கடலூரில் போதிய மழை இல்லை: விவசாயிகள் ஏமாற்றம்

வலுவிழந்த நடா புயல், கடலூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவில் மழைப்பொழிவை அளிக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வலுவிழந்த நடா புயல், கடலூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவில் மழைப்பொழிவை அளிக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கணிசமானோர் வசிக்கும் கடலூர் மாவட்டமானது வடகிழக்குப் பருவ மழையை அதிகம் சார்ந்துள்ளது. வழக்கமாக அக்டோபர் கடைசி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் வடகிழக்குப் பருவ மழை, டிசம்பர் வரை நீடிக்கும். இந்த மழைதான் மாவட்டத்தின் விவசாயம், குடிநீர்த் தேவைக்கான சுமார் 70 சதவீத தண்ணீரை நிவர்த்தி செய்கிறது.
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அதிகமான மழைப்பொழிவை வழங்கியதோடு, கடும் சேதத்தையும் விளைவித்தது. எனவே, இந்த ஆண்டு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளைச் செய்திருந்தது. பருவமழைக் காலம் முடிவடைய உள்ள நிலையில், நடா புயலுக்கான எச்சரிக்கை அறிவிப்பு வெளியானது.
மழை இல்லாமல் ஏற்கெனவே பயிர்கள் காய்ந்துள்ள நிலையில், ஏரி, குளங்களில் போதிய தண்ணீர் இல்லாத சூழலில், நடா புயலால் மழைப்பொழிவு கூடுதலாக இருக்குமென விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, புயல் வலுவிழந்தது.
எனினும், 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தபோதும், மாவட்டத்தில் குறைந்த அளவிலான மழையே பெய்துள்ளது. இதனால் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், குடிநீர்த் தேவைக்காக ஏரி, குளங்கள் நிரம்பும் என காத்திருந்த மக்களும் கவலை அடைந்துள்ளனர்.
நடா புயலால் வியாழக்கிழமை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தபோதும், வழக்கத்தைவிட மிகவும் குறைவான அளவே பெய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை குறிப்பிடத்தகுந்த மழை இல்லை.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): சேத்தியாதோப்பு, கொத்தவாச்சேரி தலா 35, புவனகிரி, கீழச்செருவாய், தொழுதூர் தலா 27, மேல்மாத்தூர் 24, பரங்கிப்பேட்டை 22, பெலாந்துறை 20, லக்கூர், லால்பேட்டை தலா 19, கடலூர், வானமாதேவி, வேப்பூர் தலா 18, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தலா 17, அண்ணாமலைநகர் 16.70, குப்பநத்தம் 15.80, விருத்தாசலம் 14, ஸ்ரீமுஷ்ணம் 11, காட்டுமயிலூர் 9, பண்ருட்டி 7.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com