இன்று டோக்கன்; நாளை ரொக்கம்

வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பதற்காக வாடிக்கையாளர்களின் கூட்டம் தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் அலைமோதியது. இதனால், பல வங்கிக் கிளைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.
இன்று டோக்கன்; நாளை ரொக்கம்

வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பதற்காக வாடிக்கையாளர்களின் கூட்டம் தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் அலைமோதியது. இதனால், பல வங்கிக் கிளைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.
வங்கிக் கிளைகளில் கூட்டம் அதிகரித்ததால், வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு பிற்பகலிலோ அல்லது சனிக்கிழமையோ வரும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியமும், ஓய்வூதியமும் கடந்த 30-ஆம் தேதி வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன.
இந்த நிலையில், தனியார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் கடந்த 1-ஆம் தேதி முதல் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கும் வங்கிக் கணக்கிலேயே ஊதியம் செலுத்தப்பட்டதால் அதனை எடுப்பதற்காக வங்கிக் கிளைகளை நாடி வருகின்றனர்.
காலையிலேயே கூடுகின்றனர்: தனியார் துறைகளில் பணிபுரிவோரும், அரசு ஊழியர்களும் தங்களது ஊதியத்தை வங்கிக் கணக்குகளில் இருந்து எடுப்பதற்காக காலையிலேயே வங்கிகளில் குவிகின்றனர். இந்த நிலை வெள்ளிக்கிழமையும் நீடித்தது.
பெரும்பாலான வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்கள் காலையிலேயே வந்திருந்தனர். கிளைகள் திறப்பதற்கு முன்பே பூட்டப்பட்ட கதவுகளுக்கு முன் வந்து திரண்டிருந்தனர். இதனால், ஒவ்வொரு வங்கிக் கிளையும் பணியைத் தொடங்குவதற்கு முன்பே சுமார் 30 முதல் 40 வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.
பணம் தட்டுப்பாடு-டோக்கன்கள்: ரிசர்வ் வங்கி மூலம் மிகக் குறைந்த அளவே பணம் விநியோகம் செய்யப்படுவதால் வங்கிக் கிளைகளுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு கிளையிலும் ரூ.10,000 வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
பிற்பகலில் பணத்தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. பணம் வரப்பெற்றவுடன் அந்த டோக்கன்களின் அடிப்படையில் பணம் அளிக்கப்படுகிறது.
இது குறித்து, வங்கித் துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு-தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மாத ஊதியம் ஒவ்வொரு நாளில் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துள்ள நிலையில் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் அதிகளவு வந்து தங்களது ஊதியத்தை இப்போது எடுத்து வருகின்றனர். இந்த மாதம் முழுவதும் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை வீட்டு வாடகை போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கு பயன்படுத்தப்படும்.
இதன் பின்பு, அடுத்த வாரம் மீதமுள்ள மாத ஊதியத்தையும் எடுப்பதற்காக மக்கள் வங்கிக் கிளைகளுக்கு அதிகளவில் வருவர். இதனால், இந்த மாதம் முழுவதுமே வங்கிக் கிளைகளில் கூட்டம் இருக்கும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com