ஆண்டு தோறும் குறையும் பத்திரப் பதிவுகள்: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

தமிழகத்தில் சொத்து தொடர்பான ஆவணப் பதிவு உள்பட பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றன.  கடந்த நிதியாண்டில் (2015-16) 25 லட்சத்து 28,561 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அ

தமிழகத்தில் சொத்து தொடர்பான ஆவணப் பதிவு உள்பட பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றன.
 கடந்த நிதியாண்டில் (2015-16) 25 லட்சத்து 28,561 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம், ரூ.8,562.38 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக வணிக வரிகள்-பதிவுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-கடந்த 2004-05 ஆம் நிதியாண்டில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக, 17 லட்சத்து 61 ஆயிரத்து 696 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன் வழியாக, ரூ.1,881.53 கோடி வருவாய் ஈட்டப்படுள்ளது.
 இந்த ஆவணங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, 2011-12-ஆம் நிதியாண்டில், 35 லட்சத்து 18 ஆயிரத்து 453 ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் (2015-16) பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 28 ஆயிரத்து 561.
 நடப்பாண்டில் (2016-17) ஜூலை வரையிலான காலத்தில் மட்டும் 8 லட்சத்து 3 ஆயிரத்து 805 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 ஆவணங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வருவாயின் அளவு அதிகரித்தே வருகிறது. முத்திரைத் தாள், வழிகாட்டி மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் பதிவு செய்யப்படும் ஆவணங்களின் அளவு குறைந்தாலும் வருவாயில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை.
 கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில், வருவாயின் அளவு ரூ.8 ஆயிரத்து 279 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் ரூ.8,562.38-கோடியாக உயர்ந்துள்ளது.
 திருமணங்கள் பதிவு: இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் அந்தந்தச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 83 ஆயிரத்து 505 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், இந்துத் திருமண சட்டத்தின் கீழ், 74 ஆயிரத்து 789-ம், சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 332-ம் பதிவு செய்யப்பட்டன.
 கிறிஸ்துவ திருமணச் சட்டத்தின் கீழ் சான்றிட்ட நகல்கள் கோரி கடந்த ஆண்டில் 5 ஆயிரத்து 501 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
 வெள்ள பாதிப்பு: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. ஆவணங்களை இழந்தோருக்கு சான்றிட்ட நகல்கள் வழங்கப்பட்டன. இதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த முகாம்களில் 6 ஆயிரத்து 632 சான்
 றிட்ட நகல்கள் வழங்கப்பட்டன.
 சந்தை மதிப்பு வழிகாட்டி: தமிழகத்தில் 3.97 கோடி சர்வே எண்கள், 1.84 லட்சம் தெருக்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ழ்ங்ஞ்ண்ய்ங்ற்.ய்ங்ற்-இல் வெளியிடப்பட்டுள்ளன. சந்தை மதிப்பு வழிகாட்டியில் முரண்பாடுகள் ஏதுமிருப்பின் அவை மதிப்பீட்டுக் குழு, துணை மதிப்பீட்டுக் குழுக்களால் சரி செய்யப்படுகின்றன.
 இந்த வழிகாட்டி மதிப்பு சரியான முறையில் சந்தை மதிப்பை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் வகையில் தேவையான சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதிப்பீட்டுக் குழுவின் முடிவுகளின் அடிப்படையில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இதுவரை சந்தை மதிப்பு வழிகாட்டியின் திருத்தங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 சங்கங்கள் பதிவு: தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்களும் பதிவுத் துறையால் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 980 பதிவு பெற்ற சங்கங்கள் உள்ளன என்று கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 2004 முதல் பதிவான ஆவணங்கள்
 நிதியாண்டு வருவாய் (ரூ.கோடியில்) ஆவணங்கள் எண்ணிக்கை
 2004-05............... ரூ.1,881.53 ............................. 17,61,696
 2005-06............... ரூ.2,348.64 20,11,566
 2006-07............... ரூ.3,407.50 24,92,294
 2007-08............... ரூ.4,232.36 26,91,002
 2008-09............... ரூ.4,099.54 28,32,686
 2009-10............... ரூ.3,818.25 27,31,026
 2010-11............... ரூ.5,020.50 32,80,503
 2011-12............... ரூ.6,619.98 35,18,435
 2012-13............... ரூ.7,455.41 26,90,351
 2013-14............... ரூ. 8,05.74 26,53,291
 2014-15............... ரூ.8,279.64 25,73,931
 2015-16............... ரூ.8,562.38 25,28,561
 2016(ஜூலை வரை).. ரூ.2,732.80 8,03,805
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com