உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மாநில ஆளுநர், தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் மறுவரையறையை 2011-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி செய்யும்படி திமுக தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதே விவகாரம் தொடர்பாக ஆர்.ஜோதீஸ்வரனும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதில் திமுக சார்பில் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரஃபுல்லா சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, "2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகளை மறுவரையறை செய்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், அதற்குள்ளாக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உள்ளாட்சித் தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தவும், தேர்தல் பார்வையாளர்களாக மத்திய அரசு அதிகாரிகளை நியமிக்கவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார்.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி, "தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை இரு கட்டங்களாக நடத்துவதற்கான தேதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பல கட்சிகள், தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது' என்று வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரரின் (திமுக) கோரிக்கை நியாயமானது. தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்குத் தடை விதிக்க முடியாது. எனவே, இந்த மனுவுக்கு மாநில ஆளுநர், தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த மனுக்கள் மீதான அடுத்த விசாரணை அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும்' என்று குறிப்பிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com