பேரவைக் குழுக்கள் அமைப்பு: சட்டப்பேரவைச் செயலகத்தில் திமுக மீண்டும் கோரிக்கை மனு

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் உதவியாளர் நியமனம், சட்டப்பேரவைக் குழுக்கள் அமைப்பது
பேரவைக் குழுக்கள் அமைப்பு: சட்டப்பேரவைச் செயலகத்தில் திமுக மீண்டும் கோரிக்கை மனு

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் உதவியாளர் நியமனம், சட்டப்பேரவைக் குழுக்கள் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரவைச் செயலகத்தில் திமுக சார்பில் மீண்டும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்கள் எ.வ.வேலு, பொன்முடி, சேகர்பாபு, கு.க.செல்வம் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்துக்கு திங்கள்கிழமை திடீரென வந்தனர்.
அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறையில் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு உள்ளிட்டோர் சட்டப்பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீனைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
எதிர்க்கட்சி தலைவருக்கு ஒதுக்கப்பட்ட உதவியாளரை அவசர கோலத்தில் இந்த அரசு ஏற்கனவே நீக்கியது. அதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உதவியாளரை நீக்கியது தவறு; உடனே அவரை எதிர்க்கட்சி தலைவருக்கு உதவியாளராக நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டு, ஒருமாத காலம் ஆகிறது. ஆனால், இதுவரையில் அந்த உதவியாளர் நியமிக்கப்படவில்லை. அதுகுறித்து கேட்பதற்காக வந்தோம். உதவியாளர் விரைவில் நியமிக்கப்படுவார் என உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவைக் குழுக்கள் அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, அதுகுறித்தும் நாங்கள் நீதிமன்றம் செல்வதற்குத் தயாராக இருக்கிறோம்.
வறட்சி பாதித்த மாநிலமாக: தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும். மேலும், விவசாயிகள் 35-க்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்திருக்கிறார்கள். அவர்களுக்குரிய நிவாரணத் தொகையை கொடுக்க வேண்டும். சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com