸ்கே ரசிகர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி இது.

சிறந்த ஆல்ரவுண்டராக அறியப்பட்ட ஜடேஜா, இந்த வருட ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடி வருகிறார். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அவரால் அணிக்குப் பங்களிக்க முடியவில்லை. ஆனால் ஃபீலிங்கில் இதுவரை தன்னுடைய பங்களிப்பைச் செலுத்தி வந்த ஜடேஜா, நேற்று அதிலும் சொதப்பி அடுத்தடுத்த பந்துகளில் கேட்சுகளை நழுவவிட்டார். சென்னை அணி நேற்றைய ஆட்டத்தில் தோற்பதற்கு ஜடேஜாவின் இந்தத் தடுமாற்றங்கள் முக்கியக் காரணமாக அமைந்தன.

பேட்டிங்கில் பிராவோவுக்கு முன்பு களமிறக்கியபோதும் பந்துவீச்சில் கரண் சர்மாவை விடவும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டபோதும் ஜடேஜாவால் அணிக்குப் பெரிதாக உதவமுடியவில்லை. 

பேட்டிங்கில் 8 இன்னிங்ஸில் 59 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 115.68. 3 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் மட்டுமே அடித்துள்ளார். பின்வரிசையில் களமிறங்கும் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் ஜடேஜாவால் ஒருமுறை கூட அதுபோல விளையாட முடியவில்லை. இது சென்னை அணிக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பந்துவீச்சிலும் இதே கதைதான். 7 இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். 18 ஓவர்கள் வீசியதன் எகானமி - 8.55. ஆனால் இதுவரை நான்கு ஆட்டங்களில் இடம்பெற்றுள்ள கரண் சர்மா மொத்தமாக 5.3 ஓவர்கள்தான் வீசியுள்ளார். அதில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் தோனியின் தலைமைப்பண்பு குறித்து அதிக விமரிசனங்கள் எழுந்துள்ளன.

ஜடேஜா நேற்று ஃபீல்டிங்கிலும் கோட்டை விட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துக்கு அழுத்தம் அதிகமாகியுள்ளது. சென்னை அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் 10 வீரர்களுடன் களமிறங்கும் நிலை ஏற்படுகிறது. ஜடேஜாவால் அணிக்குப் பிரயோஜனமே இல்லை என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பதிவுகள் எழுதிவருகிறார்கள்.

இதனால் அடுத்த ஆட்டத்தில் ஜடேஜாவை அணியில் சேர்ப்பதா வேண்டாமா என்கிற நிலை உருவாகியுள்ளது. ஜடேஜாவுக்குப் பதிலாக துருவ் ஷோரே, ஜெகதீசன் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

என்ன செய்யப்போகிறார் தோனி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com